விவேக் ஷான்பேக்
விவேக் ஷான்பேக் ( 29 மார்ச் 1962 ) கன்னட எழுத்தாளர். நேரடியான, குறைத்துச்சொல்லும் அழகியல் கொண்ட யதார்த்தவாதக் கதைகளை எழுதியவர். நாடக ஆசிரியர்.
பிறப்பு, கல்வி
மேற்குக் கர்நாடகத்தில் அங்கோலா என்னும் சிற்றூரில் கோபாலகிருஷ்ண ஷான்பேக்குக்கும் கீதா ஷான்பேகுக்கும் 29 மார்ச் 1962-ல் விவேக் பிறந்தார். ஒரு சகோதரி. அங்கோலாவில் பள்ளிக்கல்வியை முடித்தபின் மைசூரில் பொறியியல்பட்டப்படிப்பை முடித்தார்.
தனிவாழ்க்கை
விவேக் வங்கி அதிகாரியாக பணியாற்றினார். அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் பணியாற்றிவிட்டு ஓய்வுபெற்று பெங்களூரில் வசிக்கிறார்.
விவேக் ஷான்பேக்கின் மனைவி மருத்துவரான அனுராதா அனந்தமூர்த்தி புகழ்பெற்ற கன்னட எழுத்தாளரான யூ.ஆர். அனந்தமூர்த்தியின் மகள்.
இலக்கியவாழ்க்கை
விவேக் ஷான்பேக் தன் 16 வயதில் எழுதிய சிறுகதைக்காக பரிசுபெற்றார். தொடர்ச்சியாக கன்னட இலக்கிய இதழ்களில் எழுதினார்.
பத்திகள்
விவேக் பாவனா, பிரஜாவாணி இதழ்களில் பத்திகள் எழுதினார். அவற்றில் வெளிநாட்டு வாழ்க்கை, உலக இலக்கியம் மற்றும் அரசியல் குறிப்புகளை எழுதி வந்தார்
சிறுகதைகள்
விவேக் சிறுகதைகளுக்காக புகழ்பெற்றவர். அவருடைய சிறுகதைகள் 5 தொகுதிகளாக வெளிவந்துள்ளன. தமிழில் அவை வேங்கைச்சவாரி என்னும் தலைப்புடன் வெளியாகியுள்ளன.
நாவல்கள்
விவேக் சுருக்கமான, செறிவான நாவல்களை எழுதியவர். அவருடைய முதல் நாவல் காச்சர் கோச்சர் ஆங்கிலத்தில் அமெரிக்காவில் வெளியாகி புகழ்பெற்றது. தமிழ் உட்பட இந்தியமொழிகளிலும் அந்நாவல் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. விவேக் ஐந்து நாவல்கள் எழுதியுள்ளார்.
நாடகம்
விவேக் ஷான்பேக் கன்னடத்தில் 3 நாடகங்கள் எழுதியுள்ளார். அவை மேடைகளில் வெற்றிகரமாக நடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் சக்கரகொம்பே மேடையில் பெரிய வெற்றிபெற்ற நாடகம்.
விருதுகள், ஏற்புகள்
கதா விருது 1992
விவேக் ஷான்பேக் அயோவா பல்கலையின் எழுத்துப் பயிற்சியில் 2016-ல் கலந்துகொண்டார்.(International Writing Program, University of Iowa)
இதழியல்
விவேக் தேஷ்காலா என்னும் காலண்டு இலக்கியச் சிற்றிதழை ஏழாண்டுக்காலம் நடத்தினார்
இலக்கிய இடம்
விவேக் ஷான்பேக் நவீன கன்னட இலக்கியத்தின் முகமாக உலகளாவ அறியப்படும் படைப்பாளி. அவருடைய காச்சர்கோச்சர் நாவல் சர்வதேச அளவில் கவனம்பெற்றது. விவேக் குறைத்துச்சொல்லலின் அழகியலை முன்வைக்கும் படைப்பாளி என மதிப்பிடப்படுகிறார். அன்றாட வாழ்க்கையின் உறவுநுட்பங்களை நுட்பமாகச் சொல்லும் படைப்புகள் அவை.
படைப்புகள்
தமிழில்
- வேங்கைச்சவாரி
- காச்சர் கோச்சர் - தமிழாக்கம் நல்லதம்பி
- சகீனாவின் முத்தம் - தமிழாக்கம் நல்லதம்பி
கன்னடத்தில்
சிறுகதைகள்
- அங்குரா
- லங்கரு
- ஹுலிசவாரி
- மத்தொப்பன சம்சாராரா
நாவல்
- காச்சர்கோச்சர்
- இன்னு ஒண்ந்னு
- ஒந்து படி கடலு
- ஊருபங்க
- சகினால முத்து
நாடகங்கள்
- சக்கரகோம்பே
- பகுமுக்தி
- இல்லிருவுடு சும்மனே
உசாத்துணை
- Scroll Interview Vivek Shanbhag
- Vivek Shanbhag talks about 'Sakina's Kiss'
- காச்சர்கோச்சர்- விஷால்ராஜா
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 05-Dec-2024, 05:53:17 IST