under review

வண்ணான் துறைத் திடல் (டோபி காட்) பினாங்கு

From Tamil Wiki
வண்ணான் துறை

டோபி கோட் (Dhoby Ghaut) பினாங்குத் தீவில் அமைந்துள்ள தமிழர்களின் குடியேற்றப்பகுதி. இது ஜார்ஜ் டவுன் பட்டணத்தின் அருகில், ஆயிர் ஈத்தாம் நதியும் ஆயிர் தெர்ஜுன் நதியும் சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ளது. சுமார் முன்னூறு சலவைத் தொழிலாளிகள் தங்கள் தொழிலைச் செய்யவும் குடியிருக்கவும் ராணி டோபி என்பவரின் பெயரில் இந்நிலம் 1804-ல் கவர்னர் ஜார்ஜ் லெத் துரையால் (Sir George Leith) பட்டா வழங்கப்பட்டது. இது 230 ஆண்டுகள் பழமை வாய்ந்த பகுதி. வண்ணான் துறை திடல் என உள்ளூர் மக்களால் இவ்விடம் அழைக்கப்படுகிறது.

வண்ணான் துறைத்திடல்

புதிய குடியேற்றங்கள்

மலேசியாவில் அமைந்துள்ள பினாங்கு நகர உருவாக்கத்தில் பல்வேறு தொழிலாளர்களின் உழைப்பு தேவைப்பட்டது. விவசாயம், கால்நடை வளர்ப்பு, மராமத்துப் பணிகள், துறைமுகப் பணிகள், வண்டிக்காரர்கள், துப்புரவு வேலைகள் எனப் பல்வேறு ஆட்கள் தேவைப்பட்டனர். மேலும், ஆங்கிலேயர் வீட்டுப் பணிப்பெண்கள், சலவைத் தொழிலாளர்கள் போன்றவர்களும் தேவைப்பட்டனர். அவ்வாறு ஒரு தொழிலைச் செய்யும் குழுவினர் குடும்பத்துடன் குறிப்பிட்ட பகுதிகளில் தங்கினர். அவை தனித்த அடையாளம் பெற்ற குடியேற்றங்களாகின.

பினாங்கின் முதல் கவர்னராகப் பொறுபேற்ற ஜார்ஜ் லெய்த் துரை (Sir George Leith Boranet Lieutenant- Governor of Prince of Wales Island ) 2 மே, 1802-ல் தென்னிந்தியாவிலிருந்து சலவைத் தொழில் செய்ய குடியேறிய குடும்பங்களின் பயன்பாட்டுக்கு ஒரு நிலத்தை வழங்கினார். அந்த நிலம் ராணி (டோபி ராணி) என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் காரணமாக அந்த நிலம் சலவைத் தொழில் செய்த ராணி என்கிற பெண்ணின் பெயரில் பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்பட்டு அதுவே வரலாற்றில் நிலை பெற்றுள்ளது.

நிலத்தின் பின்னணி

சர் பிரான்ஸிஸ் லைட்

பிரான்ஸிஸ் லைட் ஜார்ஜ்டவுனை உருவாக்கும் நோக்குடன் கல்கத்தாவிலிருந்து 1786-ல் வந்தபோது அவருடன் வந்த தொழிலாளர் குழுவில், பெங்களூரைச் சேர்ந்த சலவைத் தொழில் செய்யும் லாக்கிலா அல்லது லுக்கிலா என்ற பெண்ணும் வந்தார் எனும் குறிப்பும் அவர் ஆற்றங்கரையில் சிறு கோயிலைத் தோற்றுவித்தார் என்ற குறிப்பும் 1954-ம் ஆண்டு நிலம் தொடர்பான வழக்கின் விவரணையாக அரசுப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே 1786 முதல் தன் குடும்பத்தினருடன் பெருங்குழுவாக அவர் வாழ்ந்த இடத்தையே 1804-ல் கவர்னர் சலவைத் தொழிலாளிகளுக்கு வழங்கினார் என்று நம்பப்படுகிறது.

நிலத்தின் பரிணாமம்

டோபி ராணியின் பெயரில் கவர்னர் வழங்கிய நிலப்பகுதிக்கு மிக அருகாமையில், பிரான்ஸிஸ் லைட் வாழ்ந்த அத்தாப்பு வீடும் சஃலாக் (Suffolk) மிளகுத் தோட்டமும் இருந்தன. பிரான்ஸிஸ் லைட் 1794-ல் இறந்த பிறகு அந்தச் சொத்துகள் சிறிது காலம் பிரான்ஸிஸ் லைடின் நண்பர் ஜேம்ஸ் ஸ்காடின் (James Scott) கண்காணிப்பிலும் பின்னர் பிரான்ஸிஸ் லைட்டின் துணைவி மார்தினா ரோஷெல் (Martina Rozells) க்கும் கைமாறின. பிரான்ஸிஸ் லைட் இறந்து பத்து ஆண்டுகளுக்குப் பின், 1805-ல் உதவி கவர்னர் வில்லியம் எர்ட்வார் (William Edward Phillips) பிரான்ஸிஸ் லைடின் வீட்டையும் தோட்டத்தையும் மார்தினாவிடமிருந்து விலைக்கு வாங்கி, அதை அரசாங்க மாளிகையாக (Suffolk House) மாற்றினார். அச்சமயம் ஆயேர் ஈத்தாம் நதிக்கரையின் ஒரு பகுதியில் இருந்த டோபி காட்டின் ஒரு பகுதியை விலைக்கு வாங்கி மாளிகைக்குச் செல்லும் சாலை அமைத்தார்.

பெயர் குறித்த ஊகங்கள்

வண்ணான் துறைத் தொழிலாளர்கள்
  • ராணி (டோபி ராணி) என்ற பெயரில் நிலம் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றாலும் 'ராணி' என்னும் பெண்ணைப் பற்றிய மேல் தகவல்கள் எங்கும் பதிவு செய்யப்படவில்லை. அக்காலகட்ட வாழ்க்கைமுறையில் சலவைத் தொழில் செய்யும் பெண்ணுக்கு 'ராணி' என்ற பெயர் அமைந்திருக்குமா என்பது சந்தேகமே. ஆகவே அது ஒரு காரணப் பெயராக இருக்கக்கூடும் என நம்பப்படுகிறது. சலவைத் தொழில் செய்பவர்களின் தலைவியாக செயல்பட்டதன் காரணமாக அவ்வாறு குறிப்பிடப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
டோபி ராணி கல்லறை
  • ஆங்கிலேயர்கள் தங்கள் நிறுவனங்கள், நகரங்கள் போன்றவற்றிக்கு பிரிட்டன் அரசகுடும்பத்தினரின் பெயரை வைப்பது இயல்பு. அவ்வகையில் நிலப்பதிவு முறையாக இருக்க சலவைத் தொழில் செய்தவர்களைக் குறிக்க (இங்கிலாந்து) ராணியின் பெயரில் ராணி டோபி Rani Dhobi (Queen of Dhobi) என்றும் பதிவு செய்யப்பட்டிருக்கக்கூடும். பினாங்கில் பிரிட்டன் மகாராணியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் அடையாளமாக அமைக்கப்பட்ட Queen mount என்ற பகுதி அக்காலத் தமிழர்களால் 'ராஜாத்தி மேடு' என்று குறிப்பிடப்பட்டதை உதாரணமாகக் கொள்ளலாம்.

டோபி ராணி குறித்த வாய்மொழி கதைகள்

டோபி ராணி செல்வச்செழிப்போடு வாழ்ந்தார் என்றும் தன் சொத்துகளைத் தன் உறவினர்களுக்கும் கோயிலுக்கும் பங்கிட்டுக் கொடுத்தார் என்ற தகவலும் உள்ளது.

டோபி ராணி தன் இறுதிக்காலத்தில், Lot 171 and Lot 172 T.S 3 என்று அடையாளமிட்ட நிலத்தை, ஜூலை 12, 1872 தேதியிட்ட உயிலில், அப்பகுதியிலிருந்த பழமையான ராமர் கோயிலுக்குக் கொடையாக எழுதினார் என்றும் அதுவே பினாங்கில் அமைந்த மிகப்பழமையான இந்துக் கோயில் என்று குறிப்பிடப்படுகின்றது.

கோயில்
ராமர் கோவில்

1920-ம் ஆண்டு முறையான அறங்காவலர் குழு அமைக்கப்பட்டு அந்த நிலம் பாதுகாக்கப்பட்டது. 1982-ம் ஆண்டு பழைய ராமர் கோயில் இருந்த பகுதியில் எண்கோண வடிவ புதிய கோயில் நிறுவப்பட்டது. புதிய கோயில் வளாகத்தில் பழைய ராமர் கோயியின் சிதைந்த பகுதிகள் இருக்கின்றன. 18 மே, 2005-ம் ஆண்டில் பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் முயற்சியில் திருமண மண்டபமும் அலுவலகமும் கட்டப்பட்டன. இக்கோயில் தற்போது இந்து அறப்பணி வாரியத்தின் பொறுப்பில் உள்ளது. ஶ்ரீ ராமர் கோயில் பினாங்கில் அமைந்த இரண்டாவது முக்கிய வைணவ திருத்தலமாகும்.

டோபி ராணியின் கல்லறை

டோபி ராணியின் கல்லறை அதே பகுதியில் இருந்ததாகவும் பின்னர் அது வேறு இடத்திற்கு மாற்றப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. கோயிலில் டோபி ராணியின் நினைவுக் குறிப்புகள் வைக்கப்பட்டுள்ளன.

இன்றைய நிலை

வண்ணான் துறைத்திடல்

1960-ஆம் ஆண்டுகள் வரை இப்பகுதியில் முன்னூறுக்கும் குறையாத தமிழர்கள் பாரம்பரிய முறையில் சலவைத் தொழில் செய்து வந்தனர். ஆங்கில அதிகாரிகள், மருத்துவமனைகள், தங்கும் விடுதிகள், செல்வந்தர்கள் என பல தரப்பினர் வாடிக்கையாளர்களாக இருந்தனர். சனிக்கிழமைகளில் ஆற்றில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் துணிகளைத் துவைத்தனர். ஆற்றில் படித்துறை அமைத்து நீரில் சலவை செய்யப்பட்ட துணிகள் திடல் போன்ற திறந்த வெளியில் கொடிகளில் உலர்த்தப்படுவதால் இந்த இடத்தைத் தமிழர்கள் 'வண்ணான் துறை திடல்' என்றே குறிப்பிட்டனர். நவீன சலவைத் தொழில் வளர்ச்சியின் காரணமாகவும் ஆற்று நீர் மாசுபாடு காரணமாகவும் பாரம்பரிய சலவைத் தொழில் நசிவுற்றது. தற்போது பத்துக்கும் குறைவானவர்களே இத்தொழிலில் ஈடுபட்டிருக்கின்றனர். பிறர் தொழிற்பேட்டைகளிலும் நகரிலும் வேலை செய்கின்றனர். ஆற்றோரம் அமைந்த வீடுகளில் அவர்களின் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவ்விடத்திற்கு மிக அருகிலேயே ராமகிருஷ்ண ஆசிரமும் தமிழ்ப்பள்ளியும் அமைந்துள்ளன.

முகவரி

Solok York, Taman Dhoby Ghaut,
10450 George Town,
Pulau Pinang

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 05-Mar-2025, 19:09:44 IST