under review

விக்டோரியா தோட்டத் தமிழ்ப்பள்ளி

From Tamil Wiki
பள்ளிச் சின்னம்

விக்டோரியா தோட்டத் தமிழ்ப்பள்ளி, மலேசியாவில் கெடா மாநிலத்தில் உள்ள பாடாங் சிராய் மாவட்டத்தில் இயங்கும் தமிழ்ப்பள்ளி. 75 ஆண்டுகளாக இயங்கி வரும் பழமை வாய்ந்த தமிழ்ப்பள்ளி. 192 மாணவர்கள் பயிலும் இப்பள்ளியின் பதிவு எண் KBD5047.

வரலாறு

1890--ம் ஆண்டு கெடா மாநிலத்தில், பாடாங் சிராய் எனும் ஊருக்கு அருகில், சிறு நிலப்பரப்பில் அமைந்த ரப்பர் தோட்டம் 1926--ம் ஆண்டு புதிய முதலீட்டாளர் ஹென்றியின் வருகைக்குப் பிறகு வேகமாக வளர்ந்தது. பிரிட்டிஷ் அரசி எலிசபத்தின் தாயாரின் பெயரை நினைவுகூரும் வகையில் இத்தோட்டத்திற்கு விக்டோரியா தோட்டம் எனப் பெயரிடப்பட்டது.

விக்டோரியா தோட்டத் தமிழ்ப்பள்ளி அமைவதற்கு முன்பாக தொழிலாளர் குடியிருப்பில் இருந்த ஆயாக்கொட்டகையே ஆரம்ப பள்ளியாக செயல்பட்டதாக கூறப்படுகின்றது. தென்னாப்பிரிக்காவிலிருந்து தோட்டத் தொழிலாளராக கொண்டுவரப்பட்ட திரு சின்னையாவும் கோயில் பூசாரியும் இணைந்து மூன்றாம் வகுப்பு வரை சிறார்களுக்குத் தமிழ் ஆசிரியராக பணியாற்றினார்.

1948--ம் ஆண்டு, தோட்ட நிர்வாகம் ஒன்றைரை ஏக்கர் நிலப்பரப்பில் விக்டோரியா தமிழ்ப்பள்ளியை கட்டிக் கொடுத்தது. நான்கு வகுப்பறைகளைக் கொண்ட பலகை கட்டிடத்தில் முப்பது மாணவர்கள் பயின்றனர். தோட்ட நிர்வாகத்தில் பணியாற்றிய திரு.நாகப்பனே அப்போது பள்ளியின் ஒரே ஆசிரியராகவும் பணியாற்றினார்.

உருமாற்றம்

SJKT LADANG VICTORIA.png

1950--ம் ஆண்டிற்குப் பிறகு விக்டோரியா தோட்டத்தில் தொழிலாளர் எண்ணிக்கை பெருகியது. ஆகவே தொழிலாளர்களின் பிள்ளைகள் கல்வி கற்க விக்டோரியா தோட்டத்தமிழ்ப்பள்ளியே முதன்மை தேர்வானதோடு சுற்றுவட்டார சிறு தோட்டங்களிலிருந்தும் மாணவர்கள் விக்டோரியா தோட்டத்துக்கு வரத் தொடங்கினர். பிற தோட்டப்பள்ளிகளில் மூன்றாம் ஆண்டு வரை மட்டுமே கல்வி பயிலும் வசதி இருந்த காலத்தில் விட்டோரியா தோட்டத் தமிழ்ப்பள்ளியில் ஆறாம் ஆண்டுவரை கல்வி பயிலும் வசதி அமைந்திருந்தது மாணவர் வருகை பெருக ஒரு காரணமாகும்.

1959--ம் ஆண்டில் விக்டோரியா தோட்டத் தமிழ்ப்பள்ளியில் 210 மாணவர்கள் பயின்றனர். ஆகவே, பள்ளிக் கட்டிடத்தை விரிவாக்கம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்ப்பட்டது. தோட்ட நிர்வாகத்தின் ஒத்துழைப்புடன் 1959--ம் ஆண்டில் நான்கு வகுப்பறைகள் கொண்ட இணைக்கட்டிடம் கட்டப்பட்டது. மேலும் ஆசிரியர்கள் குடியிருக்க பள்ளிவளாகத்திலேயே எட்டு வீடுகள் ஒதுக்கப்பட்டன. ஒரு சிற்றுண்டிச் சாலையும் அமைக்கப்பட்டது. வெளியூர்களிலிருந்து வரும் ஆசிரியர்கள் அந்த வீடுகளில் தங்கிப் பணியாற்ற அவை மிகவும் உதவின. பிறகு தோட்ட கண்காணிப்பாளர் குடியிருப்பை ஆசிரியர் குடியிருப்பாக தோட்ட நிர்வாகம் மாற்றியமைத்தது. 1965-ம் ஆண்டு மாணவர் எண்ணிக்கை 320 ஆக உயர்ந்தது. 1979--ம் ஆண்டில் கற்சுவராலான நான்கு வகுப்பறைகள் கொண்ட மேலும் ஒரு புதிய கட்டிடம் கட்டப்பட்டது

2000--ம் ஆண்டுகளுக்குப் பிறகு பழைய பலகை கட்டிடங்கள் ஒன்றன் பின் ஒன்றாக அகற்றப்பட்டு புதிய கற்சுவர் கட்டிடங்கள் எழுப்பப் பட்டு பள்ளி புதிய தோற்றம் பெற்றது.

முன்னாள் மாணவர் மன்றம்

1976--ம் ஆண்டில் தலைமையாசிரியர் திரு. தண்ணீர்மலையின் முயற்சியில் முன்னாள் மாணவர் மன்றம் பதிவுபெற்றது. திரு வேலுராமரெட்டி தலைவராகப் பொறுப்பு வகித்தார். பிறகு கு. சுப்பிரமணியம் தலைவரானார். விக்டோரியா தோட்டத் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் மன்றம் பள்ளி மாணவர்களுக்கும் தோட்ட மக்களுக்கும் பயன் தரும் பல அரிய செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டது.

இலவச மாலைவகுப்பு, விளையாட்டு போட்டிகள், ‘அறிவு மாடம்’ என்ற வாசிப்பு கூட நிர்மாணிப்பு, இளைஞர் முகாம், விடுமுறைகால மாணவர் முகாம், கட்டிட வளர்ச்சி நிதி போன்ற பயனான செயல்களில் முன்னாள் மாணவர் மன்றம் செயல்பட்டது. மன்றம் சார்பாக 1976 --ம் ஆண்டு 'தேன்துளி' சிற்றிதழ் திரு ராமவேலுரெட்டியின் முன்னெடுப்பில் வெளியிடப்பட்டது. அம்முயற்சியே 1991 முதல் ‘தென்றல்’ என்ற பெயரில் மும்மாத இதழாக வெளிவந்தது. ‘தென்றல்’ மொத்தம் பதினேழு வெளியீடுகளைக் கண்டது.

மன்றம் இதுநாள் வரை விக்டோரியா தோட்டத் தமிழ்ப்பள்ளியின் திட்டங்களுக்குத் துணையாக இருந்து செயலாற்றிவருகின்றது.

தலைமையாசிரியர் பட்டியல்

திரு. நாகப்பன் 1948 - 1954
திரு. து. முனுசாமி 1955 - 1973
திரு தண்ணீர்மலை 1974 - 1984
திரு. சின்னத்தம்பி 1983 - 1987
திரு. கு. கிருஷ்ணன் 1987 - 1995
திரு மணியம் 1995 - 1998
திரு கோபாலு 1998 – 1999
திரு. கோ. புண்ணியவான் 1999 - 2005
திருமதி யவனராணி 2005 – 2006
குமாரி ரெ. தனபாக்கியம் 2006- 2008
திருமதி க. கமலவள்ளி 2008- 2014
திரு த. அசோக்குமார் 2014-2018
திரு. கோ. செளந்தரபாண்டியன் 2018- 2020
திருமதி ப. செல்வி 2020 – 2022
திரு. பெ. கார்த்திகேசு 2022-

பள்ளி முகவரி

Sekolah Jenis Kebangsaan (T) Ladang Victoria
09400 Padang Serai, Kedah, Malaysia.

உசாத்துணை


✅Finalised Page