under review

மு. சிவலிங்கம்

From Tamil Wiki
மு. சிவலிங்கம் (நன்றி- மு. இளங்கோவன்)

மு. சிவலிங்கம் (செப்டம்பர் 12, 1951 - பிப்ரவரி 13, 2024) கணினித்தமிழ் அறிஞர், ஆசிரியர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர், இதழாசிரியர், தொழில்நுட்ப வல்லுநர். கணினித்தமிழ் சார்ந்த நூல்களை எழுதினார். கணிப்பொறி மென்பொருள் உருவாக்கத்திலும், தமிழில் கணினிக் கலைச்சொல் அகராதி உருவாக்கத்திலும் முக்கியப் பணியாற்றியவர்.

பிறப்பு, கல்வி

மு. சிவலிங்கம் திண்டுக்கல் மாவட்டம் கூவக்காப்பட்டி என்னும் ஊரில் முனியப்பன், சின்னக் கண்ணம்மாள் இணையருக்கு செப்டம்பர் 12, 1951-ல் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் ஒரு அண்ணன், ஒரு அக்காள். வெள்ளைய கவுண்டனூர் தொடக்கப்பள்ளியிலும், கூவக்கப்பாட்டிப் பள்ளியிலும், வேடசந்தூர் அரசு உயர்நிலைப் பள்ளியிலும் பள்ளிக் கல்வி பயின்றார். சிவகாசி அய்யநாடார் கல்லூரியில் கணிதத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். கணிதம், தமிழ், கணினிப் பயன்பாடு, தொழிலாளர் சட்டம், மனித வள மேம்பாடு உள்ளிட்ட துறைகளில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

மு. சிவலிங்கம் சாரதாவை மணந்தார். மனைவி பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் கோட்டப் பொறியாளராகப் பணிபுரிந்தார். மகள் ஜென்னி சினேகலதா. மகன் லெனின் ரவீந்தரநாத்.

மு. சிவலிங்கம் இந்திய அரசின் தொலைத்தகவல் தொடர்புத் துறையில் முப்பத்தி மூன்று ஆண்டுகள் பொறியாளராகப் பணியாற்றி 2007-ல் விருப்ப ஓய்வு பெற்றார்.

தமிழ் கணிணிக்குச் செய்த பங்களிப்புகள்

மு. சிவலிங்கம் கணினிக் கலைச்சொல் அகராதி உருவாக்கத்தில் முக்கியப் பணியாற்றியவர். தமிழக அரசு அமைத்த பல்வேறு குழுக்களில் இருந்து கணினி, தொழில்நுட்ப மேம்பாட்டுக்குப் பணியாற்றியவர். தமிழ் இணையக் கல்விக் கழகத்திற்காக, கணினி பற்றிய பாடங்களை எழுதினார். கணினி தொடர்பான பருவ இதழ்களில் பல ஆண்டுகள் எழுதினார்.

மென்பொருள் உருவாக்கம்
  • எம்எம்எஸ் (Mux Maintenance System) என்னும் மென்பொருளை 1989-ல் உருவாக்கினார். இதனால் அலுவலகத்தில் காகிதத்தாள்களின் தேவையைக் குறைத்தார்.
  • தமிழ்நாடு வட்டத் தொலைதொடர்புத் தலைமையகத்தில் பணிபுரிந்தபோது மிஸ்ட் (Management Information System for Telecom) என்னும் மேலாண்மைத் தகவல் மென்பொருளை உருவாக்கி, தமிழ்நாடு முழுவதும் மாவட்ட அலுவலகங்களில் அவற்றை நிறுவினார்.
  • மாணவர்களின் இறுதித் தேர்வு முடிவுகளை தர வரிசைப்படி வெளியிடும் மார்க்சிஸ்ட் (MarkSyst) என்னும் மென்பொருளை உருவாக்கினார்.
  • தலைமைப் பொது மேலாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் புகார்களைக் கையாள மாக்பிஜி (Ministry of Communication Public Grievence) என்னும் மென்பொருளை உருவாக்கினார்.
  • வளர்தமிழ் பதிப்பகத்துக்கு (வளர்தொழில், தமிழ் கம்ப்யூட்டர் வெளியீட்டாளர்) பத்திரிகைச் சந்தாக்களைக் கையாளும் சப்ஸ்கிரிப் (Subscrip) என்னும் மென்பொருளைத் தயாரித்தார்.
  • ஓசிபி வகைத் தொலைபேசியகங்களில் மின்காந்த நாடாவிலிருந்து தொலைபேசி அழைப்புகளின் விவரங்களைப் படித்தறிவதற்காக ஓசிபிஎட்ரெட் (OCBEdRet – OCB Exchange Data Retrieval) என்னும் மென்பொருளை உருவாக்கிக் கொடுத்தார்.
  • தமிழ் ஓசிஆருக்குப் (Optical Character Recognition) பயன்படக் கூடிய, ஆவண உருவரை உணர்தலுக்கான (Document Layout Recognition) மென்பொருளை, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் உருவாக்கினார்.
கணிப்பொறி ஆசிரியர் பணி

1996 முதல் 2003 வரை தொலைத் தகவல்தொடர்புத் துறையின் பயிற்சி மையத்தில் கணிப்பொறி ஆசிரியராகப் பணிபுரிந்தார். அதே காலகட்டத்தில் பாரதிதாசன் பல்கலைக் கழகத் தொலைநிலைக் கல்வியில் எம்சிஏ பயின்ற மாணவர்களுக்குச் சென்னைப் படிப்பு மையத்தில் சி, சி++, ஜாவா பாடங்கள் பயிற்றுவித்தார்.

கணிப்பொறி அறிவியல் கலைச்சொல்லாக்கம்

தமிழ்நாடு அரசு 1999-ல் எழுத்தாளர் சுஜாதா தலைமையில் அமைக்கப்பட்ட கலைச்சொல்லாக்கக் குழுவில் இருந்து ஆஃபீஸ் மென்பொருளுக்கான 200 கலைச்சொற்களை உருவாக்குவதில் பங்கு வகித்தார். 2000-ம் ஆண்டு முனைவர் மு. ஆனந்தகிருஷ்ணன் தலைமையில் அமைக்கப்பட்ட கலைச்சொல்லாக்கக் குழுவில் உறுப்பினராக இருந்து 8000 கலைச்சொற்களை உருவாக்கிக் கொடுத்தார். இவை தமிழ் இணையப் பல்கலைக்கழக வலையகத்தில் உள்ளன. சர்வதேச அமைப்பான உலகத் தமிழ் இணைய மன்றத்தின் கலைச்சொல்லாக்கக் குழுவில் பணியாற்றினார். மணவை முஸ்தபா வெளியிட்ட கணினிக் கலைச்சொல் களஞ்சிய அகராதியின் முதல் தொகுதி இவரின் மேற்பார்வையில் வெளியானது. இரண்டாம் தொகுதி முழுக்க இவரின் பங்களிப்பில் வெளியானது.

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தன்னுடைய மென்பொருள்களின் தமிழ்ப் பதிப்பில் பயன்படுத்துவதற்காக ‘கம்யூனிட்டி குளோசரி’ என்ற பெயரில் பயனாளர்களிடமிருந்து கலைச்சொற்களைத் திரட்டியது. அதில் இவர் பரிந்துரைத்த பெரும்பாலான கலைச்சொற்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. மைக்ரோசாஃப்டின் மென்பொருள்களில், அந்நிறுவன வலையகங்களில் அச்சொற்கள் இடம்பெற்றுள்ளன. மைக்ரோசாஃப்டின் துணை நிறுவனமான பாஷா இந்தியாவின் வலையகத்தில் கலைச்சொல்லாக்கம் தொடர்பான இவருடைய பேட்டி வெளியாகியுள்ளது.

ஆய்வுக் கட்டுரைகள்

உலகத் தமிழ் இணைய மன்றம் சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, சென்னை ஆகிய இடங்களில் நடத்திய சர்வதேசத் தமிழ் இணைய மாநாடுகளில் கலைச்சொல்லாக்கம் தொடர்பான இவருடைய ஆய்வுக் கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு மாநாட்டு மலர்களில் பிரசுரிக்கப்பட்டன.

பாடப் புத்தகம், நூல்கள்

2004-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு அமைத்த +1, +2 கணிப்பொறி அறிவியல் பாடத்திட்டக் குழுவில் (Syllabus Committee) உறுப்பினராக இருந்தார். 2005-ல் +1 கணிப்பொறியியல் பாடப் புத்தகத்தையும், 2006-ல் +2 பாடப் புத்தகத்தையும் எழுதினார். எம்.எஸ்சி. கணிப்பொறி அறிவியல் மாணவர்களின் பாடத்திட்டப்படி ‘வருங்கால மொழி சி#’ என்னும் புத்தகத்தை 2005-ல் வெளியிட்டார். டி’பேஸ் வழியாக சி-மொழி, கம்ப்யூட்டர் இயக்க முறைகள், மின்னஞ்சல், டாஸ் கையேடு ஆகிய நூல்களை வெளியிட்டார். தமிழ் இணையப் பல்கலைக் கழகத்துக்காக பி.ஏ. தமிழியல் பாடத்துக்கான ‘தகவல் தொழில்நுட்பம் - ஓர் அறிமுகம்’ என்னும் பாடநூலை எழுதினார்.

பொறுப்புகள்

  • பாரதிதாசன் பல்கலைக்கழகத் தொலைநிலைக் கல்வி எம்சிஏ மாணவர்களுக்குக் கவுரவ ஆசிரியர் (1996-2003)
  • தமிழக அரசு பொது நூலகப் புத்தகத் தேர்வுக்குழு உறுப்பினர் (1998)
  • தமிழக அரசின் கணிபொறியியல் பாடத்திட்டக் குழு உறுப்பினர் (2004-2005)

இதழியல்

மு. சிவலிங்கம் 1977-ல் ஜெயபாலன் (கலாமணி), மாரியப்பன் (கார்க்கியன்), தங்கமுத்து(ஜீவகன்), ரங்கசாமி (பார்த்திபன்) ஆகியோருடன் சேர்ந்து சகாப்தம் என்ற பெயரில் இலக்கியச் சிற்றிதழை வெளியிட்டார். இலவச இதழ். நன்கொடை மூலம் நடத்தப்பட்டது. திருச்சி பாலு (கரிகாலன் அச்சகம்) சகாப்தம் இதழை அச்சிட்டுத் தந்தார். ஆறு இதழ்களுக்குப்பின் பத்திரிகை பதிவு செய்யப்பட்டு 'மக்கள் சகாப்தம்' என்ற பெயரில் வெளியானது. கவிதை, சிறுகதை, நாவல் விமர்சனம், திரைப்பட விமர்சனம், கட்டுரைகள், பேட்டிகள் வெளிவந்தன. இரண்டு ஆண்டுகள், பதின்மூன்று இதழ்களோடு சகாப்தம் நின்று போனது. விட்டல் ராவ், பொன்னீலன் போன்ற எழுத்தாளர்கள் சகாப்தத்தில் எழுதினர். சு.சமுத்திரம், பாலகுமாரன், வல்லிக்கண்ணன் போன்றோர் ஊக்கமூட்டினர்.

இலக்கிய வாழ்க்கை

மு. சிவலிங்கம் மரபுக் கவிதைகள் எழுதினார். கணினித்தமிழ் சார்ந்த நூல்களை எழுதினார். பதினோராம் வகுப்புப் படிக்கும்போது ‘கூட்டுறவு’ என்னும் பத்திரிகையில் ‘கூட்டுறவே நாட்டுயர்வு’ என்ற தலைப்பில் முதல் கவிதை எழுதினார். வெண்பாவும், எண்சீர் விருத்தமும் சார்ந்த மரபுக் கவிதைகளை ஆரம்பத்தில் எழுதினார். பின்னர் 'மீராதாசன்' என்ற புனைப்பெயரில் புதுக்கவிதைகள் எழுதினார். ஃபிரெடரிக் ஏங்கெல்ஸ் எழுதிய ‘Ludwig Feuerbach and the End of Classical German Philosophy' என்னும் நூலைத் தமிழாக்கம் செய்தார்.

மறைவு

மு. சிவலிங்கம் பிப்ரவரி 13, 2024-ல் சென்னை மாம்பலத்தில் உள்ள தம் இல்லத்தில் மாரடைப்பால் காலமானார்.

நூல் பட்டியல்

  • ஐகியூ தேர்வுகள் எழுதுவது எப்படி?
  • டாஸ் கையேடு
  • உள்ளங்கைக்குள் உலகம்
  • டி’பேஸ் வழியாக சி-மொழி
  • கம்ப்யூட்டர் இயக்க முறைகள்
  • மின்னஞ்சல்
  • வருங்கால மொழி சி#
  • மொழிகளின் அரசி சி++
  • +1 கணிப்பொறியியல் பாடநூல் – தொகுதி 2
  • +2 கணிப்பொறியியல் பாடநூல் – தொகுதி 2
  • தகவல் தொழில்நுட்பம் – ஓர் அறிமுகம்
  • நெட்வொர்க் தொழில்நுட்பம்
மொழிபெயர்ப்புகள்
  • லுத்விக் ஃபாயர்பாக்கும் மூலச்சிறப்புள்ள ஜெர்மன் தத்துவஞானத்தின் முடிவும் (ஃபிரெடரிக் ஏங்கெல்ஸ்)
  • கம்யூனிசத்தின் கோட்பாடுகள் (ஃபிரெடரிக் ஏங்கெல்ஸ்)
  • கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கை (மார்க்ஸ், ஏங்கெல்ஸ்)
  • கூலியுழைப்பும் மூலதனமும் (மார்க்ஸ்)
  • கற்பனாவாத சோஷலிசமும் விஞ்ஞான சோஷலிசமும் (ஏங்கெல்ஸ்)

உசாத்துணை


✅Finalised Page