under review

வைத்தீஸ்வரன் கோயில் சுப்பராமையர்

From Tamil Wiki

வைத்தீஸ்வரன் கோயில் சுப்பராமையர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் முதற்பாதியில் வாழ்ந்த கர்னாடக இசைக் கலைஞர். வைத்தீஸ்வரன் கோயில் முத்துக்குமார சுவாமி மீது பதங்கள் பாடிப் புகழ் பெற்றவர்.

இசைப்பணி

சுப்பராமையர் 76 பதங்கள் இயற்றியிருக்கிறார். இவருடைய பதங்கள் நாயக - நாயகி பாவத்தில் அமைக்கப்பட்டு சிருங்கார ரசம் மிகுந்தவை.

பதங்களில் கௌரவப் பதங்கள்(அகத்துறை), காமப் பதங்கள்(காமத்துறை) என இருவகைகள் உண்டு. தமிழ் இலக்கிய இலக்கண மரபில் தலைவி தன் காதலையும் விரகத்தையும் தோழியிடம் கூட ஓரளவுதான் வெளிப்படுத்துவது போல அமைக்கப்படும். தோழியும், அன்னையரும் அதை உணர்ந்து செயல்படுவார்கள். இதுபோன்ற அகத்துறை சார்ந்த பாடல்கள் கௌரவப் பதங்கள். காமப்பதங்கள் முற்றிலும் காமம் சார்ந்தவை, நாயக்க ஆட்சி காலத்தில் தெலுங்கில் பதங்களில் இந்த வகையான கொச்சையான காமப் பாடல்கள் வரத் துவங்கியதும் தமிழிலும் அதன் தாக்கம் தொடங்கியது. சுப்பராமையர் இத்தகைய காமத்துறை சார்ந்த பதங்களை அதிகம் எழுதியவர்.

சுப்பராமையருடைய பதங்கள் நாட்டிய அபிநயத்துக்கு ஏற்றவாறு அமைக்கப்பட்டவை. காம்போதி, அடானா, கல்யாணி, சுருட்டி, தோடி, தன்யாசி முதலான ரக்தி ராகங்களில் பல பதங்களை எழுதியிருக்கிறார். இவருடைய பாடல்களில் ராகபாவம் நன்கு வெளிப்படும். தெலுங்கு கீர்த்தனைகள் மேலோங்கிய காலகட்டத்தில் தமிழில் பல பதங்கள் இயற்றியவர் சுப்பராமையர்.

இவர் இயற்றிய பதங்களில் ஒன்று:

ராகம்: சாரங்கா, அடதாளம்
பல்லவி:
கையில் பணமில்லாமல் கலவி செய்ய வந்தீரோ
கடனானால் எழுந்திரும் சுவாமி (கையில்)
அனுபல்லவி:
ஐயரே தென்பழனி அழகுக் குமரேசரே
அம்மான் மகளானாலும் சும்மா வரப்போறாளோ (கையில்)

இது தாசிவீட்டு நிகழ்வை பாடும் பாடல். இதுபோன்ற பல பதங்களை இயற்றியிருக்கிறார். இந்தப் பதங்கள் பலமுறை குஜிலிப் பதிப்பாக வெளிவந்திருக்கிறது.

உசாத்துணை


✅Finalised Page