வி.ஜீவகுமாரன்
வி.ஜீவகுமாரன் (1958) தமிழ்ப் புனைகதை இலக்கியத்திலும் ஆங்கில இலக்கிய கல்வியிலும் ஈடுபாடுகொண்டவர். 1988-ம் ஆண்டு தொடக்கம் டென்மார்க் அரச நூலகத்தில் வெளிநாட்டவர்களுக்கான பிரிவில் தமிழ்ப் பகுதியின் பொறுப்பாளராகவும் ஆலோசகராகவும் பணிபுரியும் இவர், டென்மார்க் தமிழ் மக்களுக்கு பல தமிழ் நூல்களைக் கிடைக்கச் செய்துள்ளார்.
தனி வாழ்க்கை
1958-ல் இலங்கை, யாழ்ப்பாணம், சங்கானையில் விஸ்வலிங்கம் – நாகரத்தினம் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார் வி.ஜீவகுமாரன். தற்போது டென்மார்க்கை வசிப்பிடமாகக் கொண்டிருக்கும் இவர், மானிப்பாய் இந்துக்கல்லூரியின் பழைய மாணவர். மனைவி கலாநிதி ஜீவகுமாரனும் ஓர் எழுத்தாளர். இரட்டைப் புதல்விகளான மிதிலா, மீரா இருவரும் திருமணமாகி டென்மார்க்கில் வசிக்கின்றார்கள்.
இலங்கையில் தனியார் கல்லூரி ஆசிரியராக பணி வாழ்க்கையைத் தொடங்கிய இவர், கடந்த 26 வருடங்களாக டென்மார்க்கின் நகரசபைகளில் புவியியல் சார்ந்த கணணிப் பிரிவில் நிலத்திற்கு கீழே அமைக்கப்பட்டுள்ள அனைத்து குழாய்கள் - வடிகால்களைப் பதிவு செய்யும் பிரிவிற்கு (GIS – Geographic Information System) பொறுப்பாளராக உள்ளார். டென்மார்க்கில் மொழிபெயர்ப்பாளராகவும் (செஞ்சிலுவைச் சங்கம் - அகதிகள் சங்கம்) பணிபுரிந்துள்ளார்.
இலக்கிய வாழ்க்கை
வி.ஜீவகுமாரன் 2008-ல் தனது 50-வது வயதில் "யாவும் கற்பனை அல்ல"என்ற தொகுப்பின் மூலம் இலக்கிய உலகிற்கு அறிமுகமானார். நாவல்கள், சிறுகதைகள், மொழிபெயர்ப்புகள், கட்டுரைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். தொடர்ந்து பல சஞ்சிகைகள், பத்திரிகைகள், இணையத்தளங்களில் எழுதிவரும் இவர், டென்மார்க்கில் தமிழ்ப் பணிகளை முன்னெடுப்பவர்.
இலக்கியப் பணி
டென்மார்க் அரசின் வெளிநாட்டவர்களுக்கான நூலகத்தின் தமிழ்ப்பிரிவின் ஆலோசகர் மற்றும் கொள்வனவாளர், தமிழ் ஓலைச்சுவடிகள் சேகரிப்பின் உதவியாளர், அரச இணையத்திற்கு தமிழ் எழுத்துருவாக்க உதவியாளர் உள்ளிட்ட பல சேவைப் பணிகளை மேற்கொண்டுள்ளார்.
1986--ம் ஆண்டு டெனிஸ் அகதிகள் சங்க ஆதரவில் அங்கு வாழும் தமிழ் மக்களுக்காக தகவல்களும் இலக்கியமும் இணைந்த குயிலோசை என்ற மாதச் சஞ்சிகையை நடத்தினார்.
1994--ம் ஆண்டு டாக்டர். திரு. ஜெனஸ் ஓட்கொட்டுடன் இணைந்து அவர் வெளியிட்ட டெனிஸ் - தமிழ் - ஆங்கில வைத்தியக் கையேடும் அகராதியும் அக்காலத்தில் வைத்தியத் துறைசார்ந்த சொற்களின் தேவையை நிறைவேற்றியது.
கடந்த 10 ஆண்டுகளாக இலங்கையில் இருந்து வெளிவரும் ஞானம் இதழை இணையம் வழி பலருக்கும் விநியோகித்து வருகிறார்.
விஸ்வசேது இலக்கியப் பாலம் மூலமாக இலங்கையில் 2011--ம் ஆண்டு நடைபெற்ற எழுத்தாளர் மகாநாட்டில் 31 நாடுகளில் வாழும் 50 எழுத்தாளர்களின் சிறுகதைகளை 'முகங்கள்’ என்ற பெயரில் தொகுத்து இலவசமாக வழங்கினார்.
இலங்கையின் பல பாடசாலைகளுக்கும் நூலகங்களுக்கும் விஸ்வசேது இலக்கிய பாலத்தின் வெளியீடுகள் இலவசமாக வழங்கப்பட்டன.
டென்மார்க்கில் ஓய்வு நேரங்களில் தமிழ் - கணிதம் கற்பித்தல், நாடகங்கள் இயக்குதல் போன்ற பணிகளில் ஈடுபட்டுள்ளார்.
டென்மார்க்கில் வாழும் இளைய சந்ததியினர் இணையத்தளங்களில் எழுதிய கவிதைகளை "மெல்லத் தமிழ் இனித் துளிர்க்கும்"என 2008-ல் தொகுத்து வெளியிட்டார்.
விருதுகள்
- தமிழ்நாடு, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் 2018-ம் ஆண்டிற்கான இலக்கிய விருது, ஒரு இலட்சம் இந்திய ரூபாய்க்கான பரிசு.
- 2012-ம் ஆண்டு ’சங்கானைச் சண்டியன்’ நாவல் சின்னப்பபாரதி இலக்கிய விருதும் பத்தாயிரம் ரூபாய் பணமுடிப்பும் பெற்றது. அந்த ஆண்டைத் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக 3 நாவல்களுக்கு இலங்கைத் தமிழியல் விருதுகள் கிடைத்தன.
- 2017-ம் ஆண்டு நற்றிணைப் பதிப்பகம் நடத்திய ப.சிங்காரம் விருது 'கடவுச்சீட்டு’ நாவலுக்கு கிடைத்தது. முதல் பரிசாக 50,000 ரூபாய் தொகை அளிக்கப்பட்டது.
- 2018-ம் ஆண்டு பாரதி புத்தகாலயம் வெளியிட்ட 'நிர்வாண மனிதர்கள்’ சிறுகதைத் தொகுப்பு தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டு பணப் பரிசும் கேடயமும் வழங்கபட்டது.
படைப்புகள்
- 2008 - டெனிஸ் - ஆங்கில – தமிழ் மருத்துவக் கையேடும் அகராதியும் (3 மொழிகளிலும்), மீரா மொழிபெயர்ப்புச் சேவை.
- 2008 - மெல்லத் தமிழ் இனித் துளிர்க்கும் ஆக்கம் : டென்மார்க்கின் இளைய சந்ததியினர். தொகுப்பு : வி.ஜீவகுமாரன், வெளியீடு : மித்ரா பதிப்பகம்
- 2008 - யாவும் கற்பனை அல்ல (சிறுகதைகள், கவிதை) மித்ரா பதிப்பகம்,
- 2009 - மக்கள் மக்களால் மக்களுக்காக – நாவல், மித்ரா பதிப்பகம்
- 2009 - சங்கானைச் சண்டியன் - 2 குறுநாவல்கள், 10 சிறுகதைகளின் தொகுப்பு, மித்ரா பதிப்பகம். இது ஹிந்தி, மலையாளம், சிங்களம் ஆகிய மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டது.
- 2010 - இப்படிக்கு அன்புள்ள அம்மா – மொழிபெயர்ப்பு நாவல், விஸ்வசேது பதிப்பகம், மொழிபெயர்ப்பு : வி. ஜீவகுமாரன்
- 2011- முகங்கள் - சிறுகதைத் தொகுப்பு (31 நாடுகளில் வாழும் 50 எழுத்தாளர்களின் சிறுகதைகள்) தொகுப்பாசிரியர்: வி. ஜீவகுமாரன், விஸ்வசேது பதிப்பகம்
- 2013 - பவளாயி – மொமிபெயர்ப்பு (தமிழில் இருந்து டெனிஷ்) ஆசிரியர்: கு.ப.சின்னப்பாரதி, மொழிபெயர்ப்பு : நீல்ஸ் கென்றிக் வெளியீடு : வி. ஜீவகுமாரன், விஸ்வசேது பதிப்பகம்
- 2014 - கடவுச்சீட்டு – நாவல், நற்றிணைப் பதிப்பகம்
- 2014 - ஜேர்மனிய கரப்பான் பூச்சிகள் - சிறுகதைத் தொகுப்பு, ஞானம் பதிப்பகம்
- 2015 - ஜீவகுமாரன் கதைகள் - சிறுகதைத் தொகுப்பு, ஜீவநதி
- 2017 - குதிரை வாகனம் - நாவல்
- 2018 - நிர்வாண மனிதர்கள் - சிறுகதைத் தொகுப்பு, பாரதி பதிப்பகம்
- 2018 - புலம் பெயர் கதைகளின் நோக்கும் போக்கும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் மதுரை
- 2021 - கடைக்குட்டியன் - நூல் வடிவிலும் ஒலி வடிவிலும் 20 சிறுகதைகளும் அவை பற்றிய 20 விமர்சனங்களும், ஜீவநதி பதிப்பகம்
- 2020 - ஜீவகுமாரன் படைப்புகள் - ஓர் ஆய்வு, தொகுப்பு : ஈரோடு அறிவியல் கலைக்கல்லூரி
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
10-Jan-2023, 06:45:40 IST