under review

வா.செ. குழந்தைசாமி

From Tamil Wiki
வா.செ. குழந்தைசாமி

வா.செ. குழந்தைசாமி (ஜுலை 14, 1929 - டிசம்பர் 10, 2016) கல்வியாளர், கட்டுரையாளர், எழுத்தாளர். கணினித்தமிழுக்கு பங்களிப்பு செய்தார். தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் நிறுவனத் தலைவராகப் பணியாற்றினார்.

வாழ்க்கைக் குறிப்பு

வா.செ. குழந்தைசாமி கரூர் மாவட்டம் வாங்கலாம்பாளையத்தில் ஜுலை 14, 1929-ல் பிறந்தார். கரக்பூரிலுள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் தொழில்நுட்பத்தில் முதுநிலைப் பட்டம் பெற்றார். ஜெர்மனியிலும் அமெரிக்காவிலும் உயர்படிப்பைத் தொடர்ந்தார். இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் நீரியலில் முனைவர் பட்டம் பெற்றார்.

ஆசிரியப்பணி

வா.செ. குழந்தைசாமி மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் துணைவேந்தராக பதினைந்து வருடங்கள் பதவி வகித்தார். இவரது நூல்கள், கட்டுரைகள் பல பல்கலைக் கழகங்களில் பாடநூல்களாகவும், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பாடமாகவும் இடம்பெற்றன.

வா.செ. குழந்தைசாமி

அமைப்புப் பணிகள்/பொறுப்புகள்

  • தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் தலைவராக இருந்தார்.
  • உலக அளவில் நீர்வளத்துறையில் பல ஆய்வுக்குழுக்களிலும், திட்டக்குழுக்களிலும் பங்கேற்றார்.
  • யுனெஸ்கோ நீர்வளத் துறைத் திட்டக் குழு உறுப்பினர்.
  • சர்வதேச தொலைநிலைக் கல்விக் குழுவின் ஆசிய துணைத் தலைவர்.
  • காமன்வெல்த் நாடுகளின் பல்கலைக்கழகங்கள் குழுத் தலைவராகப் பணியாற்றினார்.
  • சென்னை ஆசியக் கல்வி நிறுவனத்தின் துணைத் தலைவராக இருந்தார்.
  • தமிழ் மெய்நிகர்ப் பல்கலைக்கழக சமூகத்தின் தலைவர்
  • சென்னை தமிழ் அகாடமி தலைவர்
  • உலகத்தமிழ் ஆய்வுக்கழகத் துணைத் தலைவர்
  • தமிழ்மொழி மேம்பாட்டு வாரியத் தலைவர்

தமிழ் கணிணிக்கு செய்த பங்களிப்புகள்

வா.செ. குழந்தைசாமி கணினித் தமிழ் முன்னெடுப்பில் தமிழகஅரசுக்கு உதவியவர்களில் ஒருவர். தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் தலைவராக இருந்தார். பல துறைகளின் ஆங்கிலக் கலைச்சொற்களைத் தொகுத்து அவற்றைத் தமிழில் மொழிபெயர்த்த பணியை தமிழ் இணையக் கல்விக்கழகம் மூலம் செயல்படுத்தினார்.

இலக்கிய வாழ்க்கை

வா.செ. குழந்தைசாமி 'குலோத்துங்கன்' என்ற புனைப்பெயரில் கவிதைத்தொகுப்புகளை வெளியிட்டார். ஆங்கிலத்திலும், தமிழிலும், நீரியல், நீர்வளம், கல்வி போன்றவை தொடர்பாக நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதினார். சில கவிதைகள், நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். கலைச் சொல்லாக்கம், புதிய சொற்களை உருவாக்கும் உத்திகள் குறித்து பல நூல்கள், கட்டுரைகளை எழுதினார். தமிழ் எழுத்துச் சீரமைப்புப் பணியை லட்சியமாக கொண்டவர். வரிவடிவச் சீரமைப்புப் பணியை ஓர் இயக்கமாக நடத்தினார். இருநூற்று நாற்பத்தியேழு தமிழ் ஒலி எழுத்துகளைக் குறிப்பிட முப்பத்தியொன்பது குறியீடுகளுக்கு மேல் தேவை இல்லை என்ற கருத்தைக் கொண்டிருந்தார். தமிழைச் செவ்வியல் மொழியாக இந்திய ஒன்றிய அரசு அறிவித்ததில் இவரது பங்கு இருந்தது.

இவரைப் பற்றிய ஆய்வு

வா.செ. குழந்தைசாமி பற்றி ஆ. ஜான்சன் கென்னடி 'முனைவர் வா.செ.குழந்தை சாமியின் தமிழியற்பணி-ஓர் ஆய்வு' என்னும் தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார்.

விருதுகள்

  • 1988-ல் தமிழ் இலக்கியப் பங்களிப்புகளுக்காக சாகித்ய அகாடமி விருது.
  • 1999-ல் தமிழக அரசின் திருவள்ளுவர் விருது.
  • 1992-ல் கல்வி மற்றும் அறிவியல் துறைகளில் இவரது பங்களிப்பிற்காக பத்மஸ்ரீ விருது
  • 2022-ல் பத்மபூஷண் விருது.
  • 1980-ல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் கௌரவ முனைவர் பட்டம் அளித்தது.
  • நீர்வளத்துறையில் இவருடைய கண்டுபிடிப்பு 'குழந்தைசாமி மாதிரியம்' என அழைக்கப்பட்டது.

மறைவு

வா.செ. குழந்தைசாமி டிசம்பர் 10, 2016-ல் காலமானார்.

நூல் பட்டியல்

  • குலோத்துங்கன் கவிதைகள் (2004)
  • அறிவியல் தமிழ்
  • வாழும் வள்ளுவம்
  • உலகச் செவ்வியல் மொழிகளின் வரிசையில் தமிழ்

மொழிபெயர்க்கப்பட்டவை

  • Earth is Paradise Enough
  • The Immortal Kural
  • An Unending Ascent

உசாத்துணை


✅Finalised Page