under review

ம. ஜோயல் டேவிட்சன் சாமுவேல்

From Tamil Wiki

ம. ஜோயல் டேவிட்சன் சாமுவேல் (ம. யோவேல்; சாம்) (பிறப்பு: ஆகஸ்ட் 18, 1930) கவிஞர், எழுத்தாளர், கீர்த்தனைப் பாடலாசிரியர். பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார். கிறிஸ்துவின் போதனைகளைப் பரப்பும் வகையில் பல நூல்களை இயற்றினார். ம. ஜோயல் டேவிட்சன் சாமுவேல் இயற்றிய ‘பவுலடியார் பாவியம்' குறிப்பிடத்தகுந்த கிறிஸ்தவக் காப்பியமாகக் கருதப்படுகிறது.

பிறப்பு, கல்வி

ம. ஜோயல் டேவிட்சன் சாமுவேல், ஆகஸ்ட் 18, 1930 அன்று, திருநெல்வேலி மாவட்டம் சுரண்டைக்கு அருகிலுள்ள ஊற்றுமலை கிராமத்தில், மணிமுத்து சாமுவேல் - மேரி பாக்கியம் இணையருக்குப் பிறந்தார். தொடக்கக் கல்வியை மேலச்சேவல் TDTA தொடக்கப்பள்ளியில் கற்றார். மேல்நிலைக் கல்வியை தூய யோவான் மேல்நிலைப்பள்ளியில் பயின்றார். பிஷப் சார்ஜென்ட் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் ஆசிரியர் பயிற்சி பெற்றார். சென்னைப் பல்கலைக் கழகத்தில் பயின்று வித்துவான் பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

ம. ஜோயல் டேவிட்சன் சாமுவேல், திருநெல்வேலி வட்டாரப் பள்ளிகளில், தொடக்கப்பள்ளி ஆசிரியராக, 1957 முதல் 1961 வரை பணியாற்றினார். 1961 முதல் 1971 வரை புதியம்புத்தூாரிலுள்ள யோவான் ஸ்நானகன் உயர்நிலைப் பள்ளியிலும், 1971 முதல் 1982 வரை சாயர்புரம், போப் நினைவு மேல்நிலைப்பள்ளியிலும், 1982 முதல் 1990 வரை பாளையங்கோட்டை தூய யோவான் மேல்நிலைப் பள்ளியிலும், தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார்.

ம. ஜோயல் டேவிட்சன் சாமுவேல், மணமானவர். மனைவி: லலிதா. மகள்கள்: சாந்தி சத்தியவதி; சுகந்தி கிருபவதி; லில்லியன் கெத்சி.

இலக்கிய வாழ்க்கை

ம. ஜோயல் டேவிட்சன் சாமுவேல், கிறிஸ்தவ சமயம் சார்ந்து பல நூல்களை எழுதினார். கிறிஸ்தவத் துதிப் பாடல்கள், நீதி மொழிகள், கவிதைகள், உரை நூல்களை எழுதினார். ம. ஜோயல் டேவிட்சன் சாமுவேல் எழுதிய பவுலடியார் பாவியம், இயேசு கிறிஸ்துவின் அடியவர்களில் ஒருவரான பவுலடியாரின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் குறிப்பித்தகுந்த காப்பிய நூலாகக் கருதப்படுகிறது.

மதிப்பீடு

தமிழாசிரியரான ம. ஜோயல் டேவிட்சன், தமிழ் இலக்கியங்களின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டு பல நூல்களைப் படைத்தவவராக அறியப்படுகிறார். சாமுவேல் எழுதிய, சாலமோனின் நீதிமொழிகளை அடிப்படையாகக் கொண்ட, ’நன்னெறிக் குறள்’ நூல் ஒரு புதுமையான முயற்சியாகக் கருதப்படுகிறது. கிறிஸ்தவ அடியவர்களை முதன்மைப் பாத்திரமாக வைத்துக் காப்பிய நூல்களை எழுதியவர்களில் முன்னோடிப் படைப்பாளியாக, ம. ஜோயல் டேவிட்சன் சாமுவேல் மதிப்பிடப்படுகிறார்.

நூல்கள்

  • இறைமகன் பிறப்பும் அருள் மகன் சிறப்பும் (1989)
  • பவுலடியார் பாவியம் (2003)
  • கிறிஸ்துவின் அன்பு (2005)
  • மதியின் சுவடுகள் (2016)
  • திருக்குமரன் அந்தாதி உரை (2017)
  • கலைவலார் கவிகள் (2019)
  • இசைத்தமிழ் பாடல்களும் இலக்கணமும் (2020)
  • கீர்த்தனையைப் பொருளுணர்ந்து பாடுவோம் (2020)
  • ஒளி பெருநாள் (2020)
  • நீதிமொழி குறள் (2020)

உசாத்துணை

  • கல்லிடைக்குறிச்சி J ஜான் ஞானராஜ் கட்டுரை, Christian Historical Society
  • கிறித்தவக் காப்பியங்கள், முனைவர் யோ. ஞான சந்திர ஜாண்சன், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியிடு, முதல் பதிப்பு, 2013.
  • ம. யோவேல், பவுலடியார் பாவியம், மணி பதிப்பகம், எண் 7. எம்.எல். பள்ளிநகர், பாளையங்கோட்டை-2, முதல் பதிப்பு: 2003


✅Finalised Page