under review

விநோத விசித்திரப் பத்திரிகை

From Tamil Wiki
விநோத விசித்திரப் பத்திரிகை - 1900

சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு 1900 முதல் மாதம் தோறும் வெளிவந்த மாத இதழ் விநோத விசித்திரப் பத்திரிகை. இவ்விதழின் ஆசிரியர்களாக அக்கீம் முகமது, நிசாமுதின் சாகிபு ஆகியோர் இருந்தனர். பெயருக்கேற்றவாறு விநோதமான, விசித்திரமான செய்திகளை, நிகழ்வுகளை அவ்வப்போது இவ்விதழ் வெளியிட்டுள்ளது.

பதிப்பு, வெளியீடு

ஜனவரி 1900 முதல், மாத இதழாக விநோத விசித்திர பத்திரிகை வெளிவந்தது. இதன் ஆசிரியர்களாக அக்கீம் முகமது, நிசாமுதின் சாகிபு ஆகியோர் இருந்தனர்.

இதழின் நோக்கம்

இதழின் நோக்கமாக, “இதில் காலத்திற்குக் காலம் பிரசுரப்படுத்தப்படும் விஷயங்கள் எவையெனில் கல்வியின் சிறப்பு, யுக்தியும் தந்திரமுமுள்ள அநேக புத்தி கோசரக் கதைகள், காதலனும் காதலியும் கருத்தொருமித்துக் குடும்ப விவகாரங்களை ஒழுங்குபெற நடத்தவதற்கேற்ற வழிவகைகள், வைத்தியத்தில் சிறந்த அநேக முறைகள், திரவியந்தேடுவதற்கு அனுகுணமாகப் பல முகாந்திரங்கள், பல்வேறு வகைப்பட்ட சாமான்களைச் செய்து லாபம் சம்பாதிக்கக்கூடிய கைத்தொழில் முறைகள், இந்திர ஜாலம், மந்திர ஜாலம், தந்திரஜாலம், முதலிய மகா ஜாலங்களின் ரகசியங்கள், சமையல் பாக வகைகள், கடவுளைப்பற்றி விஷயம் இன்னும் ஜனங்களுக்கும் பிரயோசனப்பித்தக்கப் பற்பல விஷயங்கள்" என்ற குறிப்பு முதல் இதழில் காணப்படுகிறது.

உள்ளடக்கம்

பொது மக்கள் நலன் சார்ந்த பல்வேறு செய்திகளைத் தாங்கி இவ்விதழ் வெளிவந்தது. கூடவே பெயருக்கேற்றவாறு விநோதமான, விசித்திரமான செய்திகளையும், நிகழ்வுகளையும் இவ்விதழ் வெளியிட்டு வந்தது.

இவ்விதழில் வைத்தியம், கைத்தொழில், பாக சாஸ்திரம், கல்வி, குழந்தைகளின் பாதுகாப்பு, மந்திரம், ரசவாதம், கருப்ப ஸ்திரீகள் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள், பட்டு வஸ்திரங்களில் கரைப்பிடித்தல், திராட்சை செடி, சோடா வாட்டர் செய்யும் முறை, மாம்பழத்தை நாள்பட வைக்கும் உபாயம், போட்டோகிராப் படம் பிடிக்கும் விதம், தங்கச் சாமான்கள், நகைகள் துலக்க, கோதுமை நொய்ச்சாதம், பிரியாணி, தேங்காய்ப்பால், எலுமிச்சம் பழரசத்தை கெட்டுப் போகாமல் நெடுநாள் வைத்திருக்க, தலை வெட்டும் ஜாலம், நோட்டு அடிக்கும் ஜாலம், முட்டை ஜாலம், பெண்களுக்குக் கல்வி ஏன்? பகுத்தறிவு, பன்னாட்டரசர் வருமானம், வசியம், ஓர் உத்தி - எனப் பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகள் இடம் பெற்றிருக்கின்றன.

சிறு சிறு கதைகள், தொடர் கதைகளும் இடம் பெற்றிருக்கின்றன. அவற்றுள் ஒன்று, 'விக்டோரியா மகாராணியின் இளம்பருவத்தைப் பற்றி கதைகள்'.

நிறுத்தம்

1901-க்குப் பிறகும் வெளிவந்த இந்த இதழ், எவ்வளவு ஆண்டுகாலம் வெளிவந்தது, எப்போது நின்று போனது என்பது பற்றிய விவரங்கள் கிடைக்கவில்லை.

ஆவணம்

இவ்விதழில் சில பிரதிகள் தமிழ்நாடு ஆவணக் காப்பகத்தில் சேமிக்கப்பட்டுள்ளன.

உசாத்துணை

  • மறைந்துபோன தமிழ் இதழ்கள் (1800-1900), ப. ராஜசேகர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்


✅Finalised Page