under review

ஹெச். ராமகிருஷ்ணன்

From Tamil Wiki
ஹெச். ராமகிருஷ்ணன்
ஹெச். ராமகிருஷ்ணன்

ஹெச். ராமகிருஷ்ணன் (ஹரி ராமகிருஷ்ணன்; ஹரிஹரன் ராமகிருஷ்ணன்) (பிறப்பு: டிசம்பர் 25, 1941) எழுத்தாளர், ஊடகவியலாளர், இசைக் கலைஞர், வழக்குரைஞர். அகில இந்திய வானொலி மற்றும் சென்னைத் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகப் பணிபுரிந்தார். சென்னைத் தொலைக்காட்சியின் செய்திப் பிரிவு இயக்குநராகப் பணியாற்றினார். இந்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் மூத்த நிர்வாகப் பொறுப்பில் பணிபுரிந்தார். தமிழக அரசின் கலைமாமணி விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்றார்.

பிறப்பு, கல்வி

ஹெச். ராமகிருஷ்ணன், டிசம்பர் 25, 1941-ல், திருவனந்தபுரத்தில், ஹரிஹர ஐயர்-விஜயலட்சுமி இணையருக்குப் பிறந்தார். இரண்டரை வயதில் போலியோவால் பாதிக்கப்பட்டார். உள்ளூர் பள்ளியில் சேர்க்க மறுக்கப்பட்டதால் வேறு ஊரில் உள்ள பள்ளியில் சேர்க்கப்பட்டுக் கல்வி கற்றார். இயற்பியலில் இளம் அறிவியல் (B.Sc. Physics) பட்டம் பெற்றார். பொது நிர்வாகவியலில் முதுநிலைப் பட்டம் பெற்றார்.

சட்டக் கல்லூரியில் பயின்று வழக்குரைஞர் பட்டம் பெற்றார். பிபிசி நிறுவனத்தால் பரிந்துரைக்கப்பட்ட தாம்சன் அறக்கட்டளையின் டிவி நியூஸ் மேனேஜ்மென்ட் பயிற்சி திட்டத்தில் பங்கேற்றார். இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மாஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தில் நான்கு மாத காலப் பயிற்சி பெற்றார். தமிழ், ஆங்கிலம், மலையாளம், ஹிந்தி, ஜெர்மன் மொழிகள் அறிந்தவர்.

தனி வாழ்க்கை

ஹெச். ராமகிருஷ்ணன், யு.பி.எஸ்.சி. தேர்வில் தேர்ச்சி பெற்றார். ஊடகவியலாளராகப் பணியாற்றினார். மாற்றுத் திறனாளி என்பதால் பயணங்கள் முதல் பணியிடம் வரை பல்வேறு பிரச்சனைகளை, சிக்கல்களை எதிர்கொண்டார். இவரது பணிக்காலத்தில், இவரது மேலதிகாரி, இவரைப் பற்றிய ரகசிய அறிக்கையில் ’உடல் ரீதியான குறைபாடு உடையவர்' என்று குறிப்பிட்டிருந்தார். ராமகிருஷ்ணன் அப்போதைய குடியரசுத் தலைவர் வி.வி.கிரியைச் சந்தித்து முறையிட்டார். கிரி, மத்திய அரசுக்கு, ‘உடல் ஊனமுற்றவர்களின் உடல் ரீதியான குறையைப் பற்றி, கான்பிடன்ஷியல் ரிப்போர்ட்டில் குறிப்பிடக் கூடாது' என்று உத்தரவிடச் செய்தார். உடனடியாக அது நடைமுறைக்கு வந்தது. பஜாஜ் ஆட்டோ லிமிடெட், ராமகிருஷ்ணனுக்காக என்று தனியாகத் தயாரிக்கப்பட்டுப் பொருத்தப்பட்ட கை பிரேக்குடன் கூடிய ஆட்டோவை அளித்தது. மனைவி வசந்தா. நான்கு பிள்ளைகள்.

ஹெச். ராமகிருஷ்ணன் வானொலியில் செய்தி வாசிப்பாளராக...
இளையராஜாவுடன்...

ஊடகம்

ஹெச். ராமகிருஷ்ணன், அகில இந்திய வானொலியில் செய்தி வாசிப்பாளராகவும், மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றினார். வானொலி நாடகத்திற்குக் குரல் கொடுப்பவராக இருந்தார். சென்னைத் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகவும், செய்திப்பிரிவு இயக்குநராகவும் பணிபுரிந்தார். ராக்கெட் ஏவுதல் தொடங்கி பல அரசியல், கலை நிகழ்வுகளை நேர்முக வர்ணனை செய்து தொகுத்தளித்தார்.

ஹெச். ராமகிருஷ்ணன், தொலைக்காட்சி ஊடகத்தில் 26 ஆண்டுகள் பணிபுரிந்தார். இந்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தில் (Indian Information Service) மூத்த நிர்வாகப் பொறுப்பில் பணியாற்றினார். விளம்பரம் மற்றும் காட்சி விளம்பர இயக்குநரகத்தில் (Directorate of Advertising and Visual Publicity) மண்டல இயக்குநராகப் பணியாற்றினார். இந்தியன் வங்கியில் மூன்று ஆண்டுகள் மக்கள் தொடர்பு மேலாளராகப் பணிபுரிந்தார்.

ஜேப்பியார் குழும நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பணிபுரிந்தார். SS மியூசிக் சேனலின் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றினார். ஹெச். ராமகிருஷ்ணன், ஊடகத் துறையில் 44 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்டிருந்தார்.

திரைப்படம்

ஹெச். ராமகிருஷ்ணன், கே.பாலசந்தர் இயக்கிய ’வானமே எல்லை’ என்ற திரைப்படத்தில், ’உடல் குறைபாடு முயற்சிகளுக்கு ஒரு தடையல்ல’ என்பதைப் பார்வையாளர்களுக்கு உணர்த்தும் வகையில், தன்னம்பிக்கையூட்டும் ‘காந்திராமன்’ என்ற பாத்திரத்தில் நடித்தார்.

இதழியல்

ஹெச். ராமகிருஷ்ணன் தி இந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ், தினமணி, கல்கி, துக்ளக் போன்ற இதழ்களில் பல கட்டுரைகளை எழுதினார். நூல்கள் சிலவற்றை வெளியிட்டார்.

ராமகிருஷ்ணனின் இசைக் கச்சேரி (சுப்புடு கீ போர்டு வாசிக்கிறார்)

இசை வாழ்க்கை

ஹெச். ராமகிருஷ்ணன் முறையாக இசை கற்றவர். பழனி சுப்பிரமணியப் பிள்ளையிடமிருந்தும், காரைக்குடி மணியிடமிருந்தும் மிருதங்கம் வாசிக்க கற்றுக்கொண்டார். கஞ்சிரா வாசிக்க அறிந்திருந்தார். கொன்னக்கோல் முறையாகக் கற்றவர். திருவையாறு தியாகராஜ ஆராதனை விழாவில் கச்சேரி செய்தார். அகில இந்திய வானொலி மற்றும் பார்த்தசாரதி சபா உள்பட பல சபாக்களில் இசை நிகழ்ச்சிகளை வழங்கினார். இசை விமர்சகர் சுப்புடு, ஹெச். ராமகிருஷ்ணனின் கச்சேரி ஒன்றுக்கு கீ போர்டு வாசித்தார்.

ஹெச். ராமகிருஷ்ணன் இசை ஆல்பம்
ஹெச். ராமகிருஷ்ணனின் இசைக் கச்சேரிகள்
பிரதமர் பேச்சு மொழிபெயர்ப்பு

அமைப்புச் செயல்பாடுகள்

ஹெச். ராமகிருஷ்ணன், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் (இன்றைய பாரதப் பிரதமர்) நரேந்திர மோடியின் தேர்தல் பரப்புரையை தமிழில் மொழிபெயர்த்தார். அமெரிக்காவின் இல்லினாய்ஸ் பல்கலையில் இசைத் துறையில் 'தென்னிந்திய கர்நாடக இசை-ஒரு அறிமுகம்' என்ற தலைப்பில் விரிவுரையாற்றினார்.

பொறுப்புகள்

  • ஸ்ரீ பைரவி கான சபா செயலாளர்.
  • ஆரோஹானா இசை அமைப்பின் தலைவர்.
  • க்ருபா தொண்டு அறக்கட்டளை நிறுவனர்.
தமிழக அரசின் கலைமாமணி விருது

விருதுகள்

  • தமிழக அரசின் கலைமாமணி விருது.
  • கன்னட நடிகர் ராஜ்குமாரிடமிருந்து பெற்ற சாதனையாளருக்கான விருது.
  • வானமே எல்லை படத்தில் நடித்தற்காக சிறப்பு விருது

வரலாற்று இடம்

ஹெச். ராமகிருஷ்ணன், சென்னைத் தொலைக்காட்சியின் முன்னோடி செய்தி வாசிப்பாளர். தமிழ்த் தொலைக்காட்சிகளில், நேரடி அலைவரிசையில் செய்திகளை வழங்கிய முதல் செய்தியாளர். தொலைக்காட்சி நேர்காணல்களுக்குப் புதிய வடிவமளித்தார். இசைக் கலைஞர்கள், திரைக்கலைஞர்கள், அரசியல்வாதிகள் எனப் பலரை நேர்காணல் செய்தார். சென்னைத் தொலைக்காட்சியின் பார்வையாளர்கள் எண்ணிக்கையை அதிகரித்தத்தில் ஹெச். ராமகிருஷ்ணனுக்கு முக்கியப் பங்குண்டு. சென்னைத் தொலைக்காட்சியின் முன்னோடிச் செய்தியாளர்களுள் ஒருவராக ஹெச். ராமகிருஷ்ணன் அறியப்படுகிறார்.

உசாத்துணை


✅Finalised Page