under review

வி.கே. செங்கோடன்

From Tamil Wiki
வி.கே. செங்கோடன்

வி.கே. செங்கோடன் (பிறப்பு: 1928) தமிழ் தெருக்கூத்துக் கலைஞர், வாத்தியார். ஐந்தாம் தலைமுறை கூத்துக் கலைஞர். செல்மானியம்மன் செங்கோல் கலைக்குழுவின் வாத்தியார்.

வாழ்க்கைக் குறிப்பு

வி.கே. செங்கோடன் தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டத்தில் கல்லாங்காட்டு வலசு அஞ்சலில் 1928-ல் பிறந்தார். மூன்றாம் வகுப்பு வரை படித்தார். அப்பா ஜோதிடர். தாத்தா நரசாமி, தாத்தாவின் அப்பா கீரிப்பழனி, சித்தப்பாக்கள் பழனிச்சாமி, கருதன் ஆகியோர் கூத்துக் கலைஞர்கள். கூத்து இல்லாத காலங்களில் ஜோதிடம் பார்ப்பார்.

கலை வாழ்க்கை

வி.கே. செங்கோடன் பதின்மூன்று வயது முதல் கூத்தின்மீது ஆர்வம் கொண்டு வாத்தியார் அம்மாபாளையம் அங்கமுத்துவிடம் கற்றுக் கொண்டார். ஆரம்பத்தில் மகாபாரதக் கூத்துகள் ஆடினார். இவர் அதிகம் விரும்பி நடத்தியது பாகவதத்திலிருந்து வந்த 'வானாசூர நாடகம்'. இது விஷ்ணுபுராணமும் சிவபுராணமும் கலந்தது. ஆரம்ப காலகட்டத்தில் பெண் வேடங்களில் ஆடினார். பின்னர் கிருஷ்ணன், நாரதன், ஈஸ்வரன் ஆகிய வேடங்களில் ஆடினார்.

வி.கே. செங்கோடன் செல்மானியம்மன் செங்கோல் கலைக்குழுவின் வாத்தியார். வாத்தியாராக நாற்பது வருடங்களுக்கு மேலாக அனுபவம் உள்ளவர். இவரின் மாணவர்கள் இருப்புடிசெட்டு, செண்டம்பட்டிசெட்டு, எடப்பாடி வீரப்பம்பாளையம் செட்டு என பல குழுக்களில் உள்ளனர்.

சமகால கூத்துக் கலைஞர்கள்
  • மோளக்குளத்து கோவிந்தன்
  • அம்மாபாளயம் அங்கமுத்து
  • சேலம் கீரம்பாப்பட்டி ராசாமணி
  • லட்சுமி

பங்கேற்ற கூத்துகள்

  • வானாசூர நாடகம்
  • மகாபாரதக் கூத்துகள்

உசாத்துணை

  • தெருக்கூத்துக் கலைஞர்கள் - களஞ்சியம்: கோ. பழனி - சி.முத்துகந்தன் - 2011 - போதிவனம் பதிப்பகம்



✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 09-Dec-2024, 20:42:29 IST