under review

ஸ்ரீநிவாஸநல்லூர் குரங்கநாதர் கோயில்

From Tamil Wiki
ஸ்ரீநிவாசநல்லூர் குரங்கநாதர் கோயில் - முழுத்தோற்றம்
ஸ்ரீநிவாசநல்லூர் குரங்கநாதர் கோயில் - முகப்பு தோற்றம்
ஸ்ரீநிவாசநல்லூர் குரங்கநாதர் கோயில் - பக்கவாட்டு தோற்றம்
தக்ஷிணாமூர்த்தி கோஷ்ட சிற்பம்
குரங்கநாதர் கருவறை
மகர தோரணம்
பிரம்மா கோஷ்ட சிற்பம்
கஜசம்ஹாரர்
பிச்சாண்டவர் கோஷ்ட சிற்பம்
சதுர தாண்டவ சிவன்

ஸ்ரீநிவாஸநல்லூர் குரங்கநாதர் கோயில் தமிழ்நாட்டில் திருச்சி மாவட்டத்தில் உள்ள சைவ ஆலயம். முற்கால சோழர் கலைப்பாணியில் அமைந்துள்ளது.

இடம்

ஸ்ரீநிவாஸநல்லூர் குரங்கநாதர் கோயில் திருச்சியிலிருந்து நாமக்கல் செல்லும் வழியில் முசிறியில் இருந்து 9 கிலோமீட்டர் மேற்கிலும், திருச்சியிலிருந்து 51 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. ஸ்ரீநிவாசநல்லூர், ஸ்ரீனிவாஸநல்லூர் என்றும் ஊர்ப்பெயர் எழுதப்படுகிறது.

கோவில் வரலாறு, பெயர்

ஸ்ரீநிவாஸநல்லூர் குரங்கநாதர் கோயில் கோவில் பற்றிய முதன்மையான வரலாற்று செய்திகள் வரலாற்றாய்வாளர் எஸ்.ஆர். பாலசுப்ரமண்யம் எழுதிய 'Early Chola Art' என்ற நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. குடவாயில் பாலசுப்ரமணியன் எழுதிய ஸ்ரீநிவாஸநல்லூர் குரங்கநாதர் கோயில் என்ற கட்டுரையிலும் இக்கோயில் பற்றிய செய்திகள் உள்ளன.

ஸ்ரீநிவாஸநல்லூர் பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்மன் ஆட்சியின் கீழ் இருந்ததால் மகேந்திரமங்கலம் என்ற மற்றொரு பெயர் வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஸ்ரீனிவாசநல்லூரில் சோழர் காலத்தவையாக ஐந்து கோயில்கள் உள்ளன. குரங்கநாதர் கோயில், பட்டாபிராமன் கோயில் உள்ள விஸ்வநாதர் கோயில், ஸ்ரீ லட்சுமிநாராயண பெருமாள் கோயில், ஸ்ரீராமநாத சாமி கோயில் மற்றும் தனித்த அம்மன் கோயில் ஆகியவை.

இக்கோயிலை ஒன்பதாம் நூற்றாண்டில் முதலாம் ஆதித்த சோழன் காலத்தில் கற்றளியாக எடுப்பிக்கப்பட்டது. பின்னர் முதலாம் பராந்தகன் காலத்தில் (பொயு 907 - 955) புனரமைக்கப்பட்டுள்ளது.

தொன்மங்கள்

சிவ பக்தனாக விளங்கிய வாலியை தலைவன் பூஜித்த தலமாக இருந்திருக்க வேண்டுமென்று குடவாயில் பாலசுப்ரமணியன் கருதுகிறார். இக்கோயில் ஒரு சன்யாசியால் கட்டப்பட்டு குடமுழுக்கு தினத்தன்று விமானத்தின் மீது ஒரு குரங்கு அமர்ந்திருக்க அதனை தீய சகுணமாக நம்பி குடமுழுக்கு கைவிடப்பட்டதாக ஒரு தொன்ம கதை கூறப்படுகிறது.

ஆனால் இக்கோயிலில் உள்ள கல்வெட்டு குறிப்புகள் முதலாம் ஆதித்த சோழன் காலத்திலிருந்து முதலாம் குலோத்துங்க சோழன் காலம் வரையில் இக்கோயிலில் வழிபாடு நிகழ்ந்ததை கூறுகிறது. பிற்காலத்தில் கோயில் வழிபாட்டிலிருந்து கைவிடப்பட்டதற்கான காரணமாக இக்கதை அமைந்திருக்க கூடும் என்று கருதப்படுகிறது.

மூலவர்

குரங்கநாதர் என்பது தற்போது வழங்கிவரும் பெயர். மூலவர் ஈசனை 'பிரம்மதேயமான மகேந்திரமங்கலத்து திருக்குரக்குத்துறை பெருமானடிகள்' என்று கல்வெட்டு குறிக்கின்றது. கருவறையில் தற்போது சூரியன் சிற்பம் இரண்டு கரங்களிலும் தாமரை மலரை ஏந்திய நிலையில் சமபாத ஸ்தானகத்தில் காணப்படுகின்றது. கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, பிரம்மன் சிலைகள் காணப்படுகின்றன.

கோவில் கட்டிடக்கலை அமைப்பு

முற்கால சோழர் கலை பாணியில் அமைந்துள்ளது. முழுவதும் கருங்கற்களால் கட்டப்பட்டுள்ளது.

இக்கோவில் கருவறை, அர்த்தமண்டபம், மற்றும் மகாமண்டத்துடன் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கருவறை 3.81 மீட்டர் பக்க அளவு கொண்ட சதுர வடிவமாக உள்ளது. கருவறைக்கு மேல் நாகர பாணி விமானம் அமைந்துள்ளது. மையக் கட்டுமானத்தைச் சுற்றி கருங்கல் பதிக்கப்பட்ட தளம் உள்ளது.

கோவிலை சுற்றி திருச்சுற்று மதில் இல்லை.

மண்டபங்களில் உள்ள தூண்கள் சதுரம், கட்டு, கண்டம், ஆமலகம் மற்றும் பலகை கொண்டது.

கருவறை

சதுரமான கருவறை சந்தார அமைப்பில் உள்ளது. உள்ளே 2.44 மீட்டர் பக்க அளவு கொண்ட சதுரமாகவும், வெளிச் சுற்று 8.13 மீட்டர் சதுரமாகவும் உள்ளது. 1.32 மீட்டர் உள்ள அந்தராளத்தை தொடர்ந்து அர்த்தமண்டபம் உள்ளது. கருவறையில் தற்போது இரண்டு கரங்களிலும் தாமரை ஏந்திய சூரியன் சிலை நிறுவப்பட்டுள்ளது.

கருவறையை சுற்றி மூன்று தேவ கோஷ்டங்களும், ஆறு சிறிய கோஷ்டங்களும் உள்ளன.

அர்த்த மண்டபம்

எட்டு பட்டை கொண்ட இரண்டு முழுத்தூண்களும் இரண்டு அரைத்தூண்களும் உள்ளன. மகாமண்டபத்தில் எட்டு பட்டை கொண்ட இரண்டு முழுத்தூண்களும் இரண்டு அரைத்தூண்களும் உள்ளன. சலீலாந்தரத்தில் கும்ப பஞ்சரம் காணப்படுகிறது. இரண்டு துவாரபாலகர்கள் இருந்து பின்னாளில் அகற்றப்பட்டிருக்கலாம் என்றும் அந்தராளத்தின் இருபுறமும் துர்கை மற்றும் கணபதி சிலைகள் இருந்திருக்கலாம் என்றும் ஆய்வாளர் S R பாலசுப்ரமணியம் கருதுகிறார்.

மகாமண்டபம்

மகாமண்டபத்தின் பக்கச்சுவர்களில் இரண்டு சிறிய கோஷ்டங்கள் உள்ளன. இவற்றில் சாமரம் வீசுவோர், அப்சரஸ்களின் சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன.

அணிவாயில்

மகாமண்டப அணிவாயில் 2 சாகைகள் கொண்ட அணிவாயில், ஸ்தம்ப சாகையும், பத்ர சாகையும் காணப்படுகின்றன. இருபுறமும் அன்னவால் கருக்கு அமைந்துள்ளது.

விமானம்

கோயில் கட்டப்பட்ட போது கல்லாலான விமானம் அமைந்திருக்கவேண்டும். பின் சிதைவுற்று தற்போது சுதையாலான த்விதள நாகர விமானம் அமைந்துள்ளது, முதல் நிலையில் சாலைகளும், நான்கு கர்ண கூடங்களும் அமைந்துள்ளன. இரண்டாம் நிலையில் க்ரீவமும் சிகரமும் காணப்படுகின்றன.

அதிஷ்டானம்

5 அடி 2 அங்குலம் உள்ள அதிஷ்டானத்தில் குமுதமும் யாளவரியும் உள்ளது. வப்ர பந்த அதிஷ்டானம் கொண்ட கோயில்.

பாத வர்க்கம்

கருவறையின் அதிஷ்டானத்திற்கு மேல் உள்ள பாதவர்க்க பகுதியில் அரைத்தூண்களும் (குட்யஸ்தம்பம்) கோஷ்டங்களும் உள்ளன. அரைத்தூண்கள் கலசம், தாடி, ஆமலகம், பலகை மற்றும் இதழுடன் காணப்படுகின்றன.

கோஷ்ட சிற்பங்கள்

தெற்கு கோஷ்டம்

தெற்கு கோஷ்டத்தில் வீராசனத்தில் அமர்ந்த தட்சிணாமூர்த்தி சிற்பம் உள்ளது. ஜடாபாரமும் அதில் மலரும், பிரம்மகபாலமும் கொண்ட தட்சிணாமூர்த்தியின் காலடியில் முயலகனும், மானும், நாகமும் உள்ளன. வலக்காதில் பத்ரகுண்டலமும் இடக்காதில் குழையும் உள்ளன. பின் வல கரத்தில் அட்ச மாலையும், பின் இட கரத்தில் அனலும் உள்ளன. சிதைந்த நிலையில் உள்ள முன்னிரு கரங்களில் வியாக்யான ஹஸ்தமும், ஏடும் இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இரண்டு சனகாதி முனிவர்கள் காட்டப்பட்டுள்ளனர். சிற்பத்திற்கு இடது புறம் இரண்டு உறங்கும் சிம்மங்களும், கின்னரர்களும் உள்ளனர். வலது புறம் இரண்டு சிம்மங்களும் கர்ணாபிராதர்களும் (காதுபொத்தர்கள்) உள்ளனர்.

மகர தோரணத்தில் இரண்டு அரக்கர்களை வேல் கொண்டு தாக்கும் தேவியின் சிற்பம் உள்ளது. தேவியைச் சுற்றி எட்டு சிம்மங்களில் அமர்ந்த வீரர்களும் நான்கு பூத கணங்களும் உள்ளன. தட்சிணாமூர்த்தி சிற்பத்தின் மேல் உள்ள ஆலமரத்தில் அணிலும், பொந்தில் ஆந்தையும், பொக்கணம் விபூதி பையும் காணப்படுகின்றன.

கோஷ்டத்தை ஒட்டிய குட்டியஸ்தம்பங்கள் மற்றும் பலகைகள் மிகுந்த வேலைப்பாடுகளுடன் அமைந்துள்ளன. கோஷ்டத்திற்கு இருபுறமும் உள்ள சிறிய கோஷ்டத்திலும் அடியவர்களின் சிற்பம் காணப்படுகிறது.

மேற்கு கோஷ்டம்

மேற்கு கோஷ்டத்தில் தற்போது சிற்பம் இல்லை. அர்த்தநாரிஸ்வரர் சிலை இருந்து பின்னாளில் அகற்றப்பட்டிருக்கலாம் என்று ஆய்வாளர் குடவாயில் பாலசுப்ரமணியம் கருதுகிறார். மகர தோரணத்தில் லட்சுமி வராகர் இருப்பதால் கோஷ்டத்தில் விஷ்ணுவின் ரூபம் இருந்திருக்கலாம் என்று S R பாலசுப்ரமணியம் கருதுகிறார். இருபுறமும் உள்ள சிறிய கோஷ்டத்தில் ஒரு கையில் சாமரமும் மறு கை ஊரு ஹஸ்தத்தில் வைத்தபடி கங்கை யமுனை தேவியரும் உள்ளனர். கோஷ்டத்திற்கு மேல் உள்ள மகர தோரணத்தில் லக்ஷ்மி வராகரும், ரிஷபமும் பூதகணங்களும் காணப்படுகின்றன. தோரணத்தின் வலது கீழ் மூலையில் நந்திதேவர் காணப்படுகிறார். தோரணத்தில் உள்ள கீர்த்தி முகத்தை சுற்றியும் சிம்மத்தில் போர் வீரர்கள் உள்ளனர்.

வடக்கு கோஷ்டம்

வடக்கு கோஷ்டத்தில் சமபாத ஸ்தானகத்தில் பிரம்மா சிற்பம் உள்ளது. பின் வலக்கரத்தில் அட்சமாலையும் இடது பின் கரத்தில் தாமரையும் இடது முன் கரம் ஊரு ஹஸ்தமும் வலது முன் கரம் சிதைந்தும் உள்ளது. இரு புறமும் உள்ள சிறிய கோஷ்டத்தில் அடியவர்கள் சிற்பங்கள் உள்ளன.

சிற்பங்கள்

ஸ்ரீநிவாஸநல்லூர் குரங்கநாதர் கோயிலில் சூரியன், தட்சிணாமூர்த்தி, கங்கை யமுனை தேவியர், கஜசம்ஹாரர், சந்தியா தாண்டவர், அர்தநாரிஸ்வரர், பிரம்மன் சிற்பங்கள் உள்ளன.

கல்வெட்டுகள்

தொல்லியல் துறை வெளியீடுகள்
  • Annual Report on Indian Epigraphy (ARIE) 1904, ASI: வரிசை எண்கள் 586 முதல் 610 வரை
  • Annual Report on Indian Epigraphy (ARIE) 1965-1966 வரை, ASI: வரிசை எண்கள் 319 முதல் 334 வரை
கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ள அரசர்கள்

ஸ்ரீநிவாஸநல்லூர் குரங்கநாதர் கோயில் கல்வெட்டுகளில் முதலாம் ஆதித்த சோழன், பராந்தக சோழன், கண்டராதித்தர், உத்தமசோழன் ஆகிய அரசர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

முக்கிய வரலாற்று தகவல்கள்

அறக்கட்டளைகள்

ஸ்ரீநிவாஸநல்லூர் குரங்கநாதர் கோயில் கல்வெட்டுகளில் அரசு அலுவலராக அரையர் ஆச்சாரக்காந்த பிரம்மாதிராஜர் குரக்குத்துறை இறைவனுக்கு 8 அறக்கட்டளைகளுக்காக அளிக்கப் பெற்ற நிலங்கள் குறித்த கல்வெட்டுகளை கோயிலில் இடம்பெறச்செய்யுமாறு மூலப்பருடையாருக்கு (பிரம்மதேயங்களை நிர்வாகம் செய்த ஊரவை) அறிவுறுத்தினார் என்ற செய்தி அறியமுடிகிறது.

நாடு, ஊர்

ஸ்ரீநிவாஸநல்லூர் குரங்கநாதர் கோயில் கல்வெட்டுகளில் கிழார்க்கூற்றம், ஆன்மூர்க்கூற்றம், மீமலைநாடு, தென்கரை குறுநாகநாடு என்னும் வருவாய் பேரமைப்புகள் குறிக்கப்பட்டுள்ளன.

மகளிர்

ஸ்ரீநிவாஸநல்லூர் குரங்கநாதர் கோயில் கல்வெட்டுகள் வழி முற்சோழர் காலத்து பிராமண பெண்கள் அவர்களுக்கான உணவு, உடைகள் தடையின்றி பெற வாய்ப்பாக தங்கள் உரிமையில் நிலம் பெற்றிருந்ததோடு அவற்றை விருப்பம் போல் விற்கவும் கொடையளிக்கவும் உரிமை பெற்றிருந்தனர் என்பதை அறியமுடிகிறது.

வரிகள் அளவைகள்

ஸ்ரீநிவாஸநல்லூர் குரங்கநாதர் கோயில் கல்வெட்டுகளில் இறை, எச்சோறு, வெட்டி, செந்நீர்வெட்டி, வேதினை, ஊரிடுவரி என்ற நிலம்-சார்ந்து கொள்ளப்பட்ட வரிகள் குறிக்கப்பட்டுள்ளன.

இசைக்கலைஞர்கள்

ஸ்ரீநிவாஸநல்லூர் குரங்கநாதர் கோயில் கல்வெட்டுகளில் கோயில் வழிபாடுகளின்போது இசைக்க ஒன்பது உவச்சர்கள் என்ற கருவிக்கலைஞர்கள் ஒன்பதின்மர் இருந்தனர். மூவர் மத்தளம் இசைக்க, இருவர் காளம் ஊத, கரடிகை, படகம் வாசிக்க இருவர் இருந்தனர். கேசகண்டிகை வாசிக்க ஒருவரும், ஓரணை தாளம் கொண்டு ஒலியெழுப்ப ஒருவரும் இருந்த செய்திகள் குறிக்கப்பட்டுள்ளன.

நந்தாவிளக்குகள்

ஸ்ரீநிவாஸநல்லூர் குரங்கநாதர் கோயில் கல்வெட்டுகளில் 4 நந்தா விளக்குகள் ஏற்றப்பட்ட சான்றுகள் உள்ளன.

பிற விளக்குகள்

ஸ்ரீநிவாஸநல்லூர் குரங்கநாதர் கோயில் கல்வெட்டுகளில் நாளும் 18 சந்திவிளக்குகள் உழக்கு ஆழாக்கு எண்ணெய் கொண்டு ஏற்றப்பட்ட சான்றுகள் உள்ளன.

== தொடர்புடைய ஆளுமைகள் ==*ஸ்ரீநிவாஸநல்லூர் குரங்கநாதர் கோயில் கல்வெட்டுகளின் வாயிலாக கோயிலை கட்டி திருப்பணிகள் செய்த அரச ஆளுமைகளாக முதலாம் ஆதித்த சோழனும், முதலாம் பராந்தக சோழனும் அறியப்படுகின்றனர்.

  • ஸ்ரீநிவாஸநல்லூர் குரங்கநாதர் கோயில் பற்றி நவீன காலகட்டத்தில் வரலாற்றாய்வுகளை தொகுத்தவர்கள் எஸ்.ஆர். பாலசுப்ரமண்யம், குடவாயில் பாலசுப்ரமணியன்.

உசாத்துணை

  • Early Chola art - SR Balasubramaniam, P 100-103
  • பனை உறை தெய்வம் - குடவாயில் பாலசுப்ரமணியம், ஸ்ரீனிவாசநல்லூர் குரங்கநாதர் கோயில் கட்டுரை. P 56-60
  • சிராப்பள்ளி மாவட்ட சோழர் தளிகள் ஏழு - அர.அகிலாமு.நளினி, இரா.கலைக்கோவன், PP 44-77


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 19-Mar-2026, 18:30:28 IST