under review

வீரசிங்கன் அல்லது சன்மார்க்க ஜயம்

From Tamil Wiki

வீரசிங்கன் அல்லது சன்மார்க்க ஜயம் (1905) இலங்கையில் எழுதப்பட்ட முதல் வரலாற்று நாவல் என கருதப்படுகிறது. சி.வை. சின்னப்ப பிள்ளை இந்நாவலை எழுதினார்.

ஆசிரியர்

வீரசிங்கன் நாவலை எழுதிய சி.வை.சின்னப்ப பிள்ளை 1916-ம் ஆண்டு விஜயசீலம் என்னும் நாவலை எழுதி வெளியிட்டார். உதிரபாசம், இரத்தின பவானி ஆகிய நாவல்களையும் இவர் எழுதினார். தனலுக்குமி தாலாட்டு (1909) என்னும் நூலையும் இவர் எழுதினார். இவர் முன்னோடிப் பதிப்பாசிரியர் சி.வை. தாமோதரம் பிள்ளையின் தம்பி. 1910-ம் ஆண்டுக்கும் 1920-ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட பத்து வருட காலத்தில் இலங்கையில் நாவல் வாசிப்பை ஒரு பொதுப்போக்காக ஆக்கியவர் சி.வை.சின்னப்ப பிள்ளை என்று சில்லையூர் செல்வராஜன் சொல்கிறார்

கதைச்சுருக்கம்

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மல்லாகம் என்ற கிராமத்திற் பிறந்த வீரசிஙகன் தனது அண்ணன் மனைவியின் சூழ்ச்சியால் ஊரை விட்டு வெளியேறிக் நடந்து அநுராதபுரம் வரை செல்கிறான். அநுராதபுரத்தில் மெனிக் பண்டா என்ற சிங்கள வீரனுடன் போரிட்டு வென்று அவனை நட்பாக்கிக் கொள்கின்றான். அங்கு குடியேறியிருந்த தமிழ்க் குடும்பத்தைச் சேர்ந்த இலட்சுமி என்ற பெண்ணை காதலிக்கிறான். அவளை அடைய முயன்ற தீயோர் கூட்டத்தை வென்று அவளை மணந்து வாழ்க்கையில் முன்னேறி இன்பமாக வாழ்கிறான்.

இலக்கிய இடம்

கனக-செந்திநாதன் இந்நாவலை இலங்கையின் இரண்டாவது தமிழ்நாவல் என்றும் முதல் வரலாற்றுநாவல் என்றும் கருதுகிறார். சில்லையூர் செல்வராஜன் அதை ஏற்பதில்லை. வேறு நூல்களும் நடுவில் வெளிவந்தன என்கிறார். தி.த.சரவணமுத்துப்பிள்ளை எழுதிய மோகனாங்கி இதற்கு முன்னரே வெளிவந்தது. ஆனால் அது தமிழகத்துக் கதை. தி.த.சரவணமுத்துப் பிள்ளை இலங்கையைச் சேர்ந்தவர். இந்நாவல் இலங்கையை களமாகக் கொண்ட முதல் வரலாற்றுப் புனைவு

உரையாடலும் ஆசிரியர் கூற்றுமாக அமையும் கதையிலே மாடசாமி என்ற யுணைப் பாத்திரமொன்றின் உரையாடல்களைத் தவிர ஏனைய பகுதிகள் இலக்கணச் செறிவுடைய செந்தமிழிலேயே அமைந்துள்ளன. "சென்னை வித்தியாசங்கப் பிரவேசப் பரீட்சையில் தேறியிருக்கிறேன். தமிழிலே நிகண்டு, நாலடியார், திருக்குறள், நைடதம், பாரதம், கந்தபுராணம், திருவிளையாடற் புராணம், பெரிய புராணம், கம்பராமாயணம் முதலிய செய்யுட்களும் நன்னூலும் இலக்கண விளக்கமும் படித்திருக்கிறேன்" என்று வீரசிங்கன் சொல்வது அன்றைய யாழ்ப்பாண கல்விமுறையைச் சுட்டுகிறது.

ஈழத்து மக்களின் சாதாரண கிராமப்புற வாழ்க்கையையும் பழக்க வழக்கங்களையும் விளக்கும் நோக்கில் நாவல் எழுத முயன்ற சி. வை. சின்னப்பபிள்ளை சமூக நடப்பியல்போடு பொருந்தாத வீரசகாசப் பண்பு வாய்ந்ததாகவே வீரசிங்கன் கதை அல்லது சன்மார்க்க ஜெயம் நாவலைப் படைத்துள்ளார் என நா.சுப்ரமணியம் குறிப்பிடுகிறார்*

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:37:46 IST