under review

மெளனப்புயல்

From Tamil Wiki
மௌனப்புயல்

மௌனப்புயல் (1985 ) வாசந்தி எழுதிய நாவல். பஞ்சாப் கிளர்ச்சியை பின்புலமாகக் கொண்டது. பஞ்சாப் கிளர்ச்சியின் பின்னணியில் தமிழில் எழுதப்பட்ட ஒரே நாவல்

எழுத்து,வெளியீடு

வாஸந்தி எழுதிய இந்நாவல் 1985 ல் கல்கி வார இதழில் தொடராக வெளிவந்தது. கங்கை புத்தகநிலையம் இதை நூலாக வெளியிட்டது. 1984 நவம்பர் மாதம் சீக்கியர்களுக்கு எதிரான டெல்லி கலவரம் நடைபெற்ற பின் தன் மகனின் நண்பனான சீக்கிய இளைஞன் ஜஸ்விந்தர் சிங் தாடியை மழித்து அடையாளம் தெரியாதவனாக ஆகிப்போயிருந்ததையும் அவனிடமிருந்த அச்சத்தையும் கண்டு அடைந்த உணர்ச்சிகளே அந்நாவல் உருவாவதன் அடிப்படை என்று வாசந்தி ஓர் உரையாடலில் குறிப்பிட்டார்.

கதைப்பின்னணி

பஞ்சாபில் 1950 முதல் 1956 வரை ஒருங்கிணைந்த பஞ்சாபுக்கான போராட்டம் பஞ்சபை சுபா என்னும் பேரில் நடைபெற்றது. ஆனால் அந்த இயக்கம் தோல்வி அடைந்து, பழைய பஞ்சாபியர் பஞ்சாப், ஹரியானா , இமாச்சலப்பிரதேசம் என மூன்று மாநிலங்களிலாகச் சிதறுண்டனர். 1970களில் பஞ்சாபை தனிநாடாக அறிவிக்கக் கோரும் காலிஸ்தானி இயக்கம் உருவாகியது. பல அரசியல் படுகொலைகளுக்குப் பின் ஜூன் 1984ல் சீக்கியர்களின் பொற்கோயிலை இந்திய ராணுவம் தாக்கி பிந்திரன்வாலே உள்ளிட்ட கிளர்ச்சியாளர்களைக் கொன்றது. அதன் எதிரொலியாக பிரதமர் இந்திராகாந்தி 1984 அக்டோபர் 31-ம் தேதி தன் மெய்க்காவலர்களால் கொல்லப்பட்டார். அதையொட்டி டெல்லியில் சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் நடைபெற்றது. பின்னர் ராணுவ நடவடிக்கைகள் வழியாக பஞ்சாப் கலவரம் ஒடுக்கப்பட்டது.

கதைச்சுருக்கம்

மௌனப்புயல் நாவலில் கதைநாயகி ரஞ்சனி டெல்லி கல்லூரி மாணவி. அவள் தோழி சீக்கியப்பெண் ரூபா. சீக்கியப்பிரச்சினையை அவர்கள் விவாதிக்கும் போது அவர்களிடையே விரிசல் உருவாகிறது. ரஞ்சனி கல்லூரி பேராசிரியர் மன்மோகன் சிங் மீது ஈடுபாடு கொண்டிருக்கிறாள். இந்திய ராணுவம் பொற்கோயிலில் நுழைகிறது. சீக்கியர் கிளர்ச்சி செய்ய அதைச் செய்தியாக ஆக்க ரஞ்சனி பஞ்சாப் செல்கிறார். கலவரம் மறையும் நேரத்தில் இந்திராகாந்தி கொலைசெய்யப்பட டெல்லியில் கலவரம் வெடிக்கிறது. ரூபாவின் காதலன் கொல்லப்பட அவள் ரஞ்சனியை விட்டு விலகி விடுகிறாள். மன்மோகன் பஞ்சாப் செல்கிறான். அவனை தேடிச்செல்லும் ரஞ்சனி அவனிடம் தன் காதலைச் சொல்ல அவன் தான் போராளி ஆகவிருப்பதாகச் சொல்லி அக்காதலை நிராகரிக்கிறான். அவள் அவனுக்காக காத்திருப்பேன் என்று சொல்லி விடைபெறுகிறாள்.

இலக்கிய இடம்

பொதுவாசிப்புக்குரிய நாவல் இது. காதலை மையச்சரடாகக் கொண்டு பஞ்சாப் பிரச்சினையை ஆராய்கிறது. ஆனால் அறச்சார்புடனும் நடுநிலையுடனும் எல்லா தரப்பையும் பேசுகிறது. சீக்கியர்களின் சீற்றத்தை பதிவுசெய்வதனால் முக்கியமான படைப்பாக கருதப்படுகிறது

மொழியாக்கம்

Silent Storm 1990 . Translator. Narayanan

உசாத்துணை


✅Finalised Page