வேல்கண்ணன்
வேல்கண்ணன் (டிசம்பர் 10, 1974) தமிழில் எழுதிவரும் கவிஞர்.
பிறப்பு, கல்வி
வேல்கண்ணன் டிசம்பர் 10,1974 அன்று சு. இராமசந்திரன்- இரா. ஜெயமணி இணையருக்கு இராமநாதபுரத்தில் பிறந்தார். 1993-ம் ஆண்டு திருவண்ணாமலை அரசு மேல் நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வியை முடித்தார்.
தனிவாழ்க்கை
செப்டம்பர் 16,2004-ல் கவிதாவை மணம் செய்து கொண்டார். மகள் வேல்விழி.
இலக்கியவாழ்க்கை
முதல் படைப்பு உயிரோசை இணைய இதழில் 'தூரிகை இறகு' என்ற கவிதை செப்டம்பர் மாதம் 2009-ல் வந்தது. வம்சிபதிப்பகம் வேல்கண்ணனின் கவிதைத் தொகுப்பை 2013-ல் ' இசைக்காத இசை குறிப்பு' என்ற பெயரில் வெளியிட்டது. யாவரும் பதிப்பகம் 2018-ல் பாம்புகள் மேயும் கனவு நிலம் என்ற அவரது இரண்டாவது கவிதைத் தொகுதியை வெளியிட்டது.
வேல்கண்ணன் திருவண்ணாமலையில் பள்ளிக் கல்வி கற்கும் சமயத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் இயங்கிய தோழர்கள் அறிமுகமானார்கள். மாதாந்திர கூட்டத்தில் எழுத்தாளர்கள், ஓவியர்கள், போன்ற பல படைப்பாளிகள் வருகை தந்து பேசுவார்கள். முடிந்தவரை தவறாமல் அக்கூட்டங்களுக்குச் சென்றார். தமுஎச தோழர்கள் வழியாகவே பல புத்தகங்கள் அவருக்கு அறிமுகமாயின. அவர்களின் வழியாகவே 'மார்க்சியம்' மீது ஈர்ப்பு ஏற்பட்டது. காந்தியம், தமிழ் தேசியம் மீதும் பெரும் ஈடுபாடு இருந்தது.
தன் இலக்கிய வாழ்க்கை பற்றி வேல்கண்ணன் குறிப்பிடுவது
"எழுதுவது குறிப்பாக கவிதைகள் அல்லது கவிதைகள் குறித்து. மனித மனங்களின் நிலைப்பாடுகள், நுணுக்கங்கள், வெளிப்பாடுகள். இதனை என்னுடைய வாசிப்பு, பயணம், அனுபவம் கொண்டு என்னுடைய பார்வையில் எழுதுவது. மதம், சாதி, சடங்குகள், கடவுள் மீது நம்பிக்கை அற்றவனாக அதே சமயத்தில் பிறரின் மீது எதையும் என் வழியாக திணிக்க கூடாது என்பதில் தெளிவுற செயல்படுகிறேன். எவ்வளவு குறைகளும் கொடூரங்கள் கொண்டவனாக இருந்தாலும், மனிதன் மகத்தானவன். " இவ்வாறு வேல்கண்ணன் கூறுகிறார்.
தனக்கு இலக்கியத்தில் செல்வாக்கு செலுத்திய முன்னோடிகள் என்று தொல்காப்பியர், வள்ளுவர் முதல் அனைத்து கவிஞர்களும் என்கிறார்.
இலக்கிய இடம்
வேல்கண்ணனின் கவிதைகள் உயர்த்தி அதிர்ந்து பேசாதவை. பதற்றங்கள், யத்தனங்கள் அற்ற முனகல் தன்மை கொண்டவை.
கதிர் பாரதி வேல்கண்ணனின் கவிதையை இவ்வாறு குறிப்பிடுகிறார்.
வேல்கண்ணின் கவிதையின் குரலே முனகல்தான். அதனால்தான் அந்தக் குரலுக்கு ஒரு சுண்டுவிரல்கூட முளைக்கவில்லை என்றேன். ஆனால், அந்த முனகலை ஒருவன் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருப்பான் எனில், ராகத்தின் நெளிவு சுழிவுகளைத் தெரிந்த பாடகன், ஒரு ராகத்தைக் கட்டியெழுப்பும் முன், அவன் செய்யும் ’முன்தயாரிப்புகள்’ என்றே அவற்றைப் புரிந்துகொள்வான். எனவேதான் இந்தக் கவிதைகள் அனைத்தும் இசைக்காத இசைக் குறிப்புகளாக இருக்கின்றன. ஒவ்வொரு கவிதையும் பால்யம், காமம், கழிவிரக்கம், துயரம், நிராயாசை, தாம்பத்யம், காதல், துரோகம்... என இவை தந்த அனுபவங்களை சதா முனகிக்கொண்டே, தன்னைத்தானே இசைக்க முற்பட்டுக்கொண்டே இருக்கின்றன.[1] "
நூல்பட்டியல்
- இசைக்காத இசை குறிப்பு, வம்சி பதிப்பகம் (2013)
- பாம்புகள் மேயும் கனவு நிலம், யாவரும் பதிப்பகம் (2018)
- லிங்க விரல், யாவரும் பதிப்பகம் (2023)
உசாத்துணை
அடிக்குறிப்புகள்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
20-Dec-2022, 12:41:47 IST