விமோசனம் (இதழ்)

விமோசனம் (1929), மது விலக்குப் பிரச்சாரத்துக்காக ராஜாஜி தொடங்கி நடத்திய இதழ். எழுத்தாளர் கல்கி இதழின் ஆசிரியராகச் செயல்பட்டார்.
வெளியீடு
திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்தில் இருந்து, மது விலக்குப் பிரச்சாரத்துக்காக ராஜாஜி தொடங்கி நடத்திய இதழ் விமோசனம். இவ்விதழ் ஆகஸ்ட், 1929-ல் தொடங்கப்பட்டது. ராஜாஜி வெளியீட்டாளராகவும், கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி இதழின் ஆசிரியராகவும் செயல்பட்டனர்.
இதழ் அமைப்பு
விமோசனம் இதழ் நாற்பது பக்கங்களில் வெளிவந்தது. இவ்விதழின் தனிப்பிரதி விலை அணா: ஒன்று. ஆண்டுச் சந்தா: ஒரு ரூபாய். அயல் நாடுகளுக்குச் சந்தா: ஒரு ரூபாய், இரண்டணா.
உள்ளடக்கம்
விமோசனம் முதல் இதழின் முதல் பக்கத்தில் பாரதியாரின், 'ஜய பேரிகை கொட்டடா' பாடல் மாற்றம் பெற்று, மதுவிலக்குப் பின்னணியில் பின்வருமாறு இடம்பெற்றது.
ஜய பேரிகை கொட்டடா - கொட்டடா
ஜய பேரிகை கொட்டடா
காந்தியின் ஒளியிடைக் குளித்தோம் - கள்ளின்
மாயத்தையறிந்துகண் விழித்தோம்
தீர்ந்தது தரித்திரம்தொலைந்தது துயரம்
தீய கள் ளரக்கனை யடித்தோம்
ஜய பேரிகை கொட்டடா - கொட்டடா
ஜய பேரிகை கொட்டடா
மலர்ந்த முகத்துடன் ஒருவன் முரசு அறைவது போன்ற ஓவியம் இப்பாடலுடன் இடம்பெற்றது. பத்து இதழ்களிலும் முதல் பக்கம், மது குறித்த பல்வேறு படங்களும் விளக்கமுமாகவே அமைந்தது.
மதுவிலக்கு குறித்த செய்திகளையும், கட்டுரைகளையும், சிறுகதைகளையும், கருத்துப் படங்களையும், நாடகங்களையும் தாங்கி விமோசனம் இதழ் வெளிவந்தது. ஒவ்வொரு இதழிலும் மதுவின் தீமை குறித்த தலையங்கம் வெளியானது. 'பூரண மதுவிலக்குச் சட்டமே இன்றைய தேவை', 'மதுவிலக்கு ஏன்?' போன்ற தலையங்கங்கள் வெளியாகின.
தொடக்க காலத்தில் தலையங்கங்களை ராஜாஜி எழுதினார். பின்னர் கல்கி அவற்றைத் தொடர்ந்தார். கருத்துப் படங்களுக்கும், வரைகலை ஓவியங்களுக்கும் விமோசனம் இதழ் இடமளித்தது. பத்து இதழ்கள் மட்டுமே வெளிவந்தன. வெளிவந்த பத்து இதழ்களில், ஆறு இதழ்களில் கதையும், இரண்டு இதழ்களில் நாடகமும், ஒன்றில் கட்டுரையும் மற்றொன்றில் படமும் பாடலும் இடம் பெற்றன. விமோசனம் இதழின் தனிச் சிறப்பு வாய்ந்த பகுதியாக கருத்துப் படங்கள் அமைந்தன. விமோசனத்தின் பத்து இதழ்களிலும் மொத்தம் பதினேழு கருத்துப் படங்கள் இடம்பெற்றன. மது விலக்குக்கு எதிரான விளம்பரங்களும் விமோசனம் இதழில் இடம்பெற்றன.
இதழ் நிறுத்தம்
உப்புச் சத்தியாகிரகத்தில் கலந்துகொண்ட ராஜாஜி கைதானார். தானும் போராட்டத்தில் கலந்துகொள்ள விரும்பினார் கல்கி. அதனால் பத்தாவது இதழோடு (மே 1930) 'விமோசனம்' இதழ் நின்று போனது.
மதிப்பீடு
தமிழில் மதுவிலக்கை வலியுறுத்தி வெளியான முதல் இதழ் விமோசனம். மதுவிலக்குக் குறித்த செய்திகளுக்கும், கதை, கட்டுரைகளுக்கும் முக்கியத்துவம் அளித்து வெளிவந்த தமிழின் முதல் இதழாக 'விமோசனம்' இதழ் அறியப்படுகிறது.
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 17-Aug-2025, 08:16:22 IST