under review

வரவு எதிர்ந்து இருத்தல்(பெருந்திணை)

From Tamil Wiki

வரவு எதிர்ந்து இருத்தல் புறப்பொருளில் அமைந்த பெருந்திணையின் துறைகளில் ஒன்று. பெண்பால் கூற்றாக அமைந்தது. பெருந்திணைக் காதல் கொண்ட தலைவி தலைவன் வருகையை எதிர்நோக்கியிருத்தலைக் கூறும் துறை.

விளக்கம்

புறப்பொருள் வெண்பாமாலை

புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் முல்லை அரும்பு போன்ற பற்களையுடையாள், தன் பெரிய செல்வ மனையில் தலைவனது வருகையை எதிர்நோக்கியிருத்தல் என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.

முகைபுரை முறுவல் முள்எயிற்று அரிவை
வகைபுனை வளமனை வரவு எதிர்ந்தன்று(கொளு 16.4)

வெண்பா

காம நெடுங்கடல் நீந்தும்கால் கைபுனைந்த
பூமலி சேக்கைப் புணை வேண்டி - நீமலிந்து
செல்லாய் சிலம்பன் வருதற்கு சிந்தியாய்
எல்லாக நெஞ்சம் எதிர் (309)

பொருள்: நெஞ்சே! காமமாகிய பெரிய கடலை நீந்துவதற்குத் தலைவனொடு படுக்கையில் சேர்ந்திருத்தல் என்னும் தெப்பத்தைத் துணையாகக் கொள்ளவேண்டும். அதற்காகத் தலைவனிடம் வேண்ட நீ விரைந்து செல்ல மாட்டாய்! தலைவன் இங்கு வருவதற்கும் நினைக்கமாட்டாய் ; உன் மயக்கம் நீங்கிச் செயல்படுவாயாக!

உசாத்துணை

பெருந்திணை (புறவியல்), தமிழ் இணைய கல்விக் கழகம்


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 30-Jul-2025, 18:54:28 IST