under review

மோசசு மைக்கேல் ஃபாரடே

From Tamil Wiki
டாக்டர் மோசசு மைக்கேல் ஃபாரடே

மோசசு மைக்கேல் ஃபாரடே (பிறப்பு: நவம்பர் 10, 1955), கவிஞர், எழுத்தாளர், கிறிஸ்தவ இறையியல் ஆய்வாளர், பேச்சாளர், இதழாசிரியர். சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் பேராசிரியர், கலைப்புல முதன்மையர் மற்றும் பொறுப்பு முதல்வராகப் பணியாற்றினார் . இலக்கியம், இறையியல், கல்வியியல் எனப் பல தளங்களில் செயல்பட்டார். உள்நாடு மற்றும் வெளிநாட்டின் பல்வேறு மாநாடுகளிலும் கருத்தரங்குகளிலும் பங்களித்தார். அருட்கலைஞர் விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்றார்.

பிறப்பு, கல்வி

மோசசு மைக்கேல் ஃபாரடே, நவம்பர் 10, 1955 அன்று, காஞ்சிபுரத்தில், ஜேசுதாஸ் இராமச்சந்திரன் - கிருபாவதி இணையருக்கு ஒன்பதாவது மகனாகப் பிறந்தார். பெற்றோர் வைணவ மரபிலிருந்து கிறிஸ்தவத்தைத் தழுவியவர்கள். மோசசு மைக்கேல் ஃபாரடே, காஞ்சிபுரத்தில் பள்ளிக் கல்வி கற்றார். தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றார். கல்வியியலில் பட்டம் பெற்றார். இதழியல் மற்றும் மக்கள் தொடர்பில் பட்டயம் பெற்றார். ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றார். சித்தர் இலக்கியத்தையும் விவிலியத்தையும் ஒப்பிட்டு ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

மோசசு மைக்கேல் ஃபாரடே, சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகவும், தமிழ்த் துறைத் தலைவராகவும் பணியாற்றினார். பொறுப்பு முதல்வராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றார். இவரது திருமணம், குடும்பம் பற்றிய விவரங்களை அறிய இயலவில்லை.

டாக்டர், பேராசிரியர், மோசஸ் மைக்கேல் ஃபாரடே
மோசசு மைக்கேல் ஃபாரடே நூல்கள்

இலக்கிய வாழ்க்கை

மோசசு மைக்கேல் ஃபாரடே கவிஞராக இலக்கிய உலகுக்கு அறிமுகமானார். முதல் கவிதை 1980-ல் வெளியானது. தொடர்ந்து மனைமலர், பூக்கூடை, தமிழரசு, மாலைமுரசு, தரு எனப் பல இதழ்களில் கவிதை, கட்டுரைகளை எழுதினார். மதுரை உலகத் தமிழ் மாநாடு (1981), உலகக் கிறிஸ்தவத் தமிழ்ப் பேரவையின் நான்கு மாநாட்டுக் கருத்தரங்குகள் (1982, 1984, 1986, 1991), அலகாபாத் பாஷா சங்கம் நடத்திய தேசிய மாநாடு (1987), சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெள்ளிவிழாக் கருத்தரங்கு (1988), சென்னைப் பல்கலைக் கழகக் கிறித்தவத் துறையின் தேசிய மாநாடு (1994), நியூயார்க் அனைத்துலகக் கிறிஸ்தவ தமிழ் மாநாடு (1996), டொராண்டோ (கனடா) உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்க மாநாடு (1996), சித்தர் இலக்கிய மாநாடு (1999), கொழும்பு அனைத்துலக இஸ்லாமியத் தமிழிலக்கிய மாநாடு (2002), கோலாலம்பூர் அருள்மிகு முருகன் அனைத்துலக மாநாடு (2003), இந்தியப் பல்கலைக் கழகத் தமிழாசிரியர் மாநாடு, சென்னைப் பல்கலைக்கழகத் தமிழிலக்கியத் துறைக் கருத்தரங்கு, சொர்ணாம்பாள் அறக்கட்டளைப் பொழிவு போன்ற 50-க்கும் மேற்பட்ட மாநாடு மற்றும் கருத்தரங்குகளில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். ஆய்வுக் கட்டுரைகள் வாசித்தார்.

கிறிஸ்தவ இறையியல், தமிழர் வாழ்வியல், சித்தர் இலக்கியம், விவிலியம் குறித்துப் பல ஆய்வுகளை மேற்கொண்டு நூல்களாக வெளியிட்டார். மொழிபெயர்ப்பாளராகவும், பதிப்பாளராகவும் செயல்பட்டார். கிறிஸ்தவ இறையியல், தமிழியல், கல்வியியல், வாழ்வியல் போன்றவை குறித்து வானொலி, தொலைக்காட்சி மற்றும் யூ ட்யூப் போன்ற ஊடகங்கள் வழியாகச் சிறப்புரையாற்றினார். பல மாணவர்களுக்கு வழிகாட்டியாகச் செயல்பட்டு ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்டம் பெற உதவினார்.

மோசசு மைக்கேல் ஃபாரடே இந்தியா மற்றும் வெளிநாட்டில் உள்ள அனைத்து கிறிஸ்தவ மதச்சபைகளிலும் அங்கீகரிக்கப்பட்ட பரப்புரையாளராக மதப்பணியாற்றினார்.

பொறுப்பு

  • சுவிசேஷ போதகர்களின் ஃபெல்லோஷிப் உறுப்பினர்
  • சுவிசேஷ போதகர்கள் ஃபெல்லோஷிப் பப்ளிகேஷன் டிரஸ்ட் உறுப்பினர்
  • நம்பிக்கை தொலைக்காட்சியின் நிகழ்ச்சி ஆலோசகர்
  • உலக கிறித்தவ தமிழ்ப் பேரவைப் பொறுப்பாளர்

இதழியல்

மோசசு மைக்கேல் ஃபாரடே 'ஒரேவழி', 'தரு', 'நமது புது வாழ்வு' போன்ற இதழ்களில் ஆசிரியராகவும், துணையாசிரியராகவும் பணியாற்றினார்.

விருதுகள்

  • உலகக் கிறித்தவத் தமிழ்ப் பேரவை வழங்கிய அருட்கலைஞர் விருது (1986)
  • நியூயார்க் தமிழ்க் கிறித்தவக் கோயிலில் வழங்கப்பட்ட தகுதிமிகு சேவையாளர் பட்டம் (1996)
  • உலகக் கிறித்தவத் தமிழ்ப் பேரவை அளித்த தமிழ்மாமணி விருது (2000)

மதிப்பீடு

மோசசு மைக்கேல் ஃபாரடே கிறிஸ்தவ இறையியலாளர். கிறிஸ்தவத்திற்கும் தமிழுக்கும் உள்ள தொன்மையான தொடர்புகள் பற்றிப் பல ஆய்வுகளை மேற்கொண்டார். அது குறித்துப் பல ஊடகங்களில் சொற்பொழிவாற்றினார். ஆய்வுக்கட்டுரைகளை, நூல்களை எழுதினார். மோசசு மைக்கேல் ஃபாரடே, கிறிஸ்தவம் சார்ந்த குறிப்பிடத்தகுந்த ஆய்வாளர்களுள் ஒருவராக அறியப்படுகிறார்.

நூல்கள்

கவிதை நூல்கள்
  • சிலுவையினடியில் சிந்திய மலர்கள்
  • ஏட்டில் வடித்த தேன்
கட்டுரை/ஆய்வு நூல்கள்
  • சிலுவை வழிச் சிந்தனைகள் (அருளுரைகள் தொகுப்பு)
  • தமிழ் சித்தர் பாடல்களும் விவிலியமும் (ஆய்வு நூல்)
  • ஞான நொண்டி நாடகம் (தஞ்சை வேதநாயக சாஸ்திரின் நூலுக்கான உரை விளக்கம்)
  • தஞ்சை வேதநாயகர் தமிழ் கொடை
  • முத்தமிழ் முத்துக்கள் மூன்று (தஞ்சை வேதநாயக சாஸ்திரியரின் மூன்று செவ்வியல் படைப்புகளின் உரை விளக்கம்)
மொழிபெயர்ப்பு நூல்கள்
  • ஒரு கிறிஸ்துவ ஆசிரியர் உருவாகிறார்
  • பெந்தேகொஸ்தே நூற்றாண்டு
  • தாகமுள்ள நிலத்தின்மேல் தண்ணீர் பெருக்கு
பதிப்பித்த நூல்கள்
  • ஈரக் குழல் பூக்கள் - பிஷப் ஹீபர் கல்லூரி மாணவர்களின் கவிதைப் படைப்புகள்
  • ஹென்றி ஆல்ஃப்ரெட் கிருஷ்ணபிள்ளையின் இரட்சண்ய யாத்திரிகம் (3 தொகுதிகள்)
  • வகுப்பறையில் விசுவாசம்
  • தாமஸ் மலை குறவஞ்சி
  • செருமானிய தமிழர் சீகன்பால்க் - வாழ்வும் பணிகளும் - அருட்தந்தை ரெனியஸ் தேவபிரசாத்
  • கிறிஸ்தவம் மற்றும் இந்து மதம் - டாக்டர் ராபர்ட் கால்ட்வெல்

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 26-Jul-2024, 19:16:11 IST