under review

ஹரிஹரசுதன் தங்கவேலு

From Tamil Wiki
ஹரிஹரசுதன் தங்கவேலு (2023)

ஹரிஹரசுதன் தங்கவேலு (Hariharasuthan Thangavelu) (பிறப்பு: அக்டோபர் 15, 1985) அங்கீகரிக்கப்பட்ட ஹேக்கிங் நிபுணர், எழுத்தாளர், வசனகர்த்தா, இணைய மோசடிகளைக் கண்டறியும் தொழில்நுட்ப ஆய்வாளர். சமூக வலைதளங்களிலும், இதழ்களிலும் கதைகள், அறிவியல் விழிப்புணர்வுக் கட்டுரைகள் எழுதி வருகிறார். தமிழக அரசின் சிறந்த நூலுக்கான விருது போன்ற விருதுகளைப் பெற்றார். சுல்தான் (2021) திரைப்படத்தின் வசனகர்த்தா.

பிறப்பு, கல்வி

ஹரிஹரசுதன் தங்கவேலு அக்டோபர் 15, 1985 அன்று சத்தியமங்கலத்தில் தங்கவேலு, கனகம் இணையருக்கு மகனாகப் பிறந்தார். புஞ்சை புளியம்பட்டி கே.வி.கே அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வியையும், கோவை ஶ்ரீ ஜெயேந்திரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியல் இளநிலை வணிகமும், பாரதியார் பல்கலைக்கழகத்தில் முதுநிலை வணிகமும் பயின்றார். கணினித் துறையில் பயிற்சிகள் மேற்கொண்டு சர்வதேச மின்னணு வர்த்தக சபையால் அங்கீகரிக்கப்பட்ட ஹேக்கிங் துறையில் நிபுணத்துவம் பெற்றார்.

தனி வாழ்க்கை

ஹரிஹரசுதன் பணச்சலவை குற்றங்கள், தகவல் பாதுகாப்பு மற்றும் சைபர் மோசடிகளைக் கண்டறியும் நிபுணராகத் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றி வருகிறார். தமிழக அரசின் இணைய குற்றங்கள் வாரியத்தின் நடவடிக்கைகளில் தன்னார்வலராகப் பங்களிக்கிறார். பள்ளி, கல்லூரிகளில் செயற்கை நுண்ணறிவுப் பயிற்சிகளையும் நடத்தி வருகிறார்.

ஹரிஹரசுதன் தங்கவேலுவின் மனைவி ஐஸ்வர்யா நல்லமுத்து பேச்சு மற்றும் கேட்பியல் துறையில் மருத்துவராகவும், ஶ்ரீராமசந்திரா மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் இணைப் பேராசிரியரியராகவும் பணிபுரிகிறார். மகன் ஆர்யா; மகள் ஆராதனா.

எழுத்து

சென்னை, எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்தில் (2023)

2018-ம் ஆண்டு மின்னம்பலம் இணைய இதழில், நிழல் உலகத்தைச் சேர்ந்த ’தாவூத் இப்ராஹிம்’ பற்றி ஹரிஹரசுதன் எழுதிய கட்டுரைத்தொடர் வெளியானது.[1]

இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் (ISRO) வளர்ச்சியைப்பற்றிய ஹரிஹரசுதனின் ‘எங்கள் கனா’ என்ற கட்டுரைத்தொகுப்பு, 2019-ம் ஆண்டு அமேசான் இந்தியா நடத்திய எழுத்தாளர்களுக்கான (Pen to Publish) போட்டியில் கிண்டில் பதிப்பாக (Kindle Version) வெளியாகி வரவேற்பைப் பெற்றது. 2021-ம் ஆண்டு 'இஸ்ரோவின் கதை’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டு கிழக்கு பதிப்பகத்தின் மூலம் அச்சுப்பிரதியாக வெளியானது. 'இந்து தமிழ் திசை’ நாளிதழின் கவனிக்க வேண்டிய ஐந்து புத்தகங்கள் பட்டியலில் இந்நூல் இடம் பெற்றது.[2]

ஹரிஹரசுதன் இணைய வெளியில் சிறார் பாதுகாப்பு மற்றும் பெண்களுக்கான தற்காப்பு மற்றும் சைபர் விழிப்புணர்வு குறித்த கட்டுரைகளை எழுதி வருகிறார்

ஹரிஹரசுதன் செயற்கை நுண்ணறிவு (Artificial intelligence) தொழில்நுட்பம் குறித்து 2023-ம் ஆண்டு குமுதம் வார இதழில் முப்பது வாரமாக எழுதிய 'A.I எனும் ஏழாம் அறிவு‘ கட்டுரைத்தொடர், 2024-ம் ஆண்டு புத்தகத்திருவிழாவையொட்டி வெளியாகி கவனத்தைப் பெற்றது.[3]

சைபர் க்ரைம் அமைப்பின் SP திருமதி. சண்முகப்பிரியா IPS, மற்றும் சென்னை காவல் துணை ஆய்வாளர் யாசர் அவர்களுடன் ஹரிஹரசுதன் தங்கவேலு

இவர் தற்போது ஆனந்த விகடன் வார இதழில் ‘இருள் வலை வில்லன்கள்’ என்ற பெயரில் தொலைதொடர்பு சாதனங்கள் வழியே நிகழும் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு கட்டுரைத்தொடர்களை எழுதி வருகிறார்.[4]

விருதுகள்

  • 2018 - சேக்கிழார் தமிழ் விருது
  • 2021 - தமிழக அரசின் சிறந்த தொழில்நுட்பவியல் நூல் விருது - 'இஸ்ரோவின் கதை’ (2024-ம் ஆண்டு பெற்றது)

நூல் பட்டியல்

திரை எழுத்து
  • சுல்தான் (2021) - வசனம்
கட்டுரைத் தொடர்கள்
அறிவியல் அபுனைவு
  • 2021 - இஸ்ரோவின் கதை - கிழக்கு பதிப்பகம்
  • 2023 - A.I எனும் ஏழாம் அறிவு - ஜீரோ டிகிரி பதிப்பகம்

இணைப்புகள்

அடிக்குறிப்புகள்


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 16-Aug-2024, 21:14:15 IST