under review

வே. பதுமனார்

From Tamil Wiki
வே. பதுமனார் படம் (நன்றி: மு.இளங்கோவன்)

வே. பதுமனார் (பிறப்பு: ஏப்ரல் 02, 1936) தமிழறிஞர். தமிழ் கல்வியை வெகுமக்களிடம் கொண்டு சேர்க்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

பிறப்பு, கல்வி

வே. பதுமனாரின் இயற்பெயர் வே. பத்பநாபன். வே. பதுமனார் ஏப்ரல் 02, 1936-ம் ஆண்டு குடியேற்றத்தில்(குடியாத்தம்) சாமி. கு. வேலாயுதம் - இராசம்மாள் இணையருக்கு மகனாக பிறந்தார்.

வே. பதுமனார் தொடக்கக் கல்வியைக் குடியேற்றம் நகராட்சி தொடக்கப் பள்ளியிலும் உயர்நிலைக் கல்வியைக் கல்வியை குடியேற்றம் நகராட்சி உயர்நிலை பள்ளியிலும் பயின்றார். வாணியம்பாடி இசுலாமியக் கல்லூரியில் இடைநிலைக் கல்வியையும் ஆசிரியர் பயிற்சியை ஆர்க்காடு அரசு ஆசிரியர் பியிற்சி பள்ளியிலும் பயின்றார். பின்னர் சென்னைப் பல்கலைகழகத்தில் பயின்று தமிழ் வித்துவான், முதுகலை பட்டங்கள் பெற்றார். அண்ணாமலைப் பல்கலைகழகத்தில் பயின்று கல்வியியல் இளையர்(B.Ed) பட்டம் பெற்றார்.

தனிவாழ்க்கை

வே. பதுமனார் 1961 முதல் 1994 வரை 33 ஆண்டுகள் குடியேற்றம் திருவள்ளுவர் தொடக்க, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் இடைநிலை ஆசிரியராகவும் தமிழாசிரியராகவும் முதுகலை தமிழாசிரியராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றார். வே. பதுமனார் ஆகஸ்ட் 08, 1964 ஆன்று ஜெயக்கொடியை மணந்தார். பொற்கொடி, பவளக்கொடி என இரு மகள்களும் விசுவநாதன் என்ற மகனும் உள்ளனர். பொற்கொடி இளநிலைப் பொறியாளராகவும் பவளக்கொடி தமிழாசிரியராகவும் விசுவநாதன் முதுநிலைப் பொறியாளாராக இந்து ஆங்கில நாளேட்டிலும் பணியாற்றுகின்றனர்.

தமிழ் பணிகள்

வே. பதுமனார் ஆசிரியர் பணி செய்து கொண்டே பல்வேறு நூல்களையும் கட்டுரைகளையும் எழுதினார். சிறப்பு மலர்களை வெளியிட்டார். வள்ளுவர் வழிநடப்போம்(1998), வெட்டுவானம் திரு. வி. க. நூற்றாண்டு விழா மலர்(1999), இந்தியக் குடியரசு பொன்விழா மலர்(2000), திருவள்ளுவர் மேல்நிலைப்பள்ளி பொன்விழா மலர் (2002), வி.ஐ.டி.வேந்தர் விசுவநாதனின் கல்வியின் மேலாண்மை (2007), குடியேற்றம் வள்ளலார் பள்ளிப் பவளவிழா மலர்(2010), மு. வ. நூற்றாண்டு விழா மலர் (2013), கல்விக்கோ கோ. விசுவநாதனின் முத்துவிழா மலர் (2018), கல்விக்கோ கோ. விசுவநாதனின் முத்துவிழாக் கவிமலர் (2018), குடியேற்றம் முத்தமிழ்ச் சுவைச்சுற்றம் அறக்கட்டளை வெள்ளிவிழா மலர் (2022) முதலிய மலர்களை வெளியிட்டுத் தமிழக வரலாற்றின் சில பக்கங்களை ஆவணப்படுத்தியுள்ளார்.

அமைப்புப் பணிகள்

வே. பதுமனார் "முத்தமிழ் சுவை சுற்றம்" என்னும் இலக்கிய அமைப்பை நிறுவி கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக குடியேற்றம் பகுதியில் தமிழ்ப்பணிகளை செய்து வருகிறார். முத்தமிழ் சுவை சுற்றம் அமைப்பின் சார்பில் ஆண்டுதோறும் குடியேற்றம் பகுதியில் இலக்கிய விழா நடத்தப்படுகிறது. இலக்கிய விழாவில் அறிஞர்களின் சொற்பொழிவுகளும் பட்டிமன்றங்களும் நிகழ்த்தப்பட்டுள்ளது. முத்தமிழ் சுவை சுற்றம் நடத்தும் இலக்கிய விழாவில் சாலமன் பாப்பையா,அப்துல் ரகுமான், அப்துல் காதர், கு. ஞானசம்பந்தன், நெல்லை கண்ணன், திருவாரூர் சண்முக வடிவேல் முதலியோர் கலந்து கொண்டுள்ளனர்.

வே. பதுமனார் வேலூரில் கோ. விசுவநாதன் நிறுவிய 'தமிழியக்கம்' என்னும் உலகு தழுவிய அமைப்பின் பொருளாளராக இருந்து வருகிறார். வே. பதுமனார் தனது தந்தையால் நடத்தப்பட்ட சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தை தொடர்ச்சியாக நடத்தி வருகிறார்.

விருதுகள்

  • தமிழ் செம்மல் விருது - 2017 (தமிழக அரசு)
  • தூய தமிழ் பற்றாளர் விருது - 2020 (தமிழக அரசு)
  • கவிக்கோ விருது (வாணியம்பாடி முத்தமிழ் சங்கம்)
  • தமிழ்ப்பணிச் செம்மல் விருது (வாணியம்பாடி முத்தமிழ் சங்கம்)
  • இலக்கிய மாமணி விருது (புதுக்கோட்டை கம்பன் கழகம்)

நூல்கள்

  • பொன்முடி தமிழ்த்துணைவன் 11-ம் வகுப்பு - 1978
  • பொன்முடி தமிழ்த்துணைவன் 12-ம் வகுப்பு - 1980
  • கட்டுரைத் தீங்கனிகள் - 1984
  • நடுத்தெரு நாகரிகம் - 1988
  • வள்ளுவர் வழி நடப்போம் உரைநூல் - 1989
  • பதுமனார் தமிழ்த்துணைவன் - 1990
  • அம்பலம் - 1997
  • கீத தாகம் - 1998
  • மாசுபடா மாரியம்மன் தாலாட்டுப் பாமாலை - 1998
  • தலைமேடை நாடகம் - 1998
  • வள்ளலார் வழங்கிய நித்திய கருமமும் சத்திய தருமமும் - 2000
  • ஆசிரியர் நேற்று இன்று நாளை - 2001
  • சிறுகதைச் செல்வம் - 2001
  • நாக்கு நாகரிகம் - 2001
  • குடியேற்றம் கரும்புலியீசுவரர் தல வரலாறு - 2004
  • எது ஏது ஏதேது - 2004
  • தமிழ்ச்சிமிழ் கவிதைத்தொகுப்பு - 2007
  • வாரியார் வழங்கிய வளர்தமிழ் - 2007
  • திருக்கோயில் திருநெறி - 2007
  • திருக்குறள் சொற்பொருள் அகராதி - 2013
  • கம்பன் கவியே கவி - 2013
  • இப்படியும் மனிதர்கள் - 2013
  • கல்வியின் மேலாண்மை - 2013
  • வேர்வையின் வெற்றி - 2013
  • வி.ஐ.டி வேந்தர் முத்துவிழா மலர் - 2000
  • சூட்டி மகிழத் தெளிதமிழ்ப் பெயர்கள் - 2014
  • வடமொழி வழக்கு தெளிதமிழ்ச் சொல் அகராதி - 2014
  • வியர்வையின் வெற்றி - 2014
  • சூட்டி மகிழ்வோம் தூய தமிழ்ப்பெயர்கள் - 2019
  • விழித்தால் விடியும் - 2019
  • வந்தவாறு வருமாறு (புலவர் தன் வரலாறு) - 2022
  • சிறகுகள் எங்கும் செந்தமிழ் மகரந்தம் - 2022
  • புறநானூற்று விழுமியங்கள் - 2022
  • அரனார் அருள்வேட்டல் - 2022
  • மணித்தமிழ்க் கட்டுரைகள் - 2024
  • நீதிக் கலங்கரை விளக்கம் - 2024
  • இது இப்படிதான் - 2024
  • கற்றதும் பெற்றதும் - 2025

உசாத்துணை

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 01-Jun-2025, 14:23:38 IST