under review

வேங்கடரமண பாகவதர்

From Tamil Wiki
Bhagavathar with thiyagarajar.jpg

வேங்கடரமண பாகவதர் (பிப்ரவரி 18, 1781 - டிசம்பர் 15, 1889) கர்நாடக இசைக் கலைஞர். திருவையாறு தியாகராஜ சுவாமியின் மாணவர். தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு, சௌராஷ்டிர மொழிகளில் புலமை பெற்றவர்.

வாழ்க்கைக் குறிப்பு

Bhagavathar idol.jpg

வேங்கடரமண பாகவதர் பிப்ரவரி 18, 1781 அன்று தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அய்யம்பேட்டை (முன்பு ராமசந்திரபுரம் என்றழைக்கப்பட்டது) கிராமத்தில் நன்னுசுவாமி பாகவதருக்கு பிறந்தார். இளம் வயதில் தாய்மொழியான சௌராஷ்டிர மொழியுடன், தமிழ், தெலுங்கு, சமஸ்கிருத மொழிகளை தந்தை நன்னுசுவாமி பாகவதரிடம் கற்றார். வேங்கடரமணர் தன் தந்தை நன்னுசுவாமியிடம் இசை கற்றார். வேங்கடரமண பாகவதர் தன் நாற்பத்தி ஒன்றாம் வயதில் முத்துலட்சுமியம்மாளைத் திருமணம் செய்து கொண்டார். குடும்பத்தை கவனிக்கும் பொருட்டு வாலாஜாபேட்டைக்கு குடிபெயர்ந்து அங்கே ஒரு ஜவுளிக்கடை நடத்தினார். வேங்கடரமண பாகவதர், முத்துலட்சுமியம்மாள் தம்பதியருக்கு கிருஷ்ணசுவாமி பாகவதர் 1824-ம் ஆண்டு பிறந்தார்.

முத்துலட்சுமியம்மாள் இறந்ததும் வேங்கடரமண பாகவதர் லட்சுமிபாயைத் திருமணம் செய்துக் கொண்டார். வேங்கடரமண பாகவதருக்கு லட்சுமிபாய் மூலம் ராமசுவாமி, துளசியம்மாள் பிறந்தனர்.

கலை வாழ்க்கை

Bhagavathar idol1.jpg

வேங்கடரமண பாகவதர் திருவையாற்றில் இருந்த தியாகராஜர் பற்றி அறிந்து அவரிடம் இசை கற்க விரும்பினார். பகலில் தந்தைக்கான பணிவிடைகளைச் செய்துவிட்டு மாலையில் தியாகராஜர் வீட்டின் முன் நின்று மாணவர்கள் கீர்த்தனை பாடுவதைக் கேட்பார். இரண்டு வருடங்கள் தொடர்ந்து தியாகராஜர் வீட்டிற்கு வெளியே நின்று கீர்த்தனைகளைக் கேட்டார். தியாகராஜரின் மனைவி வேங்கடரமணன் வெளியே நிற்பதைப் பார்த்து வினவிய போது தியாகராஜரிடம் சங்கீதம் பயிலும் அவரது விருப்பத்தைத் தெரிவித்தார். தியாகராஜர் வேங்கடரமணனை சிஷ்யனாக ஏற்று ராம நாமத்தை உபதேசித்தார். பின் இருபத்தி ஆறு வருடங்கள் தியாகராஜரிடம் வேங்கடரமண பாகவதர் சீடனாக இருந்து இசை கற்றார்.

வேங்கடரமண பாகவதர் தியாகராஜரின் மறைவிற்கு பின் வாலாஜாபேட்டைக்கு மனைவியுடன் குடிபெயர்ந்தார். தெலுங்கு மற்றும் சௌராஷ்டிர மொழியில் கீர்த்தனைகள் இயற்றினார். குரு காணிக்கையாகத் தெலுங்கு மொழியில் இயற்றிய கீர்த்தனைகளின் இறுதியில் 'தியாகராஜ' என முத்திரையிட்டு வெளியிட்டார். தியாகராஜரின் கீர்த்தனைகளை வேங்கடரமண பாகவதரும் அவரின் மகன் கிருஷ்ணசுவாமி பாகவதரும் பாதுகாத்தனர். அச்சுவடிகள் இப்போது சௌராஷ்டிர சபை அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டுள்ளன. 'பிரகலாத பக்தி சரிதம்', 'நௌகா சரிதம்', 'சீதாராம விஜயம்' மூன்றும் இந்த அருங்காட்சியகத்தில் கிடைத்துள்ளன.

வேங்கடரமண பாகவதர் கீர்த்தனைகள்
2009 ஆம் ஆண்டு வேங்கடரமண பாகவதர் அஞ்சல்தலை வெளியிடப்பட்டது

வேங்கடரமண பாகவதர் நூற்றைம்பதிற்கும் மேல் பாடல்கள் இயற்றியுள்ளார். அதில் பாதி கீர்த்தனைகள், மற்றவை வர்ணம், ஸ்வரஜதி, தில்லானா போன்றவை. வேங்கடரமண பாகவதரின் பாடல்கள் பக்தி, ராம நாமம், வேதாந்த அறிவுரைகளைக் கருப்பொருளாகக் கொண்டு பாடப்பட்டவை. வேங்கடரமண பாகவதர் அவற்றைத் தன் குரு தியாகராஜரின் பாடல்களில் இருந்து பெற்றார். வேங்கடரமண பாகவதர் இயற்றிய ’தத்துவமு தளியகா முக்தி லேதானு மாதா’ என்னும் காம்போஜி ராகத்தில் அமையப் பெற்ற வேதாந்த கீர்த்தனையில் ஒரே ஒரு பரம்பொருளின் இருப்பைப் பற்றிப் பாடினார். ஜோதிஸ்வரூபிணி ராகத்தில் அமைந்த 'அனந்தமாயா மாணவே’ கீர்த்தனையில் உச்ச ஆன்மீக பேரின்பத்தையும், மனித மனத்தின் உவகை, துக்கம் பற்றியும் பாடினார் (பேத புத்தினி பகு வதமு சேவகி மொதகீடமு லந்து சாம்பவா முன்சுடே). பக்திப் பாடல், பஜனை சம்பிரதாயக் கீர்த்தனை, நாம சித்தாந்தம் போன்றவற்றிற்கு எடுத்துக்காட்டாக "ஸ்ரீ ராமபிரம்மமு" (பேகடா ராகம்), 'ராம பக்தி' (பேகடா ராகம்), 'போதேந்திர யதி' போன்ற பாடல்களைச் சொல்லலாம். வேங்கடரமண பாகவதரின் சீடர்கள் ராம தாரக மந்திரத்தைத் தினமும் உச்சரித்தனர்.

"அபரதியாகு நடு நெபமு லெந்தகா ப்ரெவு க்ருபானிகா ரதகதா" என்னும் பிலஹரி ராகத் கீர்த்தனை தியாகராஜர் கீர்த்தனைகளைப் போல் பல்லவி அனுபல்லவியை பெருக்கி வருவதாகவும், சரணம் அதன் தொடர் விளக்கமாகவும் அமைந்துள்ளது.

வேங்கடமண பாகதவர் தன் குரு தியாகராஜரைப் பற்றி 'குரு வரு’ என்னும் கீர்த்தனையை ஆனந்த பைரவி ராகத்தில் இயற்றியுள்ளார். அப்பாடல் தியாகராஜரின் பரம்பரையான கர்கல்லத்தைப் பற்றியும் வேங்கடரமணரின் தந்தை நன்னுசுவாமியும் தானும் செய்த புண்ணியங்களின் பலனாக தியாகராஜர் குருவாய் கிடைத்தது பற்றியுமாக அமைந்தது.

நௌகா சரிதம்
வேங்கடரமண பாகவதர் உபயோகித்த தம்புரா

வேங்கடரமண பாகவதர் தியாகராஜர் தெலுங்கு மொழியில் இயற்றிய ’நௌகா சரிதம்’ நூலை சமஸ்கிருதத்தில் மொழிபெயர்த்தார். தியாகராஜரின் பூஜைக்கு வேங்கடரமண பாகவதர் தினமும் அய்யம்பேட்டையில் இருந்து துளசி கொண்டு வருவது வழக்கமாக இருந்தது. அன்று வேங்கடரமணர் திருவையாறு வர நேரமானதால் தியாகராஜர் கீர்த்தனைகள் பாடி பூஜையை முடித்தார். பின் வேங்கடரமணர் துளசியுடன் வந்ததும் அவருக்காக நௌகா சரிதம் பாடி மீண்டும் பூஜையை செய்தார் என்ற தொன்மக் கதை உண்டு. தியாகராஜர் இத்தருணத்தில் தான் 'நௌகா சரிதம்' முதன்முதலில் பாடினார்.தெலுங்கு மொழியில் இக்கீர்த்தனைகள் பெரும் புகழ் பெற்றபோது தியாகராஜர் மேல் பொறாமை கொண்ட வித்வான்கள் தஞ்சாவூர் ராஜாவிடம் புகார் செய்தனர். அரசர் அவர்களின் புகாரை ஏற்று நௌகா சரிதத்தை தடை செய்யும்படி கூறினார். அரசரின் இச்செயலால் வருத்தமடைந்த தியாகராஜர் நௌகா சரிதத்தின் மொத்த பிரதியையும் அரசரிடம் கொடுத்தார். நௌகா சரிதத்தின் கீர்த்தனைகளை படித்த அரசர் மகிழ்ந்து அதன் சமஸ்கிருத வடிவத்தைக் கொடுக்கும்படி வேண்டினார்.

வேங்கடரமண பாகவதரின் பாதுகை

தியாகராஜர் தாம் இயற்றிய மூலநூல் பிரதி ஒன்று மட்டும் இருந்ததால் அதனை அரசருக்கு கொடுக்க மனமில்லாமல் வாட்டமுற்றார். தியாகராஜரின் வாட்டத்தைக் கண்ட வேங்கடரமண பாகவதர் அதற்கான காரணத்தை வினவினார். தியாகராஜர் சொன்னதும் அந்த மூல பிரதியை வாங்கிக் கொண்டு அய்யம்பேட்டை சென்று ஒரே நாளில் வேங்கடரமண பாகவதர் சமஸ்கிருதத்தில் மொழிபெயர்த்துக் கொடுத்தார்.

வேங்கடரமண பாகவதரின் மாணவர்கள்
  • மைசூர் சமஸ்தான வித்வான் சதாசிவ ராவ்
  • சாத்தூர் பிடில் குப்புசாமய்யர்
  • சித்தூர் கஞ்ஜரா ராதாகிருஷ்ணய்யர்
  • ஜால்ரா ஆத்மா ராமய்யர்
  • ராயவேலூர் பல்லவி எல்லய்யர்
  • கடம் லோகா நாராயணய்யர்
  • மதுரை கெட்டி நன்னுசுவாமி பாகவதர்
  • கவி வேங்கட சூரி
  • மதுரை நீலமேகம் வேங்கடாசல பாகவதர்

மறைவு

வேங்கடரமண பாகவதர் இயற்றிய கீர்த்தனைகளின் ஏடுகள்

டிசம்பர் 15, 1889 அன்று தன் நூற்றிஎட்டாவது வயதில் இயற்கை எய்தினார்.

அஞ்சல்

வேங்கடரமண பாகவதர் நினைவினை ஒட்டி இந்திய அஞ்சல் துறை அவருடைய அஞ்சல்தலையை டிசம்பர் 27, 2009 அன்று மதுரையில் வெளியிட்டது.

வேங்கடரமண பாகவதர் ஆராதனை

வாலாஜாபேட்டை வேங்கடரமண பாகதவர் நினைவாக மதுரையில் ஒவ்வொரு ஆண்டும் வேங்கடரமண பாகவதர் ஆராதனை நடைபெறுகிறது. இதில் டி.எம். சௌந்தரராஜன், டி.கே. ராமரத்தினம், டி.என். சேஷகோபாலன் பாம்பே சகோதரிகள், ஓ.எஸ். தியாகராஜன், வி.கே, நீலராவ் போன்றவர்கள் வேங்கடரமண பாகவதர் நினைவாக கச்சேரி நிகழ்த்தியுள்ளனர்.

கீர்த்தனைகள்

வேங்கடரமண பாகவதர் ஆராதனை
வேங்கடரமண பாகவதர் ஆராதனை
வேங்கடரமண பாகவதர் ஆராதனை
வேங்கடரமண பாகவதர் இல்லம்
வேங்கடரமண பாகவதர் இல்லம்

வேங்கடரமண பாகவதரின் புகழ்பெற்ற ராகங்களைத் தவிர்த்து அவர் பல அரிய ராகங்களிலும் கீர்த்தனைகள் எழுதியுள்ளார். சரஸ்வதி, கமலநாராயணி, ஜோதிஸ்வரூபிணி, நாமநாராயணி, ஸ்வர்ணங்கி போன்ற ராகங்களில் அமைந்த கீர்த்தனைகள் இவற்றுள் அடங்கும். வேங்கடரமண பாகவதரின் எழுபது கீர்த்தனைகள் 1991-ம் ஆண்டு தொகுக்கப்பட்டன.

கீர்த்தனை ராகம் தாளம்
1 அபராதி பிலஹரி கண்டசாபு
2 ஆனந்தமய ஜோதிஸ்வரூபிணி ஆதி
3 இதிகதயானந்தமு சௌராஷ்டிரம் ஆதி
4 இந்தமர்மி வராளி மிஸ்ரசாபு
5 எவராதரிந்து புன்னாகவராளி மிஸ்ரசாபு
6 ஏமநி பலுகுதுரா அடாணா ஆதி
7 கந்தவஹாத்மஜ தோடி ஆதி
8 கன்னுலார தன்யாசி ரூபகம்
9 கருணாநிதி கேதாரகௌளம் ஆதி
10 கருணிஞ்சரா தன்யாஸி ஆதி
11 கிருஷ்ணாயனுசு சுரடி ஆதி
12 குசேல பரிபால சங்கராபரணம் ஆதி
13 குருசரணம் பஜரே சங்கராபரணம் ஆதி
14 குருவருமஹமல ஆனந்தபைரவி ஆதி
15 கோதண்டதீஷா கல்யாணி மிஸ்ரசாபு
16 ஞானஸ்வரரூபமு ஸுரடி ஆதி
17 சபலமுமானி மத்யமாவதி ஆதி
18 சரணனு விஜயநாகரி ஆதி
19 செடிபோகே லலிதா ஆதி
20 தகதுரா ஸவேரி ஆதி
21 தத்வமு காம்போஜி சாபு
22 தஸரத நாதநாமக்ரியா ஆதி
23 தாம்தநாதி கேதாரகௌளம் (தில்லானா) ஆதி
24 தாரிதெலியக ஸ்ரீ மிஸ்ரசாபு
25 திகுலுமான்பரா ஹூசேனி ரூபகம்
26 திருப்பதிவேங்கடரமண முகாரி ஆதி
27 நாதப்பு காம்போஜி மிஸ்ரசாபு
28 நாமமுலனு பைரவி ஆதி
29 நாரத கான கல்யாணி ஆதி
30 நாராயணமுர தன்யாஸி ஆதி
31 நின்னேந்தோ தேவமனோகரி (பதவர்ணம்) கண்டதிருபுடை
32 நினுவினாக கேதாகௌளம் ரூபகம்
33 நீகே தய ஆனந்தபைரவி ஆதி
34 நீவே நன்னு தர்பார் கண்டசாபு
35 நெனரும்சி சக்ரவாகம் ஆதி
36 நேரமு லெந்நக சக்ரவாகம் ஆதி
37 பகஸேய தகுநா நாம நாராயணி ஆதி
38 பஜரே மானஸ கௌளை ஆதி
39 பஜரே ஸ்ரீராம மாளவ ஆதி
40 பரமபுருஷ கேதாரம் ஆதி
41 பரவஸமாயனு நாதநாமக்ரியா ஆதி
42 பாலகோபால தன்யாஸி ஆதி
43 பாலயமாம் ஸ்ரீ ஸ்வர்ணாங்கி ஆதி
44 பாலயமாம் ஸ்ரீ ஸ்ரீ ரஞ்சனி ஆதி
45 ப்ரத்யக்‌ஷமுகா பைரவி ஆதி
46 மன்ஸாராமுனி கமாஸ் ஆதி
47 யமுனி பாதலகு தோடி ஆதி
48 ராதா ரமண மோஹணம் ஆதி
49 ராமசந்திர ஆனந்த பைரவி ரூபகம்
50 ராமநாமொரலிஞ்சரா ஹரிகாம்போஜி ரூபகம்
51 ராமபக்தி பேகட ஆதி
52 ராமா மநவிவிநுமா காம்போஜி (ஸ்வரஜதி) ரூபகம்
53 ராமாரவி கேதாரகௌளம் (ஸ்வரஜதி) ரூபகம்
54 ராரா தசரத பைரவி ரூபகம்
55 ராரா வஸுதேவ தோடி ரூபகம்
56 ராரா ஸ்ரீரகுவீரா பிலஹரி ஆதி
57 ராக்‌ஷஸ குல சங்கராபரணம் ரூபகம்
58 வதரஸநே பூர்வகல்யாணி ஆதி
59 விடவனுரா கமலாமனோஹரி ஆதி
60 விநராது செஞ்சுருட்டி ஆதி
61 ஸரோஜாஷ கல்யாணி (வர்ணம்) ஆதி
62 ஸாமி நீபாத கேதாரம் ஆதி
63 ஸாமி நெனருன பைரவி (ஸ்வரஜதி) ஆதி
64 ஸ்ரீதர வைகுண்ட பேகட ஆதி
65 ஸ்ரீரகு ராமம் ஸ்ரீரஞ்சனி ஆதி
66 ஸ்ரீராஜ கோபால ஆபோகி (பதவர்ணம்) திஸ்ர திருபிடை
67 ஸ்ரீராமசந்த்ரநாது கமலா மனோஹரி (வர்ணம்) ஆதி
68 ஸ்ரீராம்ப்ரம்மமு பேகட ஆதி
69 ஹரி ஹரி சரஸ்வதி ஆதி
70 ஹரி ஹரி ஸ்ரீ புன்னாகவராளி ஆதி

உசாத்துணை

வெளி இணைப்புகள்

வேங்கடரமண பாகவதரின் கீர்த்தனைகள்


✅Finalised Page