under review

வெள்ளைமாளர்

From Tamil Wiki

வெள்ளைமாளர், சங்க காலப் பெண்பாற் புலவர்களில் ஒருவர். இவரது ஒரு பாடல் சங்க தொகை நூலான புறநானூற்றில் 296- வது பாடலாக இடம்பெற்றுள்ளது.

புலவர் பெயர்க் குறிப்பு

வெள்ளைமாளர் எனக் குறிப்பிடப்படும் புலவரின் இயற்பெயர் தெரியவரவில்லை. தம் பாடலில் போரில் இறக்கவிருப்பவர்களை எண்ணி மக்கள் முன்கூட்டியே செய்யும் செயல்களைப் பாடினார் ( வெள்ளைச் சாவு. அல்லது வெள்ளை மாளல்-மாண்டுபோதல் வெள்ளையாகத் தெரிவது). வெள்ளைமாளலைப் பற்றிப் பாடியதால் பாடற்பொருளின் அடிப்படையில் வெள்ளைமாளர் எனப் பெயர் பெற்றார்.

வெள்ளைமாளர் பாடிய புறநானூற்றுப் பாடலில் ஏறாண் முல்லைத்துறையும், பாடலில் இடம் பெற்றுள்ள காட்சிகளையும் கருத்துகளையும் கொண்டு இவர் பெண்பாற் புலவர் என்று அறிஞர்கள் கருதுகின்றனர். \

பாடலால் அறியவரும் செய்திகள்

  • பண்டைக்காலப் போர்முறை – காலையில் குறிப்பிட்ட காலத்தில் போர்த் தொடக்கப்பறை இரண்டு பக்கங்களிலும் முழங்கப்பட்ட பின்னர் போர் நிகழும். மாலையில் குறிப்பிட்ட காலத்தில் போர்நிறுத்தப் பறை ஒருபக்கத்தில் முழங்கியதும் நிறுத்தப்படும்
  • காயம் பட்டவர்களுக்கு வேப்பந்தழையால் விசிறினர்.
  • மக்கள் காஞ்சிப்பண் பாடினர். காஞ்சிப்பண் விழுப்புண்பட்டவா்கள், பேய்ப்பிடி கொண்டவா்கள் வருத்தம் தீரப் பாடப்பட்டது.
  • வெண்சிறு கடுகுப் புகை காயங்களுக்கு இதமானது. வெண்சிறு கடுகு எண்ணையும் காயங்களின்மேல் பூசப்பட்டது

பாடல் நடை

வாகைத்திணை

வேம்புசினை ஒடிப்பவும், காஞ்சி பாடவும்,
நெய்யுடைக் கையர் ஐயவி புகைப்பவும்,
எல்லா மனையும் கல்லென் றவ்வே
வெந்துஉடன்று எறிவான் கொல்லோ
நெடிதுவந் தன்றால் நெடுந்தகை தேரே?
(திணை: வாகை)

(மக்கள் காஞ்சிப்பண் இசைக்கின்றனர். (புண் வலி தெரியாமல் இருக்க) வெண்சிறு கடுகு எண்ணெய் பூசுகின்றர். வெண்சிறு கடுகைப் புகைக்கின்றனர். எல்லா வீடுகளிலும் ‘கல்’ என்ற கமுக்கமான ஒலி. ஒருவன் தேர் மட்டும் மெதுவாகக் காலம் தாழ்ந்து வந்து கொண்டிருக்கிறது. அவன் தன் விழுப்புண் பற்றிக் கவலை கொள்ளவில்லை. இவன்மீது வேந்தன் சினம் கொள்வானோ? (உடனே வந்து புண்ணை ஆற்றிக்கொள்ளாமைக்காக)

பாடலில் கூறப்பட்ட மறவன் போர் நின்றதும் திரும்பாமல் புண்ணைப் பற்றிக் கவலைப்படாமல் காலம் கடந்து திரும்புகிறான். அதனால் அரசன் சினம் கொள்வானோ எனப் பாடல் குறிப்பிடுகிறது)

உசாத்துணை


✅Finalised Page