under review

மு. முத்து சீனிவாசன்

From Tamil Wiki
மு. முத்து சீனிவாசன்

மு. முத்து சீனிவாசன் (சொல்லருவி முத்து சீனிவாசன்) (பிறப்பு: ஜனவரி 6, 1944) எழுத்தாளர், கவிஞர், சொற்பொழிவாளர். புதுக்கோட்டை இலக்கியப் பேரவைத் தலைவர். புதுக்கோட்டை அரசு அருங்காட்சியகத்தில் பணியாற்றினார். புதுக்கோட்டை இலக்கியப் பேரவையின் சார்பில் 600-க்கும் மேற்பட்ட சாதனையாளர்களைக் கௌரவித்தார். தனது இலக்கியப் பணிக்காகப் பல்வேறு விருதுகள் பெற்றார்.

பிறப்பு, கல்வி

மு. முத்து சீனிவாசன், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நதிக்குடி கிராமத்தில், ஜனவரி 6, 1944 அன்று, முத்து ஐயங்கார்-ரங்கநாயகி இணையருக்குப் பிறந்தார். நதிக்குடியில் உள்ள சரஸ்வதி வித்யாலயாவில் தொடக்கக் கல்வி கற்றார். மேற்கல்வியை காரைக்குடி ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் கலாசாலையில் பயின்றார்.

மு. முத்து சீனிவாசன்

தனி வாழ்க்கை

முத்து சீனிவாசன், புதுக்கோட்டை அரசு அருங்காட்சியகத்தில் இளநிலை உதவியாளராகப் பணியாற்றினார். 38 ஆண்டுகள் பணியாற்றி, 2001-ல், தலைமை எழுத்தராக ஓய்வு பெற்றார். ‘வாசன் கபே’ என்ற உணவகத்தைச் சில காலம் நடத்தினார். மனைவி ரங்கநாயகி. மகன் மு. பிரசன்ன வெங்கடேஷ். மூன்று மகள்கள்

இலக்கிய வாழ்க்கை

முத்து சீனிவாசன் நூலகங்களில் வாசித்தும், காரைக்குடி கம்பன் விழாக்களில் சொற்பொழிவாற்றியவர்களின் பேச்சைக் கேட்டும் தனது இலக்கிய ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார். ‘எழில்’ என்ற புனை பெயரில் கவிதைகள் எழுதினார். கவிஞராகவும், சொற்பொழிவாளராகவும் தன்னை வளர்த்துக் கொண்டார். நல்லி குப்புசாமிச் செட்டியார் தொடங்கி பல்வேறு சாதனையாளர்களின் வாழ்க்கை வரலாற்றை ஆவணப்படுத்தினார்.

நாடக வாழ்க்கை

முத்து சீனிவாசன் ’அன்பின் ஒளி’, ‘மாமியாரா மருமகளா’ போன்ற நாடகங்களுக்குப் பாடல்கள் எழுதினார். நாடகங்களில் நடித்தார்.

புதுக்கோட்டை இலக்கியப் பேரவை விருது

புதுக்கோட்டை இலக்கியப் பேரவை விருதுகள்

மு. முத்துசீனிவாசன், நண்பர்களுடன் இணைந்து 2002-ல், ‘புதுக்கோட்டை இலக்கியப் பேரவை’யை ஆரம்பித்தார். அதற்கு முன்பே ஆறு வருடங்கள் வரை தமிழ்நாடு அரசு அலுவலர் கழகத்தின் மூலம் சாதனையாளர்களுக்கு விருதளித்து வந்தார். 2001-ல் பணி ஓய்வு பெற்றதால், 2002 முதல் ‘புதுக்கோட்டை இலக்கியப் பேரவை’ மூலம் விருதளிக்கத் தொடங்கினார்.

ஆரம்பத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்த, வாழும் சாதனையாளர்களுக்கு விருதளிக்கப்பட்டது. பின்னர் தமிழ்நாடு மற்றும் இந்திய அளவில் சாதனை செய்திருக்கும் தமிழ்ச் சாதனையாளர்களுக்கு விருதளித்தனர். கலைஞர்கள், மருத்துவர்கள், பொறியியலாளர்கள், மக்கள் நலப் பணியாளர்கள், சமூகநல ஆர்வலர்கள், தொழிலதிபர்கள், ஆன்மிகவாதிகள் என பல தரப்பட்ட மனிதர்களுக்கு, அவர்களது சாதனைகளுக்காக விருதுகள் வழங்கப்பட்டன. புதுக்கோட்டை இலக்கியப் பேரவை 600-க்கும் மேற்பட்ட சாதனையாளர்களுக்கு விருது வழங்கியுள்ளது. பொன்னாடையும், பட்டமும், பதக்கமும், பாராட்டுச் சான்றும் கொண்டது இவ்விருது. மூத்த சாதனையாளர்களுக்கு ’வாழ்நாள் சாதனையாளர்’ விருதும் வழங்கப்படுகிறது.

விருதுடன் விருது பெறும் சாதனையாளர்களின் வாழ்க்கைக் குறிப்புகளுடம் தொகுக்கப்பட்டு நிகழ்வில் நூலாக வெளியிடப்படுகிறது.

முதல்வர் எம். ஜி. ராமச்சந்திரனிடமிருந்து பாராட்டு

பொறுப்புகள்

  • தமிழ்நாடு அரசு அலுவலர் கழகத்தின் மாவட்டத் தலைவர்
  • தமிழ்நாடு அரசு அலுவலர் கழகத்தின் மாநிலப் பொதுச் செயலாளர்
  • புதுக்கோட்டை தமிழ்ச்சங்கத்தின் துணைத் தலைவர்
  • உலகத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர்
  • கண்ணதாசன் இலக்கிய மைய நெறியாளர்
  • பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர்

விருதுகள்

  • சொல்லருவி
  • இலக்கியத் தேனீ
  • சாதனைச் செம்மல்
  • பேச்சுத் திலகம்
  • நல்மனச் செம்மல்
  • சாதனை மாமணி
  • விழா வித்தகர்
  • பாராட்டும் பல்கலைக்கழகம்
  • அன்புப் பாலம் விருது
  • சமூக மத நல்லிணக்க விருது
  • சென்னை கம்பன் கழக விருது
  • கி.வா.ஜ. இலக்கிய விருது
  • மகாத்மா காந்தி நூலக விருது
  • திருவள்ளுவர் விருது
  • பாரதியார் விருது
  • இலக்கியச் சாரல் விருது
  • வரலாற்று நாயகர் விருது
  • தமிழக அரசின் ‘தமிழ்ச் செம்மல்’ விருது

இலக்கிய இடம்

மு. முத்துசீனிவாசன் கவிஞர், எழுத்தாளர் என்று செயல்பட்டாலும் சொற்பொழிவாளராகவே அறியப்படுகிறார். 600-க்கும் மேற்பட்ட சாதனையாளர்களின் வாழ்க்கையை 20 நூல்களாகத் தொகுத்துள்ளமை இவரது முக்கிய சாதனையாக மதிப்பிடப்படுகிறது.

மு. முத்து சீனிவாசன் - தமிழ்ச் செம்மல் விருது (படம் நன்றி: தென்றல் இதழ்)
நல்லி குப்புசாமிச் செட்டியார் பாராட்டு (படம் நன்றி: தென்றல்)

ஆவணம்

‘கவிஞர்கள் பார்வையில் சொல்லருவி மு. முத்துசீனிவாசன்’ என்ற நூலை, கன்னிக்கோவில் ராஜா தொகுத்துள்ளார்.

மு.. முத்து சீனிவாசன் நூல்கள்

நூல்கள்

  • புதுக்கோட்டையின் சில சாதனையாளர்கள்
  • புதுக்கோட்டைக்குப் புகழ் சேர்க்கும் செம்மல்கள்
  • புதுக்கோட்டையின் புகழ் மாமணிகள்
  • உழைப்பின் சிகரம் - நல்லி குப்புசாமிச் செட்டியார் வாழ்க்கை வரலாறு
  • பல்கலை வித்தகர் கவிஞர் தங்கம் மூர்த்தி
  • பார்வதி மைந்தன் வி.என். சிதம்பரம்
  • ஒளி தரும் தீபங்கள்
  • சாதனை முத்துக்கள்
  • வேருக்கு நீர்
  • தடாகத் தாமரைகள்
  • சிறகை விரித்துப் பறப்போம்
  • நந்தவனப் பூக்கள்
  • புகழ்த் தோட்டத்தில் பூத்திருக்கும் நறுமலர்கள்
  • கண்களில் தெரிகின்ற வானம்
  • சிகரம் தொடும் செம்மல்கள்
  • வியர்வையின் வெற்றிகள்
  • சாதனையாளர்களின் சரித்திரப் பக்கங்கள்
  • இதயம் தொட்ட இமயங்கள்
  • வெற்றிப் பயணத்தில் மின்னும் வைரங்கள்
  • உழைப்பால் உயர்ந்த மனிதர்கள்
  • அர்ச்சனைப் பூக்கள்
  • புகழ் மாலை

உசாத்துணை


✅Finalised Page