under review

விளையாட்டு ஆத்திசூடி

From Tamil Wiki
ஆத்திசூடி என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: ஆத்திசூடி (பெயர் பட்டியல்)
விளையாட்டு ஆத்திசூடி

விளையாட்டு ஆத்திசூடி (முதல் பதிப்பு: 1988), ஔவையாரின் ஆத்திசூடியை அடிப்படையாகக் கொண்டு, விளையாட்டை மையமாக வைத்து எழுதப்பட்ட ஆத்திசூடி நூல். இதனை இயற்றியவர் டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா.

வெளியீடு

விளையாட்டு ஆத்திசூடியின் முதல் பதிப்பு 1988-ல் வெளியானது. இரண்டாம் பதிப்பு 1996-ல் வெளிவந்தது. மூன்றாவது பதிப்பு சென்னை ராஜ்மோகன் பதிப்பகம் மூலம் ஜூலை 2009-ல் வெளியானது. இதனை இயற்றியவர் டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா.

நோக்கம்

விளையாட்டு ஆத்திசூடி நூலின் நோக்கம் குறித்து ஆசிரியர் எஸ். நவராஜ் செல்லையா, நூலின் முன்னுரையில், "விளையாட்டு விழாக்கள் நடைபெறுகின்ற பொழுது சொற்பொழிவாற்ற வருகின்றவர்கள், பேச்சுக்கிடையில் 'சுவரை வைத்துத்தான் சித்திரம்', 'நல்ல உடல் நல்லமனம்', 'நோயற்ற வாழ்வு குறைவற்ற செல்வம்' என்பன போன்ற கருத்துக்களையே திரும்பத்திரும்ப பேசுவதை பல முறை கேட்டிருக்கிறோம். இத்தகைய பேச்சுக்களை கேட்கின்ற பொதுமக்களும், விளையாட்டு விழா என்றால் இப்படித்தான் சொற்பொழிவு அமைந்திருக்கும் என்று முன் கூட்டியே முடிவு செய்து விட்டு, பேசுவோர்க்கிடையே தாங்களும் பேசிக்கொண்டு பொழுது போக்குவதும் உண்டு. அத்தகைய ஒரு சூழ்நிலையை ஆத்திசூடி மாற்றியமைத்து, மேடைப் பேச்சில் விளையாட்டுத் துறைபற்றிய விளக்கம் தர உதவும் என்ற உண்மையான நம்பிக்கையுடன் ஆத்திசூடி நூலை உருவாக்கி இருக்கிறேன்." என்று குறிப்பிட்டார்.

நூல் அமைப்பு

விளையாட்டு ஆத்திசூடி 'அவனியில் சிறந்தது விளையாட்டு', 'அனுதினம் தொடர்வது விளையாட்டு' என அகர வரிசையில் தொடங்கி, 'கவலைகள் போக்கும் விளையாட்டு', கசடுகள் தீர்க்கும் விளையாட்டு' எனக் ககர வரிசையில் தொடர்ந்து 'வேகம் கொடுப்பது விளையாட்டு', 'வேடிக்கை மகிழ்ச்சிக்கு விளையாட்டு' என வகர வரிசையில் நிறைவடைகிறது. ஒவ்வொரு எழுத்து வரிசைக்கும் 7 முதல் 15 வரிகளில் 900-த்திற்கும் மேற்பட்ட பாடல்கள் இடம்பெற்றன.

பாடல் நடை

கவலைகள் போக்கும் விளையாட்டு
கசடுகள் தீர்க்கும் விளையாட்டு
கரும்பென இனிக்கும் விளையாட்டு
கனிகளாய் சுவைக்கும் விளையாட்டு
கட்டுடல் வளர்க்கும் விளையாட்டு
கலைமனம் கொடுக்கும் விளையாட்டு
கரையிலா கடல்போல் விளையாட்டு
ககனமாய் விரிந்தது விளையாட்டு
கற்பகத் தருபோல விளையாட்டு
கடமையை கற்பிக்கும் விளையாட்டு
கல்வியாய் பயன்தரும் விளையாட்டு
நிலைகளின் தொகுப்பு விளையாட்டு
கடவுளின் படைப்பே விளையாட்டு

வே

வேகம் கொடுப்பது விளையாட்டு
வேடிக்கை மகிழ்ச்சிக்கு விளையாட்டு
வேட்டையின் ரசிப்புக்கும் விளையாட்டு
வேண்டும் நலம்தரும் விளையாட்டு
வேதங்கள் கருத்துக்கு விளையாட்டு
வேதனை மாற்றிடும் விளையாட்டு
வேதாகமம் ஆகும் விளையாட்டு
வேதாந்தி ஆகவும் விளையாட்டு
வேர்வையின் வெளிப்பாடு விளையாட்டு
வேந்தனாய் சிறப்பிக்கும் விளையாட்டு
வேய்ங்குழல் இனிமைக்கு விளையாட்டு
வேல்மதிக் கூர்மைக்கு விளையாட்டு
வேற்றுமை வீழ்த்திடும் விளையாட்டு
வேறென்ன தாய்வீடு விளையாட்டு

மதிப்பீடு

விளையாட்டு ஆத்திசூடி நூல், விளையாட்டை மையமாக வைத்துச் சிறார்களுக்காக எழுதப்பட்ட முதல் மற்றும் ஒரே ஆத்திசூடி நூலாக அறியப்படுகிறது.

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 27-Jul-2024, 09:12:01 IST