under review

மேல்மலையனூர் ரிஷபநாதர் கோயில்

From Tamil Wiki
மேல்மலையனூர் ரிஷபநாதர் கோயில்

மேல்மலையனூர் ரிஷபநாதர் கோயில் வடதமிழ்நாட்டில் (தொண்டைமண்டல) விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் அமைந்த சமணக் கோயில்.

இடம்

விழுப்புரம் மாவட்டம் (தென்ஆர்க்காடு) மாவட்டத்தில் செஞ்சியிலிருந்து பதினாறு கிலோமீட்டர் வடக்கிலுள்ள மேல் மலையனூரில் முதலாவது தீர்த்தங்கரராகிய ரிஷபநாதரின் கோயில் உள்ளது.

வரலாறு

மேல்மலையனூர் ரிஷபநாதர் கோயில் சோழ அரசர்கள் காலத்திலேயே கட்டப்பட்டதென்றும், பின்னர் அது அழிந்து போனமையால் பிற்காலத்தில் புதியதாக அந்த இடத்திலேயே கோயில் உருவாக்கப்பட்டதென்றும் கூறப்படுகிறது. சரியான காலவரையைக் கண்டடைய இயலவில்லை.

அமைப்பு

மேல்மலையனூர் கோயில் ( நன்றி aroundarunai)

ஆதிநாதர்கோயில் கருவறை, மண்டபம் ஆகிய பகுதிகளையும் அவற்றிற்கு வடதிசையில் சிறிய கருவறைகள் இரண்டினையும் கொண்டது. கருவறையினுள் மூன்றரையடி உயரமுள்ள ஆதிநாதரின் சிற்பம் உள்ளது. தாமரை மலராலான பீடத்தில் தியானத்தில் அமர்ந்தவாறு காட்சியளிக்கும் ரிஷபதேவரின் தலைக்கு மேல்புறம் முக்குடையும், அவரது இருமருங்கிலும் சாமரம் வீசுவோர் சிற்பங்களும் உள்ளன. இச்சிற்பத்தின் பீடத்தில் ரிஷபநாதரின் இலாஞ்சனையாகிய இடபம் சிறிய அளவில் உள்ளது.

கருவறைறையை ஒட்டியுள்ள மண்டபத்திற்கு வடக்குப்பகுதியில் சிறிய அளவிலான இரு கருவறைகள் உள்ளன. ஒன்றில் பிரம்மதேவர் யானையின் மீது அமர்ந்தவாறு விளங்கும் சிற்பமும், மற்றொன்றில் தருமதேவியின் திருவுருவமும் உள்ளன. தருமதேவியின் காலுக்கருகில் பணிப்பெண்ணும், அடுத்த குழந்தையின் திருவடிவும் செதுக்கப்பட்டுள்ளன. இச்சிற்பங்கள் தற்காலக்கலைப்பாணியைக் கொண்டு விளங்குகிறது.

இங்குள்ள மண்டபத்தின் சுவரிலும், தூண்களிலும் சிறிய வடிவிலான சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. சுவரில் முக்குடையின் கீழ் அமர்ந்த நிலையிலுள்ள தீர்த்தங்கரர் சிற்பம் உள்ளது. மண்டபத்தின் தூண்களில் பிரம்ம தேவர், தருமதேவி, பத்மாவதி, சாமரம் வீசுவோர் ஆகியோரது புடைப்புச் சிற்பங்கள் உள்ளன. கோயிலுக்குத் தென்புறத்தில் சிதைந்த நிலையிலுள்ள தருமதேவியின் சிற்பம் கவனிக்கப்படாமல் உள்ளது.

வழிபாடு

மேல்மலையனூர் கோயில் நுழைவாயில்

மேல் மலையனூரில் முன்பு சமண சமயத்தவர் மிகுந்திருந்தமையால் இங்குள்ள கோயில் நன்கு பராமரிக்கப்பட்டு வழிபாடுகள் தடையின்றி நடைபெற்றதாகவும், ஆண்டுக்கொருமுறை திருவிழா சிறப்புறக் கொண்டாடப்பட்டதாகவும் கூறப்படுகிறது. காலப்போக்கில் அவை தொடர்ந்து நடைபெறாமல் பின்னர் கோயில் சீர் செய்யப்பட்டு, வழிபாடு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

உசாத்துணை

  • தொண்டை நாட்டுச் சமணக் கோயில்கள் (டாக்டர்.ஏ. ஏகாம்பர நாதன்); 1991


✅Finalised Page