under review

வயலட்

From Tamil Wiki
வயலட்

வயலட் (எல்.ஜே.வயலட்) (பிறப்பு: மே 5, 1991) தமிழில் எழுதிவரும் எழுத்தாளர். நாவலாசிரியர், மொழிபெயர்ப்பாளர். சிறுகதைகள், கட்டுரைகள் எழுதிவருகிறார்.

வாழ்க்கைக் குறிப்பு

வயலட் தமிழ்நாட்டின் மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழ்செல்வன், மதியரசி இணையருக்கு மே 5, 1991-ல் பிறந்தார். மயிலாடுதுறை கிட்டப்பா மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வி பயின்றார். தொலைதூரக் கல்வியில் ஆங்கிலத்தில் இளங்கலைப்பட்டம் பெற்றார். வயலட் பெங்களூரில் உள்ள ஒரு சிறார் பதிப்பகத்தில் தமிழ் பதிப்பாசிரியராக பணியாற்றுகிறார்.

இதழியல்

  • காலச்சுவடு இதழில் ஓராண்டு (2014) உதவி ஆசிரியராக பணியாற்றினார்.
  • 2015-ல் "எனில்" என்ற இணைய இதழின் ஆசிரியர் குழுவில் இருந்தார்.

பதிப்பகம்

வயலட் குயர் சென்னை க்ரோனிகிள்ஸ் (Queer Chennai Chronicles) என்ற பதிப்பகத்தின் இணை நிறுவனர். 2017-18 காலகட்டங்களில் அதில் செயல்பட்டார்.

இலக்கிய வாழ்க்கை

வயலட்டின் முதல் முதல் சிறுகதை 'நூலகத்தில்' ஜெயமோகனின் தளத்தில் 2013-ல் வெளியானது. முதல் சிறுகதைத்தொகுப்பு "ஊதா ஸ்கர்ட் கதைகள்" 2017-ல் வெளியானது. இவரின் படைப்புகள் நீலம், அகழ், காலச்சுவடு, பதாகை, வனம் ஆகிய இதழ்களில் வெளியாகியுள்ளன. கிளாரிஸ் லிஸ்பெக்டர், அனார், ஸ்ரீவள்ளி, டி.தர்மராஜ் ஆகியோரை இவரின் ஆதர்ச எழுத்தாளர்களாகக் குறிப்பிடுகிறார்.

வயலட் மொழிபெயர்த்த கவிதைகள், கதைகள் இணைய, அச்சுப் பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன. 2017-ல் காலச்சுவடு வெளியிட்ட ஹுவான் மனுவேல் மார்க்கோஸின் 'குந்தரின் கூதிர் காலம்' என்ற பராகுவே நாவலை இவர் ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்தார்.

மதிப்பீடு

"இதோ நம் தாய் - ரொம்ப அழகிய தீவிரமான கவித்துவ படிமமாய் உருபெற்றிருக்கிறது. மொத்த குறுநாவலும் தாய்மையை ஒரு கருத்துருவமாக இல்லாமல் - மனிதர்கள் வாழ்வோடும் நீதியோடும் சக மனிதர்களோடும் வேறு ஜீவராசிகளோடும் கொள்ளும் உறவாக அழுத்தமான முறையில் முன்வைத்திருக்கிறது. மினிமலிஸ்ட்டிக்காக இருக்கும்போதும் ஆரம்பத்து முன் கதையில் ஒரு அபாரமான நம்பகத்தன்மையும் கலையமைதியும் உணர்ச்சிகரமும் அமைந்திருக்கிறது." என விஷால்ராஜா மதிப்பிடுகிறார்.

நூல் பட்டியல்

நாவல்
  • இதோ நம் தாய் (2025, சால்ட் பதிப்பகம்)
சிறுகதைத் தொகுப்பு
  • ஊதா ஸ்கர்ட் கதைகள் (மோக்லி பதிப்பகம், 2017)
  • நட்சத்திரங்களுக்குச் செல்லும் வழி (நீலம் பதிப்பகம், 2024)
மொழிபெயர்ப்பு
  • குந்தரின் கூதிர்காலம் (காலச்சுவடு, 2017)
  • ஊர்சுற்றிகள் (அறிவியல் புனைவு) (ஆழி பதிப்பகம், 2024)

இணைப்புகள்

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 21-Jan-2025, 19:33:44 IST