under review

மு. குலாம் மொகிதின்

From Tamil Wiki
மு. குலாம் மொகிதின்

மு. குலாம் மொகிதின் (பிறப்பு: பிப்ரவரி 7, 1959) தமிழ் நாட்டைச் சேர்ந்த மருத்துவர். எலும்பு, முதுகெலும்பு அறுவை சிகிச்சையில் வல்லுநர்.

பிறப்பு, கல்வி

மு. குலாம் மொகிதின் தமிழ்நாடு மாநிலம் புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலில் முகமது இஸ்மாயில், அ. பாத்திமா பீவி இணையருக்கு பிப்ரவரி 7, 1959-ல் பிறந்தார். குடும்பம் வணிகத்தின் பொருட்டு இலங்கைக்குச் சென்றதால் நுவரேலியாவுக்கு அருகில் உள்ள பண்டாரவளை புனித தோமையர் பள்ளியில் கல்வி கற்றார். குடும்பம் தமிழகம் திரும்பியதும் அன்னவாசல் அரசு உயர்நிலைப் பள்ளியிலும், பின்னர் புதுக்கோட்டை முன்மாதிரிப் பள்ளியிலும் கல்வி கற்றார். இந்திய அரசின் கல்வி உதவித் தொகை (National Merit Scholarship) பெற்றார். திருச்சிராப்பள்ளி தூய வளனார் கல்லூரியில் பயின்று, புகுமுக வகுப்பில் தேறினார். தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் மருத்துவத்தில்(1976-1983) பட்டம் பெற்றார்.

1989-90-ல் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் எலும்பு சிகிச்சையில்(D.Ortho) பட்டயம் பெற்றார். 1991-93-ல் மதுரை மருத்துவக் கல்லூரியில் பட்ட மேற்படிப்பு (MS Ortho) பயின்றார். எலும்பு, முதுகெலும்பு அறுவையில் மேற்பயிற்சியை கோவை கங்கா மருத்துவமனையில் பெற்றார். கேண்டோன் மருத்துவமனை, கூர், சுவிட்சர்லாந்து(Canton Hospital, Chur Switzerland); கேத்ரினன் மருத்துவமனை, ஸ்டுட்கார்ட், ஜெர்மனி(Katharinen Hospital, Stuttgart, Germany); பாஸல் மருத்துவமனை, சுவிட்சர்லாந்து (The University Hospital Basel, Switzerland ), லேகோ மருத்துவமனை, லேகோ, இத்தாலி(G.B. Mangioni Hospital, Lecco); குயின்ஸ் மெடிக்கல் சென்டர், நாட்டிங்காம், இங்கிலாந்து ஆகிய மருத்துவமனைகளில் பயிற்சி பெற்றார்.

பிறதுறை பட்டயப் படிப்புகள்
  • மருத்துவமனை மேலாண்மை பட்டயப் படிப்பு (மதுரை காமராசர் பல்கலைக்கழகம்) (PGDHM)
  • கல்வியியல் நிர்வாகம் (பாரதிதாசன் பல்கலைக்கழகம்) (PGDEA)
  • கணினி பயண்பாட்டியியல் பட்டயப்படிப்பு (தமிழ்ப் பல்கலைக்கழகம்) (PGDCA)
  • இயற்கை மொழி செயலாக்கப் பட்டயப்படிப்பு, அண்ணாமலை பல்கலைக்கழகம் (PGDNLP)
  • முதுகலை இதழியல் (மதுரை காமராசர் பல்கலைக்கழகம்)
  • முதுகலை வணிகவியல் (கல்வியியல் மேலாண்மை, அண்ணாமலை பல்கலைக்கழகம்)

ஆசிரியப்பணி

மு. குலாம் மொகிதின் தஞ்சை மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றார். அதன்பின் புதுச்சேரிக்கு அருகில் மருத்துவக் கல்லூரி ஒன்றில் பேராசிரியராகப் பணியாற்றினார். தமிழ் வழியில் மருத்துவம் பயிற்றுவிக்கப்படவேண்டும் என்ற கொள்கையுடையவர்.

மருத்துவப்பணி

மு. குலாம் மொகிதின் எலும்பு, முதுகெலும்பு அறுவை சிகிச்சையில் வல்லுநர். தமிழகத்தின் பல ஊர்களில் அரசு மருத்துவமனைகளில், கல்லூரிகளில் தம் மருத்துவப் பணியைச் செய்தார். ஒமன் நாட்டிலும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். 1983-1989 ஆண்டுகளில் புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரில் குடும்ப மருத்துவராகப் பணியாற்றினார். ஓமன் நாட்டின் மஸ்கட் நகரில் அமைந்துள்ள கோலா மருத்துவமனையில் பணியாற்றினார்.

குலாம் மொகிதின் அண்டக்குளம், விராலிமலை, வள்ளுவக்குடி ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும் பணியாற்றினார். தஞ்சாவூர், திருச்சி, கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரிகளிலும் பணியாற்றிப் பல நூறு மருத்துவ மாணவர்களை உருவாக்கினார். 2017-ல் அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.

பொறுப்புகள்

  • தமிழ்நாடு எலும்பு அறுவை மருத்துவச் சங்கத்தின் சார்பில் தஞ்சாவூரில் முதன் முதலில் எலும்பு அறுவை மருத்துவக் கருத்தரங்கு அக்டோபர், 2023-ல் நடைபெற்றபொழுது அதன் ஒருங்கிணைப்பாளராக இருந்து நடத்தினார்.
  • தமிழ்நாடு எலும்பு அறுவை மருத்துவர்களின் மாநில மாநாடு (பிப்ரவரி, 2024), ஈரோட்டில் நடைபெற்றபொழுது தமிழ் அமர்வுக்கு ஒருங்கிணைப்பாளராக இருந்தார்.

எழுத்து

மு. குலாம் மொகிதின் எலும்பு, முதுகெலும்பு மருத்துவம் சார்ந்த உரைகளையும் கட்டுரைகளையும் எழுதினார். சிங்கப்பூர், புருணை, ஹாங்காங், சௌதி அரேபியா, துபாய், ஓமான், மலேசியா, மக்கௌ(,சீனா) (Macao) ஆகிய நாடுகளில் கருத்தரங்குகளில் கலந்து கொண்டார்.

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 10-Jun-2024, 09:44:14 IST