வளத்தி நல்ஞானக்குன்று
- வளத்தி என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: வளத்தி (பெயர் பட்டியல்)
வளத்தி நல்ஞானக்குன்று (பொ.யு. 10-ம் நூற்றாண்டு) வடதமிழ்நாட்டு (தொண்டை மண்டலம்) சமணத்தலங்களில் ஒன்று. பார்சுவநாதர் பாறைச் சிற்பம் காணப்படுகிறது.
இடம்
விழுப்புரம் மாவட்டம் செஞ்சிக்கு சற்றுத் தொலைவில் உள்ள வளத்தி என்னும் ஊரில் வளத்தி நல்ஞானக்குன்று அமைந்துள்ளது.
அமைப்பு
வளத்தியில் ஆதிநாத தீர்த்தங்கரருக்குக் கட்டப்பட்ட கோயில் ஒன்றும், ஊரை அடுத்து தெற்கில் சிறிய மலையில் பார்சுவநாதர் சிற்பம் ஒன்றும் காணப்படுகின்றது. இங்குள்ள மலையில் சிறிய குகைகள் ஓரிரண்டு காணப்பட்ட போதிலும் அவை துறவியர் வாழ்வதற்கு ஏற்றவையாகத் திகழ்ந்திருக்குமோ என்பது ஐயத்திற்குரியது. அவர்கள் இச்சிறிய குகைகளில் உறைந்ததைத் தெளிவுபடுத்தும் வகையில் கற்படுக்கைகள் எவையும் செதுக்கப்படவில்லை. இத்தலம் பொ.யு. 10-ம் நூற்றாண்டில் சமண சமய முக்கியத்துவம் பெற்றிருந்ததை பார்சுவநாதர் சிற்பம் வழி அறியலாம்.
நல்ஞானக்குன்று பெயர்க்காரணம்
பார்சுவநாதர் பாறைச் சிற்பம் காணப்படும் குன்றினை நல்ஞானக்குன்று என அழைப்பது வழக்கமாகும். இவ்வுலக மக்கள் மெய்யறிவாகிய ஞானத்தினைப் பெறுவதற்குப் பார்சுவதேவர் வழிகாட்டியாகத் திகழ்ந்தமையால் அவர் இடம் பெற்றிருக்கும் குன்றுக்கு நல்ஞானக்குன்று எனப் பெயர் சூட்டியிருக்கின்றனர்.
சிற்பங்கள்
வளத்தி மலைக் குகையில் பார்சுவநாதர் நின்ற நிலை புடைப்புச் சிற்பம் காணப்படுகின்றது. இவரது கால்கள் பங்கய மலரில் பதிந்தவையாக உள்ளது. இவரது தலைக்கு மேற்பகுதியில் ஐந்து தலை நாகம் படம் விரித்தவண்ணம் உள்ளது. ஆடையின்றி அணியாத அழகராய் நிற்கும் இந்த அருகதேவரின் அமைதியான முகச்சாயலும், அசைவற்று ஒடுங்கிய திருமேனியும் இயற்கையான வனப்புடையவை.
வழிபாடு
ஆண்டுக்கொரு முறை இவ்வூர் மக்கள் சிறப்பு வழிபாடு செய்கின்றனர்.
உசாத்துணை
- மயிலை சீனி. வேங்கடசாமி, சமணமும் தமிழும்
- ARE, 239/1904; SII, Vol, XVII, No. 262
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
12-Dec-2022, 18:18:56 IST