under review

லாவண்யா சுந்தரராஜன்

From Tamil Wiki
சுந்தரராஜன் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: சுந்தரராஜன் (பெயர் பட்டியல்)
லாவண்யா சுந்தரராஜன்
லாவண்யா சுந்தரராஜன்

லாவண்யா சுந்தரராஜன் (பிறப்பு: ஜூன் 19, 1971) தமிழ் கவிஞர், எழுத்தாளர். கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரைகள் என தொடர்ந்து இயங்கி வருகிறார். சிற்றில் என்றொரு இணைய தளத்தையும் இலக்கிய அமைப்பையும் நடத்தி வருகிறார்.

பிறப்பு, கல்வி

உ. ரா. சுந்தரராஜன் - கி. மனோன்மணி இணையருக்கு மகளாக ஜூன் 19,1971 அன்று முசிறியில் பிறந்தார். தாத்தையங்கார் பேட்டை அரசினர் மேல்நிலை பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை பயின்றார். பின்னர் முசிறி அமலா மேல்நிலை பள்ளியில் பனிரெண்டாம் வகுப்புவரை பயின்றார். திருச்சி சீதாலட்சுமி ராமசாமி கல்லூரியில் தொழில் துறை மின்னணுவியல் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு பயின்றார். பின்னர் எம்.டெக் கணினி தொழில்நுட்ப படிப்பை தில்லி ஐ.ஐ.டியில் முடித்தார்.

தனி வாழ்க்கை

ரா. மனோகரனை ஆகஸ்ட் 9, 1996 அன்று மணந்தார். தற்போது பெங்களூரில் மென் பொருள் துறையில் பணியாற்றி வருகிறார்.

இலக்கிய வாழ்க்கை

லாவண்யா கவிஞராக அறிமுகமானார். 2009-ம் ஆண்டு அவரது முதல் கவிதை தொகுப்பான 'நீர்கோல வாழ்வை நச்சி' வெளியானது. கவிதை தொகுப்புக்கு பிறகு ஒரு சிறுகதை தொகுப்பும் நாவலும் வெளிவந்துள்ளது. குழந்தையின்மையை கருப்பொருளாகக் கொண்ட காயாம்பூ என்னும் நாவல் விமர்சகர்களால் குறிப்பிடத்தக்க படைப்பாக கருதப்படுகிறது.சுந்தர ராமசாமி, தி. ஜானகிராமன், அசோகமித்திரன், ஜெயகாந்தன், சுகுமாரன், மனுஷ்யபுத்திரன், எம். கோபாலகிருஷ்ணன், மோகனரங்கன் ஆகியோரை தனது இலக்கிய ஆதர்சமாக கருதுகிறார்.

இதழியல்

ஒவ்வொரு மாதமும் வெளியாகும் சிறுகதைகளை பற்றி விவாதிக்கும் 'சிற்றில்' என்றொரு இணைய தளத்தையும் நடத்தி வருகிறார். சிற்றில் ஒரு இலக்கிய அமைப்பாகவும் செயல்படுகிறது. எழுத்தாளர்களுக்கான முழுநாள் அமர்வுகளை நடத்தி வருகிறது. இதுவரை எம். கோபாலகிருஷ்ணன், யூமா வாசுகி, யுவன் சந்திர சேகர், விட்டால் ராவ் ஆகியோருக்கு முழுநாள் அரங்குகள் ஒருங்கிணைத்துள்ளார்கள்.

இலக்கிய இடம்

லாவண்யா சுந்தரராஜன் கவிஞராகவும் சிறுகதையாசிரியராகவும் அறியப்படுகிறார். இலக்கிய அரங்குகளை ஒருங்கிணைக்கும் இலக்கியச் செயல்பாட்டாளராகவும் பங்காற்றி வருகிறார். காயாம்பூ என்னும் நாவல் குறிப்பிடத்தக்கது.

நூல்பட்டியல்

கவிதைகள்
  • நீர்கோல வாழ்வை நச்சி
  • இரவைப் பருகும் பறவை
  • அறிதலின் தீ
  • மண்டோவின் காதலி
சிறுகதை
  • புறாக்களை எனக்குப் பிடிப்பதில்லை
நாவல்
  • காயாம்பூ

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:37:23 IST