under review

லோத்துட்

From Tamil Wiki
லோத்துட் இனப் பூசகர்களான தந்தாகாஸ்

லோத்துட் இன மக்கள் மலேசியாவின் சபா மாநிலத்தில் வாழும் டூசுன் பழங்குடிப் பேரினத்தின் ஒரு பிரிவினராவர். லோத்துட் இனக்குழுவினர் சுவாங் லோத்துட் என்றும் அழைக்கப்படுகின்றனர்.

இனப்பரப்பு

லோத்துட் மக்கள் சபா மாநிலத்தின் மேற்குப் பகுதியில் இருக்கும் தெலிபோக், துவாரான் மாவட்டங்களில் பெருவாரியாக வாழ்கின்றனர். சபா மாநிலத்தில் இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட லோத்துட் மக்கள் வாழ்கின்றனர்.

லோத்துட் இனக்குழுவின் பெயர் அமைந்ததற்கான காரணமாக நாட்டார் தொன்மம் ஒன்று சொல்லப்படுகிறது. லோத்துட் இனத்தைச் சேர்ந்த இளம்பெண்கள் கால்மூட்டு வரையிலான ஆடைகளையே விரும்பி அணிவார்கள். லோத்துட் மொழியில் மூட்டு எனப் பொருள்படும் ஒத்துட் என்ற சொல்லைக் கொண்டே அவ்வினப் பெண்கள் அழைக்கப்பட்டிருக்கின்றனர். காலப்போக்கில் அச்சொல்லே மருவி லோத்துட் என அவ்வின மக்களைக் குறிக்கும் சொல்லாகியது எனச் சொல்லப்படுகிறது.

மொழி

லோத்துட் மக்களின் தாய்மொழி லோத்துட். இம்மொழியில் டூசுன் மொழியின் தாக்கம் அதிகமாகக் காணப்படுகிறது. லோத்துட் மொழியைப் பயிற்றுவிப்பதை ஊக்குவிப்பதற்காக சபா மாநில அரசாங்கம் லோத்துட் மொழி மையத்தைத் தொடங்கியிருக்கிறது. லோத்துட் மொழியில் நான்கு உயிரெழுத்துகள் பதினெட்டு மெய்யெழுத்துகள் என இருபத்து இரண்டு எழுத்துகளே அமைந்திருக்கின்றன.

பண்பாடு

சமயம்/நம்பிக்கைகள்

லோத்துட் மக்களும் மற்ற டூசுன் பேரின மக்களைப் போலவே கினோரோஹிங்கான் கடவுளையே வழிபடுகின்றனர். கினோரோஹிங்கான் கடவுளும் அவரின் மனைவியான உமுன்சுமுண்டுவும் சேர்ந்தே பிரபஞ்சத்தையும் மனிதர்களையும் படைத்ததாக நம்புகின்றனர். உலகில் ஆன்மீகச் சடங்குகள் நிகழ்த்தப்படும் போது கினோரோஹிங்கான் கடவுளும் அவர்தம் மனைவியும் குடும்பத்தாரும் அதனை ஏற்றுக்கொள்வர். கடவுளர்களின் உலகில் பூசகர்களாக இருக்கும் அசுக் தந்தாகாஸ்களின் வடிவாகவே உலகில் தந்தாகாஸ் எனப்படும் பெண் பூசகர்கள் சடங்குகளை மேற்கொள்கின்றனர்.இதைத்தவிர்த்து, பயிர் விளைச்சலை வேண்டிச் செய்யப்படும் மன்சலுட் எனப்படும் சடங்கினையும் மேற்கொள்கின்றனர். ஒவ்வொரு பயிர் நடவின் போதும் மிகையான பயிர் விளைச்சலுக்காகவும் பயிர்கள் இடரின்றி விளையவும் கடவுளை வேண்டி இச்சடங்கு நிகழ்த்தப்படுகிறது. இச்சடங்குக்காக கோழிகளை அறுத்துச் சமைக்கின்றனர். சமைத்தும் நன்கு வேகாத இறைச்சித் துண்டுகளை வயல்வெளியில் வைத்துப் படையலிடுகின்றனர். ஆற்றோரங்களிலும் மலையடிவாரங்களிலும் அமைந்திருக்கும் வயல்வெளிகளுக்காக மோனுருஸ் எனப்படும் சடங்கைச் செய்கின்றனர். ஆற்றுப்பகுதிகளையும் மலைகளையும் காவல் காத்து நிற்கும் நாட்டார் தெய்வங்களை வணங்குவதற்காக இச்சடங்கு செய்யப்படுகிறது. இச்சடங்கின் போது கோங், சானாங், கெண்டாங் ஆகிய தாளக்கருவிகள் இசைக்க மோமோலியான் எனப்படும் பூசகர் மந்திரங்களை உச்சரிப்பார். அதன் பிறகு, வயல்வெளியில் இளம்பன்றி ஒன்று பயிர்கடவுளுக்காகப் பலிகொடுக்கப்படும். அதன் பிறகு, வீடுகளுக்குத் திரும்பி அனைவரும் சேர்ந்து உணவு உண்பர்.

சடங்குகள்
லோத்துட் மக்கள்

லோத்துட் இன மக்கள்நோய் சிகிச்சை சடங்கான சுமாலுட் புதுமனை புகும் சடங்கான மொலுக்கஸ் ஆகியவற்றை முக்கிய சடங்குகளாகக் கொண்டிருக்கின்றனர். லோத்துட் மக்களின் நம்பிக்கைப்படி பிரபஞ்ச தோற்ற நிகழ்வான மமான்பாங் ஐ நினைவுப்படுத்தும் வகையில் இச்சடங்குகள் மேற்கொள்ளப்படுகின்றன. லோத்துட் இனக்குழுவைச் சேர்ந்த பெண் பூசகர்களான தந்தாகஸ், நோய் சிகிச்சை சடங்கின் போது மந்திரங்களை உச்சரிக்கின்றனர். இம்மந்திரங்களில் லோத்துட் மக்களின் கடவுளான கினோரோஹிங்கான், பிரபஞ்சத் தோற்ற நிகழ்வு ஆகியவற்றை உச்சரிக்கின்றனர். கினோரோஹிங்கான் கடவுளின் பிறப்பிடமாக இருந்த மாயக்கல் பிளவுற்று ஆண் குழந்தை, பெண் குழந்தை என மனித இனம் உருவாகியதிலிருந்து பிரபஞ்சம் தோன்றியது முதலான நிகழ்வுகளையே மந்திரங்களில் சொல்லப்படுகிறது.

கலை

லினாங்கிட் துணி

லோத்துட் மக்கள் லினாங்கிட் எனப்படும் அழகிய பூவேலைப்பாடுகளுடன் கூடிய துணியை நெய்வதில் தேர்ந்தவர்கள். லோத்துட் மக்களின் ஆடைகளைத் தைக்கும் போது இணைப்புத்துணிகளாக லினாங்கிட் துணிகளே பயன்படுத்தப்படுகின்றன.

கட்டுமானம்

லோத்துட் வீடுகள்

லோத்துட் மக்களின் வீட்டு வடிவமைப்பு தனித்துவமானதாகக் கருதப்படுகின்றது. தரையிலிருந்து பத்தடி உயரத்தில் அமைக்கப்படும் லோத்துட் மக்களின் வீட்டுக் கட்டுமானத்தில் அலையாத்தி மரங்கள், மூங்கில் மரங்கள், நிப்பா மர ஒலை, பிரம்புகள் ஆகியவைப் பயன்படுத்தப்படுகின்றன. லோத்துட் மக்களின் வீடுகளில் முற்றம், சமையலறை, முன்னறையுடன் கூடிய நீண்ட கூடம் , வைப்பறை ஆகியவை அமைந்திருக்கும். வீட்டில் காற்றோட்டம் அமைவதற்காக கூரையில் சினுங்கியாப் எனப்படும் சாளரம் அமைக்கப்படுகிறது. கூரைப் பகுதியை ஒட்டி போனிந்திங்கான் எனப்படும் பரண் பகுதி அமைக்கப்படுகிறது. தானியங்களைச் சேமித்து வைக்க திலுட் எனப்படும் அறை அமைக்கப்படும். மரபார்ந்த வேளாண்மைத் தொழில் முதலியவற்றிலிருந்து விடுபட்டு இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதால் லோத்துட் மக்களின் தனித்டுவமான வீட்டுக் கட்டுமானம் வெகுவாகக் குறைந்திருக்கிறது.

திருமணச் சடங்கு

லோத்துட் இனக்குழுவில் பெற்றோர்களே தங்கள் பிள்ளைகளுக்கான மணமக்களைத் தேர்வு செய்கின்றனர். பெண் வீட்டாரின் ஒப்புதலைப் பெற்று மணமகனின் குடும்பத்தார் பெண் வீட்டுக்குச் சென்று திருமண நிச்சயத்தைச் செய்கின்றனர். குடும்பப் பின்னணி, மணமகன்/மணமகளின் இயல்புகள் ஆகியவற்றை ஒட்டியப் பேச்சுகளுக்குப் பின்னர் திருமணத்தை உறுதி செய்கின்றனர். அதன் பின்னர். மணமகன் வீட்டைச் சேர்ந்த மூத்த ஆண் ஒருவர் மணமகள் வீட்டைக் கண்டு திருமணத்துக்கான நாள், ஏற்பாடுகள் ஆகியவற்றைக் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்துவார். அதன் பின்னர், பெண் வீட்டார் திருமண ஏற்பு குறித்து அசரீரியின் செய்தியைத் தாங்கிய கனவினைக் கண்ட பின்னரே திருமண ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்குவர். இதற்கு முன்பதாகவே, மணமகன் பெண் வீட்டாருக்கு சீர்த்தொகையை அளிக்க வேண்டும். திருமணத்துக்கான ஏற்பைப் பெண் வீட்டார் அளித்தவுடன், மணமகன் திருமணத்துக்கான சீர்ப்பொருட்களான நிலம், வெற்றிலைத் தாம்பூலம், சீனத் தாலங்கள், காரோ பழங்கள் ஆகியவற்றை அளிக்க வேண்டும். திருமணத்தின் போது மணமகனின் முடியைச் சிறிது சவரம் செய்கின்றனர். சவரம் செய்யப்பட்ட முடியை நீரில் வைத்து உப்பிட்டு வைக்கின்றனர். தீயூழைத் தவிர்க்க இச்சடங்கு நிகழ்த்தப்படுகிறது. திருமணத்தின் போது மணமகன் வெள்ளாடை அணிந்து சிவப்பு வண்ணக் குடையின் கீழ் இசைக்கருவிகளின் தாளத்துடன் குடும்பத்தார் சூழ ஊர்வலமாய் வருவர். மணமகள் வீடு பல வண்ணங்களில் அமைந்திருக்கும் சிறு கொடிகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். மணமகள் வீட்டுக்குள் நுழைவதற்கு முன்னால் மணமகனின் கால்களைக் கழுவச் செய்து காரோ எனப்படும் மணிமாலையை அணிவிப்பர். மணமக்கள் சோறும் மீன் சூப்பும் இருக்கும் தாலமொன்றில் ஒன்றாக உணவுண்பர். நாட்டார் பாடல்களைக் குடும்பத்தார் பாட திருமணச் சடங்குகள் நடந்தேறும்.

இறப்புச் சடங்கு

லோத்துட் இனக்குழுவில் ஒருவரின் இறப்புக்குப் பின்பாக பிரிவு, தூய்மைப்படுத்தல் ஆகிய இரு சடங்குகளை முதல் நாள், மூன்றாம் நாள், ஏழாம் நாள், பத்தாம் நாள் ஆகிய நாட்களில் செய்யப்படும். 1930-களுக்கு முன்னர் லோத்துட் இனக்குழுவில் இறப்புக்குப் பின்பு மோகிஹாட் சடங்கு செய்யப்பட்டிருக்கிறது. இச்சடங்கின் போது இறந்தவர் கிடத்தி வைக்கப்பட்டிருக்கும் மூங்கில் தரையைச் சுற்றிலும் உள்ள பகுதி மூங்கில் கம்புகளால் அடிக்கப்படுகிறது. மூங்கில் தரை பிளவுற்றுச் சடலம் கீழே விழும் நிலப்பகுதியை அடக்கம் செய்வதற்குத் தேர்ந்தெடுக்கப்படும். அப்பகுதியில் கல்லறை அமைப்பதற்காக வீட்டைக் காலி செய்வர். 1930-களுக்குப் பின்னரான இறப்புச் சடங்குகளில் தாஜாவ் எனப்படும் பகுதியில் அமர்ந்த நிலையில் இறந்தவரின் சடலம் கிடத்தி வைக்கப்பட்டிருக்கும். 1960-களுக்குப் பின்னர், இஸ்லாம், கிறிஸ்துவம் போன்ற சமய வழக்கங்களை ஒட்டி லோத்துட் மக்களும் இறந்தவரின் உடலை அடக்கம் செய்கின்றனர்.

உசாத்துணை


✅Finalised Page