ரஜினி பெத்துராஜா
ரஜினி பெத்துராஜா (பிறப்பு: செப்டம்பர் 29, 1958), கவிஞர், எழுத்தாளர். சிறார்களுக்குரிய நூல்களையும் பொது வாசிப்புக்குரிய நூல்களையும் எழுதினார். அழ.வள்ளியப்பா விருது உள்படப் பல்வேறு விருதுகள் பெற்றார்.
பிறப்பு, கல்வி
ரஜினி பெத்துராஜா, செப்டம்பர் 29, 1958 அன்று, டி.சி.ஆர். கோதண்டராம ராஜா - தேவகி இணையருக்குப் பிறந்தார். திருநெல்வேலி காந்திமதி மேல்நிலைப் பள்ளியிலும், ராஜபாளையம் ஏ.கே.டி. தர்மராஜா பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் பள்ளிக் கல்வி கற்றார்.
தனி வாழ்க்கை
ரஜினி பெத்துராஜா மணமானவர். கணவர் என்.ஏ. பெத்துராஜா, உலக சமாதானக் குழுவில் உறுப்பினராகப் பணியாற்றினார். இவர்களுக்கு ஒரே மகன் என்.ஏ.பி. விக்னேஷ்.
இலக்கிய வாழ்க்கை
ரஜினி பெத்துராஜா, சிறார் படைப்புகளில் ஆர்வம் கொண்டு செயல்பட்டார். ரஜினி பெத்துராஜா எழுதிய சிறார்களுக்கான பாடல்கள் தினமணி சிறுவர்மணியில் வெளியாகின. தொடர்ந்து சிறார்களுக்கான பாடல் நூல்களையும், சிறுகதை மற்றும் கட்டுரை நூல்களையும் எழுதினார். 'சின்னஞ்சிறுகிளியே கண்ணம்மா' என்னும் ரஜினி பெத்துராஜாவின் சிறுகதைத் தொகுப்பு நூல், 'Service to Smile' என்ற தலைப்பில், ஜெயா பாலசுப்பிரமணியத்தால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. ரஜினி பெத்துராஜா, சிறார்களுக்காக எழுதிய 'Above the sky' என்ற பாடல் நூல், தமிழ் மற்றும் ஆங்கிலம் என இருமொழிகளில் வெளியானது.
ரஜினி பெத்துராஜாவின் சிறார்களுக்கான சிறுகதைகள் பள்ளிகளில் நாடகமாக்கப்பட்டு அரங்கேற்றப்பட்டன. ரஜினி பெத்துராஜாவின் பல சிறார் படைப்புகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டன. சிறுகதைகளில் சில பள்ளிகளில் நாடகமாக்கப்பட்டு அரங்கேற்றப்பட்டன.
அமைப்புச் செயல்பாடுகள்
- ரஜினி பெத்துராஜா, காந்தியின் பெயர்த்தி ஏலாகாந்தியின் அழைப்பின் பேரில், தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற சத்தியாக்கிரக நூற்றாண்டு விழாவில், உலக சமாதானக்குழு உறுப்பினராகக் கலந்துகொண்டார்.
- ரஜினி பெத்துராஜா, துருக்கி இளைஞர் அணி மாநாட்டில் கலந்து கொண்டு இந்தியாவின் சிறப்புகளை நடனம் மூலம் வெளிப்படுத்தினார்.
- ரஜினி பெத்துராஜா, சிறார்களுக்குக் கதைசொல்லியாகச் செயல்பட்டார். தனியார் பள்ளி ஒன்றின் புரவலராக உள்ள ரஜினி பெத்துராஜா குழந்தைகள் மீது கொண்ட ஆர்வத்தால் அவர்களைத் தன் வீட்டிற்கே வரவழைத்துக் கதைசொல்வதை வழக்கமாக வைத்துள்ளார்.
விருதுகள்
- 'உலகம் எங்கள் குடும்பம்' என்ற பயணக்கட்டுரை நூல் தமிழக அரசால் சிறந்த நூலாகத் தேர்வு செய்யப்பட்டுப் பரிசு பெற்றது.
- 'தென்னப்பிரிக்காவைத் தெரிந்து கொள்வோம்' என்ற பயணக்கட்டுரை நூல், கம்பம் பாரதி இலக்கியப் பேரவையின் சிறந்த நூலுக்கான பரிசு பெற்றது.
- 'ராஜம்', 'தமிழ்நேயம்' இதழ்கள் நடத்திய சிறுகதைப் போட்டிகளில் பரிசு.
- 'கனா கண்டேன் தோழி' சிறுகதை, கோவை ஞானி நடத்திய பெண்கள் சிறுகதைப் போட்டிப் பரிசைப் பெற்றது.
- அழ. வள்ளியப்பா விருது
- புதுவை எழுத்தாளர் சங்கம் அளித்த 'சிறுவர் இலக்கியச் செல்வி' பட்டம்
- புதுவை சிறுவர் இலக்கியச் சிறகம் அளித்த 'சிறுவர் இலக்கியச் சீர்மணி' பட்டம்.
- தூத்துக்குடி மகாலஷ்மி கல்லூரி வழங்கிய 'சிறுவர் இலக்கிய மேதை' பட்டம்.
மதிப்பீடு
ரஜினி பெத்துராஜா சிறுகதை, கவிதை, பயணக்கட்டுரை, வாழ்க்கை வரலாறு என பல்வேறு தலைப்பில் பல நூல்களை எழுதினார். எளிமையான மொழியில், படிப்பினையூட்டும் கருத்துக்களைக் கொண்ட சிறார் நூல்களை எழுதினார். பொது வாசிப்புக்குரிய நூல்கள் சிலவற்றையும் எழுதினார். ராஜபாளையம் வாழ் சிறார் படைப்பாளர்களுள் குறிப்பிடத்தகுந்த ஒருவராக அறியப்படுகிறார்.
நூல்கள்
நாவல்
- விளையாடலாம் அப்பா
சிறுகதைத் தொகுப்பு
- கனாக்கண்டேன் தோழி
- யாரோ இல்லை எவரும்
- சின்னஞ்சிறுகிளியே கண்ணம்மா
- எட்டாவது அதிசயம்
சிறார் நூல்கள்
- உலகம் எங்கள் குடும்பம்
- தென்னப்பிரிக்காவைத் தெரிந்து கொள்வோம்
- அந்நிய மண்ணில் இந்திய ஞானி (ஸ்ரீ சிவாய சுப்ரமுனிய சுவாமிகளின் வாழ்க்கை வரலாறு)
- குழந்தைகளுக்குக் குமாரசாமிராஜா
சிறார் பாடல் நூல்
- Above the sky
கட்டுரை நூல்கள்
- பிரசாதப் பூக்கள்
- மயிலிறகாய் மாறலாம்
உசாத்துணை
- ரஜினி பெத்துராஜா கட்டுரை, காமதேனு தளம்
- ரஜினி பெத்துராஜா நூல்கள்
- ரஜினி பெத்துராஜா நூல்கள் காமன்ஃபோல்க்ஸ் தளம்
- தற்கால சிறார் எழுத்தாளர்கள். ஆர்.வி. பதி, நிவேதிதா பதிப்பகம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 31-Mar-2025, 10:12:11 IST