under review

லாபீஸ் தமிழ்ப்பள்ளி

From Tamil Wiki
பள்ளியின் பழைய கட்டிடம்

லாபீஸ் தமிழ்ப்பள்ளி மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தின் லாபீஸ் நகரத்தில் அமைந்துள்ளது. அரசாங்க முழு உதவி பெறும் இப்பள்ளியின் பதிவு எண் JBD 7061.

வரலாறு

லாபீஸ் தமிழ்ப்பள்ளி இரு பள்ளிகள் இணைந்து உருவான வரலாற்றைக் கொண்டது. 1931-ல் மெல்வெலி தோட்டத் தமிழ்ப்பள்ளி (சுங்கை லாபீஸ் தோட்டம்) தொடங்கியது. 1935-ல் நோர்த் லாபீஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளி தொடங்கியது. இப்பள்ளிகளைப் பள்ளியின் நிர்வாகக் குழுத் தலைவரான தோட்ட நிர்வாகி H.D.லிங் கவனித்து வந்தார். இவ்விரண்டு பள்ளிகளையும் இணைத்து ஒன்றாக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. தொடக்கத்தில் இத்திட்டத்திற்குப் பெற்றோர் மத்தியில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. அக்காலகட்டத்தில் பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்த துன் சாமிவேலுவின் ஆலோசனையின்பேரில் பெற்றோர் இசைந்தனர். ஜனவரி 1, 1985-ல் லாபீஸ் தமிழ்ப்பள்ளி எனும் பெயரில் அரசாங்க முழு உதவி பெறும் பள்ளியாகச் செயல்படத் தொடங்கியது. சுமார் 300 மாணவர்கள், 20 ஆசிரியர்கள் இருந்தனர். இரா. சுப்பையா தலைமையாசிரியராகப் பொறுப்பு வகித்தார்.

வசதிகள்

பள்ளியின் புதிய கட்டிடம்

லாபீஸ் தமிழ்ப்பள்ளி ஒரு மூன்று மாடிக்கட்டிடத்தையும் ஓர் இரண்டு மாடிக்கட்டிடத்தையும் கொண்டுள்ளது. 2000 -ல் கணினி மையம் அமைக்கப்பட்டது. லாபீஸ் தமிழ்ப்பள்ளியில் இரண்டு பாலர் வகுப்புகள் நடைபெறுகின்றன. சு. வசந்தி தலைமைப் பொறுப்பேற்றபோது சிற்றுண்டிச்சாலை, அறிவியல் அறை, ஆசிரியர் அறை, கழிவறைகள் சீரமைக்கப்பட்டன. பெற்றோர் ஆசிரியர் சங்க உதவியுடன் பள்ளி மண்டபத்தில் மேடை அமைக்கப்பட்டது. 2020 -ல் லாபீஸ் தமிழ்ப்பள்ளிக்கான பள்ளிப்பாடலையும் பள்ளிக் கொடியையும் தலைமையாசிரியர் இரா. வாசுகி உருவாக்கினார்.

இன்றைய நிலை

லாபீஸ் தமிழ்ப்பள்ளியில் சுமார் 146 மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். 16 ஆசிரியர்களுடன் இப்பள்ளி செயல்பட்டு வருகின்றது.


✅Finalised Page