under review

வறீதையா கான்ஸ்தந்தின்

From Tamil Wiki
வறீதையா கான்ஸ்தந்தின் (நன்றி: இந்து தமிழ் திசை)
விகடன் நம்பிக்கை விருது

வறீதையா கான்ஸ்தந்தின் (பிறப்பு: நவம்பர் 6, 1959) தமிழ் எழுத்தாளர். சமூகவியலாளர். மீன்வள ஆய்வாளர். பேராசிரியர். மீனவர்களுக்காகப் போராடிய களச் செயற்பாட்டாளர். நெய்தல் நில மக்களின் வாழ்க்கையை கட்டுரைகள், கதைகள் மூலமாக பதிவு செய்கிறார்.

பிறப்பு, கல்வி

வறீதையா கான்ஸ்தந்தின் கன்னியாகுமரி மாவட்டம் பள்ளம்துறையில் கான்ஸ்தந்தின் லாரன்ஸ், எலிசபெத் இணையருக்கு நவம்பர் 6, 1959-ல் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் ஆறுபேர்.

வறீதையா கான்ஸ்தந்தின் பள்ளத்தில் புனித ஜூட்ஸ் நடுநிலைப்பள்ளியிலும், சியோன்புரம் எல்எம்எஸ் உயர்நிலைப் பள்ளியிலும் பள்ளிக்கல்வி பயின்றார். 1977-ல் உயிரியலில் புகுமுக வகுப்பு பயின்றார். 1980-ல் ஸ்காட் கிறித்தவக் கல்லூரியில் விலங்கியலில் இளங்கலைப்பட்டம் பெற்றார். 1982-ல் விலங்கியலில் முதுகலைப்பட்டம் பெற்றார். 1988-ல் விலங்கியலில் ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றார். 1997-ல் செயின்ட் சேவியர் கல்லூரி, பாளையங்கோட்டை, மதுரைக் காமராசர் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். 1989-ல் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் ஆற்றுப்படுத்துதல் - வழிகாட்டுதலில் முதுநிலைப் பட்டயம் பெற்றார். 1990-ல் எம்எஸ் ஆஃபிஸ் (MS Office) பட்டயம் பெற்றார்

வறீதையா கான்ஸ்தந்தின்

தனி வாழ்க்கை

வறீதையா கான்ஸ்தந்தின் செப்டம்பர் 7, 1987-ல் ஜெசிந்தாவை மணந்தார். ஜெசிந்தா இரவிபுத்தன்துறை புனித ஜோசப் நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார். மகள்கள் ஆட்லின் பெத் நான்சி, ஒஷீன் லாரா.

ஆசிரியப்பணி

வறீதையா 1982-84 வரை தூத்தூர், செயின்ட் ஜூட்ஸ் கல்லூரியில் மீன்வள உதவிப் பேராசிரியராய்ப் பணியாற்றினார். ஜூலை 1984 முதல் விலங்கியல் புல உதவிப் பேராசிரியராகப் பணியாற்றினார். 1993-1996 வரை நாட்டுநலப் பணித்திட்ட அலுவலராக இருந்தார். 1999 முதல் இணைப் பேராசிரியராகப் பணியாற்றினார்.

2016 முதல் தமிழ்நாடு அரசுத் தேர்வு வாரியத்தின் தேர்வாளர் குழுவில் புலமையுறு உறுப்பினராக இருந்தார். 2015-2018 வரை பல கல்லூரிகளில் உயர்கல்வி, நிர்வாகத் தணிக்கையாளராகப் பணியாற்றினார். 2018 முதல் தமிழ்நாடு டாக்டர் ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக் கழகத்தில் வருகைதரு பேராசிரியராகப் பணியாற்றினார்.

ஆய்வுகள்

பன்னாட்டு, தேசிய அரங்குகளில் எட்டு ஆய்வுக்கட்டுரைகள் வாசித்துள்ளார். பன்னாட்டு, தேசிய ஆய்வேடுகளில் பதினைந்து கட்டுரைகள் வெளியிட்டுள்ளார்.

  • 1997-ல் மதுரை காமராஜர் பல்கலைக்கழக புலம்சார் ஆய்வாளராக தேங்காய்ப்பட்டினம் கழிமுகத்தில் உயிர்ச்சூழலியல் ஆய்வுகள் செய்தார்.
  • அனந்த விக்டோரியா மார்த்தாண்டவர்மா கால்வாய் முதன்மை ஆய்வாளராக ஆய்வுகள் செய்தார்.
  • 2003-04-ல் உலக வங்கி - தமிழக அரசு நீர்வளத் துறை திட்டம் சார்பாக எ.டி.சோபனராஜ் அவர்களின் தலைமையில் கோதையார் வடிநில சூழலியல் ஆய்வுத்திட்டத்தில் கலந்தறிவாளராகவும் ஒருங்கிணைப்பாளராகவும் இருந்தார்.
  • மனோன்மணியம் சுந்தரனார், அழகப்பா பல்கலைக் கழகங்களில் முனைவர் பட்ட ஆய்வு நெறியாளராக தகுதி பெற்று, ஐந்து மாணவர்களை முனைவர் பட்ட ஆய்வில் நெறிப்படுத்தியுள்ளார்.
  • 1999-ல் குமரி மாவட்டக் கடற்கரை நீர்வளங்கள் குறித்து உள்ளாட்சித் தலைவர்களும் துறை வல்லுநர்களும் கூடி விவாதிக்கும் இரண்டு நாள் கருத்துப்பட்டறை நடத்தி, செயல்முறைகளை நூலாக ஆங்கிலத்திலும் தமிழிலும் தொகுத்துக் வெளிக்கொணர்ந்தார்.
  • 2003-ல் தேங்காய்ப்பட்டணம், குளச்சல் மீன்பிடி துறைமுகங்களுக்கான மக்கள் இயக்கங்களுக்காக ஆய்வுக் கட்டுரை வெளியிட்டார்.
  • சுனாமிக்குப் பின்னான இரண்டாண்டு காலத்தில் அடித்தட்டு மனிதர்கள், அரசு அதிகாரிகள், சமயத் தலைமைகள், துறைவல்லுநர்களுடன் நேர்காணல்கள், உரையாடல்கள், அரங்குகள், பட்டறைகள் நிகழ்த்தி, அப்பதிவுகளை ’ஆழிப்பேரிடருக்குப் பின்’ என்னும் தலைப்பில் தொகுத்தார்.

இலக்கிய வாழ்க்கை

சூழலியல், வள ஆதாரங்கள், பங்கேற்பு மேலாண்மை குறித்து சிறு பத்திரிகைகளில் எழுதினார். 1976-ல் ஜான் போஸ்கோ இளைஞர் மையத்தில் தொடங்கப்பட்ட கையெழுத்துப் பிரதியின் ஆசிரியாராகச் செயல்பட்டார். 1984-ல் தேசிய இளம் கிறிஸ்தவத் தொழிலாளர் தலைமையகத்தில் சிலகாலம் செய்திமலர் ஆசிரியராய்ப் பணியாற்றினார். சேலத்திலும் ஏற்காட்டிலும் பேராசிரியர் நஞ்சுண்டனின் கடவு அமைப்பு ஒருங்கிணைத்த தமிழ் நடைப் பயிற்சி அரங்குகளில் கலந்து கொண்டார்.

குமுதம் தீராநதி இதழில் ‘மரண வியாபாரிகளின் தீவு’ என்னும் தலைப்பில் இராமேஸ்வரம் மீனவர்களின் வாழ்வாதாரச் சிக்கல் குறித்து குறுந்தொடரும், இந்து தமிழ்திசையின் ‘உயிர்மூச்சு’ இணைப்பிதழில் ‘கடலம்மா பேசுறங் கண்ணு!’ என்னும் தலைப்பில் கடல், நெய்தல் வளங்கள், கடலோடிகளின் மரபறிவு, நிகழ்கால வாழ்வின் சிக்கல்களையும் எழுதினார். 2022-ல் தனது கடற்கரைப் பயண அனுபவங்களை விகடன் இணைய இதழில் ‘திரைகடலோடியும்’ என்னும் தலைப்பில் தொடர் எழுதினார்.

1990-கள் தொடங்கி, கடற்கரை வாழ்வியல், சூழலியல் குறித்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாக ‘நெய்தல் சுவடுகள்’ தமிழ்நாடு மீன் தொழிலாளர் அமைப்பு சார்பாக வெளிவந்தது. 2014-ல் சுனாமி மறுகட்டுமான கட்டத்தில் அரசுகளும், தொண்டுநிறுவனங்களும் முன்னெடுத்த பெருந்திட்டங்கள் தமிழ் நாட்டு மீனவர்களுக்கு என்ன வளர்ச்சியைத் தந்திருக்கிறது என்பதை அந்த மக்களின் குரலில் பதிவுசெய்து ‘பழவேற்காடு முதல் நீரோடி வரை' என்னும் தலைப்பில் நூலாக்கினார். 2014-ல் ‘மன்னார் கண்ணீர்க் கடல்’ வெளியானது. 'மன்னார் கண்ணீர்க் கடல்’ ச.வின்சென்ட்-இன் மொழிபெயர்ப்பில் ‘The Gordian knot’ என்னும் நூலாக வெளிவந்தது. எம். வேதசகாயகுமார்-ன் நெய்தல் குறித்த உரையாடல்கள், உரைகளை 'எக்கர்' என்னும் தலைப்பில் தொகுத்தார். 2018-2019 ஒக்கிப் பேரிடர்க் காலத்தில் கன்னியாகுமரி, கடலூர், தரங்கம்பாடி, நாகப்பட்டினம், இராமேஸ்வரம் கடற்கரைகளுக்குப் பயணித்து, பேரிடர்ப் பாதுகாப்பு, பேரிடர் அபலையர் மறுவாழ்வு குறித்து ஆய்வு செய்து ‘1000 கடல் மைல்’ என்னும் நூலை எழுதினார். 2018 கஜாப் புயல் பாதித்த வெள்ளப்பள்ளம், புஷ்பவனம், பரவாக்குடி, அதிராம்பட்டினம், கள்ளிவயல்தோட்டம், மணமேல்குடி, ஜெகதாப்பட்டினம், மீமிசல் கடற்கரைகளுக்குப் பயணித்து ஆய்வு செய்து ‘கஜாப் புயலும் காவிரி டெல்ட்டாவும்’ என்னும் நூலை எழுதினார். 2004 – 2018 -க்கு இடைப்பட்ட காலத்தில் நிகழ்ந்த நான்கு கடற்கரைப் பேரிடர்களை கடலோடிகளும் அரசுகளும் அப்பேரிடர்களை எதிர்கொண்ட விதம் குறித்தும் ‘கடற்கோள் காலம்’ என்னும் தலைப்பில் எழுதினார். 2022-ல் கன்னியாகுமரியிலுள்ள முக்குவர்கள் குறித்து ஆய்வு செய்து ‘கன்னியாகுமரி முக்குவர்- பண்பாட்டியல் வரலாறு’ என்னும் தலைப்பில் எழுதினார்.

விருதுகள்

  • பெரும் பங்களிப்பாளர் விருது (கன்னியாகுமரி மாவட்ட வளர்ச்சிக்கு வாழ்நாள் பங்களிப்பு), ஒற்றுமைக்கும் வளர்ச்சிக்குமான மக்கள் பாராளுமன்றம் (2017) ரூ.10000.
  • மமா ஆதா விருது (2017)
  • அமுதன் அடிகள் இலக்கியப் பரிசு
  • விகடன் இலக்கிய விருது- 2015 (பழவேற்காடு முதல் நீரோடி வரை)
  • சிறந்த கல்வியாளர் அயாச்சே தேசிய விருது (Innovative College Educator) புது தில்லி.
  • பழவேற்காடு முதல் நீரோடி வரை (விகடன் விருது- 2015).
  • 2022 டாப் 10 மனிதர்களுக்கான ஆனந்த விகடன் நம்பிக்கை விருது

ஆவணப் படம்

  • இனயம் கரண்ட்ஸ் (கருத்து, கதை, இயக்கம்: வறீதையா கான்ஸ்தந்தின்) 2017

குறும்படம்

  • ஒயவு (இயக்கம் - அகில் ராஸ் ஒலிவர்) 2017

வறீதையா கான்ஸ்தந்தின் படைப்புகள் பற்றி

  • நான்கு தன்னாட்சிக் கல்லூரிகளில் வறீதையாவின் கட்டுரைகள் பட்டவகுப்பு முதல் தாள் தமிழ் பாடநூலாக வைக்கப்பட்டன.
  • 'வறீதையாவின் படைப்புகள் - ஓர் ஆய்வு' என்ற தலைப்பில் ஜா. அனிதா வறீதையாவின் எழுத்துகள் மீதான முனைவர் பட்ட ஆய்வு செய்துள்ளார்.
  • வறீதையாவின் படைப்புகள், தொகுப்புகள் குறித்த விரிவான விமர்சனங்கள், அறிமுகவுரைகள், மதிப்புரைகள் ‘கடலின் தொப்புள் கொடி’ என்னும் தொகுப்பாக கிண்டிலில் உள்ளது.

இலக்கிய இடம்

நெய்தல்நில மக்களின் வாழ்க்கையை பதிவுசெய்த எழுத்தாளராகவும், நெய்தல் நில இலக்கியம் உருவாக முன்முயற்சி எடுத்தவராகவும் வறீதையா கான்ஸ்தந்தின் கருதப்படுகிறார். தமிழக மீன்வளம் பற்றிய ஆய்வுகளைச் செய்த அறிவியலாளர், தமிழக மீனவமக்களின் வாழ்க்கையை ஆய்வு செய்த சமூகவியலாளர் என்றும் மதிக்கப்படுகிறார்.

.நூல்கள்

சிறுகதை
  • வர்ளக்கெட்டு (2014)
கட்டுரைகள்
  • திணைவெளி (புலம் வெளியீடு, 2021)
  • வேளம் (உரையாடும் தமிழ் நெய்தல்) (உயிர், 2021).
  • மூதாய்மரம் (தடாகம், 2017) சூழலியல் கட்டுரைகள்.
  • நெய்தல் சுவடுகள்
  • அணியம் (தமிழினி, 2007)
  • என்னைத் தீண்டிய கடல் (காலச்சுவடு, 2009)
  • கரைக்கு வராத மீனவத் துயரம் (உயிர் எழுத்து-நெய்தல்வெளி,2013)
  • நெத்திலிக் கருவாட்டின் வாசனை (உயிர் எழுத்து, 2014)
  • பழவேற்காடு முதல் நீரோடி வரை (2014)
  • மன்னார் கண்ணீர்க் கடல் (2014)
  • கோடிமுனை முதல் ஐ.நா.சபை வரை (புலம், 2020)
  • கடல் சொன்ன கதைகள் (பாரதி புத்தகாலயம், 2020) என்னும் தலைப்பில்)
  • கன்னியாகுமரி முக்குவர்- பண்பாட்டியல் வரலாறு (ஆதி பதிப்பகம், 2022)
  • பெருந்துறை வலசை (2021)
  • கன்னியாகுமரி முக்குவர் (2021)
  • கடல் பழகுதல் (2020)
  • திணைவெளி (2020)
  • கடற்கோள் காலம் (2019)
  • எஸ்.குரு (தினமலர் விமர்சனம்)
  • கடலம்மா பேசுறங் கண்ணு! (2018)
  • கே.அசோகன் (ஆசிரியர்,இந்து தமிழ்திசை)
  • கஜாப்புயலும் காவிரி டெல்டாவும் (2019)
  • வேளம் (2017)
  • வீ.பா.கணேசன், இந்து தமிழ்திசை
  • சங்காயம் (2016)
  • பழவேற்காடு முதல் நீரோடி வரை (2014)
  • கரைக்கு வராத மீனவத் துயரம் (2013)
  • எக்கர் (2013)
  • ரவுத்திரம் பழகு (2012)
  • விளிம்பு, மையம், மொழி (2011)
  • என்னைத் தீண்டிய கடல் (2009)
  • அணியம் (2007)
  • நெய்தல் சுவடுகள் (2005)
  • ஹெச்.ஜி.ரசூல் (கவிஞர், ஆய்வாளர்)
தொகுப்புகள்
  • ஆழிப் பேரிடருக்குப் பின் (காலச்சுவடு, 2006)
  • 1000 கடல் மைல் (தடாகம்- கடல்வெளி, 2018)
  • கஜாப் புயலும் காவிரி டெல்டாவும் (பாரதி புத்தகாலயம், 2019)
  • கடற்கோள் காலம் (எதிர் வெளியீடு, 2019).
  • முக்குவர் - வரலாறு, வாழ்வியல், எதிர்காலம் (நெய்தல்வெளி பதிப்பகம், 2010)
  • விளிம்பு, மையம், மொழி (ஆழி- நெய்தல்வெளி, 2011)
  • கொந்தளிக்கும் கடல் (ஆழி- நெய்தல்வெளி, 2011).
இணையவழி வெளியீடுகள்
  • பெருந்துறை வலசை 2021.
  • கடல் பழகுதல் 2020
  • கன்னியாகுமரி முக்குவர் 2020
  • திணைவெளி 2020
  • கடற்கோள் காலம் 2020
  • கடலம்மா பேசுறங் கண்ணு! 2020
  • வேளம் (வறீதையா கான்ஸ்தந்தின்) 2020
  • வர்ளக்கெட்டு (சிறுகதைகள்) 2020
  • மன்னார்க் கண்ணீர்க் கடல் 2020
தொகுப்புகள்
  • கோடிமுனை முதல் ஐ.நா.வரை 2020
  • கடல் சொன்ன கதைகள் (சிறுகதைகள்) 2020
  • எக்கர் (வேதசகாயகுமாரின் உரைகள்) 2020.
  • விளிம்பு, மையம், மொழி (படைப்பாளுமைகளின் உரையாடல்) 2020
  • கொந்தளிக்கும் கடல் (ஜோ டி குரூசின் படைப்புலகம்) 2020
ஆங்கிலம்
  • The Sea Tribes under Siege (mainspring- Kadalveli, 2017)
  • The Sea Tribes under Siege 2020.
  • The Gordian knot Translated by S. Vincent. 2020.
  • Verses of the Waves (verses) (A.Isaac) 2019.
  • The Catastrophe and After (நியூ செஞ்சுவரி புத்தகப் பண்ணை, 2008)
மொழிபெயர்ப்பு
  • நினைவலைகள் (பால் தாமஸ்) (இணை மொழிபெயர்ப்பாளர் ப.சாந்தி) 2020

இணைப்புகள்


✅Finalised Page