under review

முருகப் பெருமானின் 16 திருக்கோலங்கள்

From Tamil Wiki
முருகப் பெருமானின் பல்வேறு திருவடிவங்கள்

முருகப் பெருமானின் பெருமை கூறும் ‘ஸ்ரீ தத்துவநிதி’ என்ற நூல், முருகப் பெருமான் 16 விதமான திருக்கோலங்கள் உடையவர் என்று கூறுகிறது. ‘குமார தந்திரம்’ என்ற நூலை அடிப்படையாகக் கொண்டுள்ள திருத்தணிகை புராணத்தில் முருகனின் 16 திருக்கோலங்கள் பற்றிய விபரங்கள் உள்ளன.

முருகனின் 16 திருக்கோலங்கள்

முருகனின் 16 திருக்கோலங்கள்:

  • ஞான சக்திதரர்
  • கந்தசாமி
  • தேவசேனாபதி
  • சுப்பிரமணியர்
  • கஜவாகனர்
  • சரவணபவர்
  • கார்த்திகேயர்
  • குமாரசாமி
  • ஆறுமுகம்
  • தாரகாரி
  • தேவசேனாபதி
  • பிரம்ம சாஸ்தா
  • வள்ளி மணாளர்
  • பால முருகன்
  • கிரௌஞ்ச பேதனர்
  • சிகிவாகனர்

ஞான சக்திதரர்

திருமுருகன் திருக்கோலங்களில் முதலாவது திருக்கோலம் ஞான சக்திதரர். ஒரு முகமும், இரண்டு திருக்கரங்களும் உடைய திருவுருவம் இது. வலது கையில் சக்தி வேல் இருக்கும். பகைவரை அழிக்கும் தன்மை படைத்த இடது கை, தொடை மேல் அமைந்திருக்கும். இதுவே ஞான சக்திரர் திருக்கோலம். ஞான சக்திதரர் கையில் இருக்கும் வேல் மூன்று இலை கொண்டதாக அமைந்திருக்கும். அவை இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி என்ற முப்பெரும் சக்திகளைக் குறிக்கின்றது.

ஞான சக்திதரர் ஆலயம்

ஆறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணியில் கோயில் கொண்டிருக்கும் திருக்கோலம் ஞானசக்திதரர் திருக்கோலம். இவரை வழிபட்டு வந்தால், நினைத்த காரியங்கள் எல்லாம் தடையின்றி எளிதில் நிறைவேறும் என்பது தொன்மம்.

கந்தன்

கந்தசாமி

முருகப் பெருமானின் அருட் திருக்கோலங்களில் இரண்டாவது திருக்கோலம் ஸ்கந்த மூர்த்தி எனும் கந்தசாமி திருக்கோலம். ஒரு திருமுகம், இரண்டு கைகள், இடது கரம் இடுப்பில் ஊன்றியிருக்கும். கையில் தண்டாயுதமும், இடையில் கோவணமும் காணப்படும். முருகப் பெருமானின் திருநாமங்களில் கந்தன் என்ற பெயரால் கந்த புராணம் தொடங்கிப் பல அரிய நூல்கள் இயற்றப்பட்டுள்ளன.

கந்தசாமி ஆலயம்

கந்தசாமி கோலம், பழனி ஆண்டவர் திருக்கோல வடிவமாகும். கந்தசாமியை வழிபட்டால் அனைத்துக் காரியங்களும் விரைவில் நிறைவேறும் என்பது நம்பிக்கை.

தேவசேனாபதி

திருமுருகனின் பதினாறு வடிவங்களில் மூன்றாவது வடிவம் தேவசேனாபதி வடிவம். ஆறுமுகமும் பன்னிரு திருக்கரங்களும் கொண்ட வடிவம். இடது மடியில் தெய்வானையை அமர்த்தியிருக்கும் கோலம். தேவசேனாபதியின் வடிவச் சிறப்பை திருத்தணிகைப் புராணம் விரிவாகக் கூறுகிறது. ஆறுமுகம் படைத்த தேவசேனாபதியை வழிபட்டால் மங்களகரமான வாழ்வு அமையும்; எல்லா நலன்களும் எய்துவர் என்று புராணங்கள் கூறுகின்றன.

தேவசேனாபதி ஆலயம்

ஈரோடு சென்னிமலை முருகன் கோயிலில் கருவறைப் புறச்சுவரில் ஆறுமுக தேவசேனாபதி திருவுருவச் சிலை உள்ளது.

சுப்பிரமணியர்

திருமுருகனின் அருட் திருக்கோலங்களில் நான்காவது வடிவம் சுப்பிரமணியர். வேதங்கள், சுப்பிரமணியம் என்ற நாமத்தின் பெருமையைப் பற்றி விரிவாகக் கூறியுள்ளன. ஒரு முகமும் இரண்டு கரங்களும் உடையவர் சுப்பிரமணியர். இரு கரங்களில், ஒரு கை இடுப்பின் மீது ஊன்றிய நிலையில், மற்றொரு கை அபயஹஸ்தமாக இருக்கும். இந்த வடிவத்தை ஆகமங்களும் சிற்ப சாஸ்திரங்களும் விவரிக்கின்றன. எல்லா வகையான இன்பங்களையும் அளிக்கக் கூடியவர் சுப்பிரமணியர் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

சுப்பிரமணியர் ஆலயம்

திருவிடைக்கழி திருத்தலத்தில் உள்ள மூலவர் உருவம் சுப்பிரமணியர் திருவுருவமாகும்.

கஜவாகனர்

கஜவாகனர் திருக்கோலம், முருகப் பெருமானின் ஐந்தாவது திருக்கோலம். முருகனின் வாகனம் மயில் என்றாலும் முருகனுக்கு ஆடு, யானை போன்ற வாகனங்களும் உண்டு. யானையை வாகனமாகக் கொண்ட முருகப் பெருமானின் திருக்கோலத்திற்கு, ‘களிறு ஊர்திப் பெருமாள்’ என்றும் ‘கஜவாகனர்’ என்றும் பெயர். கஜவாகனர், ஒரு முகமும் நான்கு கரங்களும் உடையவர். இடது கைகளில் ஒன்று கோழி ஏந்தியிருக்கும். இன்னொரு கை வரத முத்திரை காட்டும். மற்ற இரு கரங்களில் வேலும் வாளும் ஏந்தியிருப்பார். யானை மீது அமர்ந்த திருக்கோலமிது. கஜவாகனரை வழிபட்டால் எல்லாத் துன்பங்களும் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

கஜவாகனர் ஆலயங்கள்

கஜவாகனர் என்னும் திருவுருவம் திருமருகல், மேல்பாடி, சிதம்பரம் ஆகிய திருத்தலங்களில் உள்ளது.

சரவணபவர்

முருகப் பெருமானின் ஆறாவது திருவடிவம் சரவணபவ மூர்த்தி. சரவணப் பொய்கையில் அவதரித்ததால் இந்தப் பெயர். ஆறு முகங்கள், பன்னிரண்டு கைகள் உடைய அருட்கோலமிது. சரவணபவர், மஞ்சள் நிறம் கொண்டவர் என்று குமார தந்திரம் கூறுகிறது. இவர் மூன்று முகமும் ஆறு கைகளும் உடையவர் என்றும், புஷ்ப அம்பு, கரும்பு வில், கட்கம், கேடயம், வஜ்ரம், முக்கூடம் ஆகியவற்றை ஏந்தி சிம்ம வாகனத்தில் காட்சி தருவார் என்று ‘ஸ்ரீ தத்துவ நிதி’ கூறுகிறது. இவரை வழிபட்டால் புகழ் உண்டாகும். கல்விச் சிறப்பு ஏற்படும் என்பது நம்பிக்கை.

சரவணபவர் ஆலயங்கள்

உலகெங்கும் உள்ள பல முருகன் திருத்தலங்களில் சரவணபவர் வடிவைக் காணலாம்.

கார்த்திகேயர்

முருகப் பெருமானின் பதினாறு திருக்கோலங்களில் ஏழாவது திருக்கோலம் கார்த்திகேயர். குமார தந்திரம், ஆறு முகங்களும், ஆறு தோள்களும் உடையவர் கார்த்திகேயர் என்றும், இடது கரங்களில் புலிசம், கேடயம், வரதம் ஆகியனவற்றையும், வலது கைகளில் வேலும், வாளும் கொண்டு அபய ஹஸ்தம் காட்டுவார் என்றும் கூறுகிறது. ஸ்ரீ தத்துவ நிதி, இவர் ஒரு முகமும் மூன்று கண்களும் பத்து கைகளும் உடையவர் என்கிறது. இவர் மயில் வாகனத்தில் வீற்றிருப்பார். தன்னை வழிபடும் பக்தர்களின் கவலைகளைப் போக்கி சகல சௌபாக்கியங்களையும் அளிப்பார் என்பது தொன்மம்.

கார்த்திகேயர் ஆலயங்கள்

கும்பகோணத்தில் இருக்கும் கும்பேஸ்வரர் கோயிலிலும், தாராசுரத்தில் உள்ள ஐராவதேஸ்வரர் கோயிலிலும் கார்த்திகேயர் திருவுருவங்கள் உள்ளன.

குமாரசாமி

குமாரசாமி

முருகப் பெருமானின் அருட்கோலங்களில் எட்டாவது வடிவம் குமாரசாமி வடிவம். குமாரசாமி, ஒரு முகமும் நான்கு கரங்களும் உடையவர். வலது கரங்களில் சக்தி ஆயுதமும், கத்தியும், இடது கரங்களில் குக்குடம், கேடயம் ஆகியவற்றைத் தாங்கியிருப்பார். வள்ளி தேவியுடன் காணப்படுவார் என்கிறது திருத்தணிகை புராணம். மேலும் முடியலங்காரம், கரண்ட குடம் என்ற அமைப்பில் இருக்கும் என்கிறது ஸ்ரீ தத்துவ நிதி. குமாரசாமியை வழிபட்டால் ஆணவம், கன்மம், மாயை என மும்மலங்களும் நீங்கும்.

குமாரசாமி ஆலயங்கள்

நாகர்கோவிலுக்கு அருகில் உள்ள குமாரமங்கலம், கோயிலில் குமாரசாமி திருமேனி விசேஷமாக அமைக்கப்பட்டுள்ளது. கங்கை கொண்ட சோழபுரத்தில் பஞ்ச லோகத்தாலான குமாரசாமி விக்ரகம் உள்ளது.

ஆறுமுக சாமி

முருகப் பெருமானின் அருட்கோலங்களில் ஒன்பதாவது வடிவம் ஆறுமுகசாமி வடிவம். ஆறு முகங்களை உடையவர் சண்முகநாதர். ஆறுமுக சாமி என்ற பெயரும் உண்டு. ஆறுமுகங்களின் பெருமையைப் புராணங்களும் இலக்கியங்களும் மிக விரிவாகப் பேசுகின்றன. இவர் ஆறு திருமுகங்கள், பன்னிரு கைகளோடு மயில்வாகனத்தில் தேவசேனா, வள்ளி சமேதராக இருப்பார். வலது கைகளில் வேலும், அம்பும், வாளும், திகிரியும், பாசமும் அபயமும் இருக்கும். இடது கரங்களில் குலிசம், வில், கேடயம், சேவல், அங்குசம், வரதம் இருக்கும். இவரை வழிபட சிவசக்தியை வழிபட்ட புண்ணியம் கிடைக்கும் என்பது தொன்மம்.

ஆறுமுக சாமி ஆலயங்கள்

திருச்செந்தூரில் உள்ள ஆறுமுகம் எனும் சண்முகர் திருக்கோலம் சிறப்பானது.

தாரகாரி

முருகப் பெருமானின் பத்தாவது திருக்கோலம் தாரகாரி. தாரகன் என்ற அசுரனை அழித்ததால் தாரகாரி என்ற பெயர் வந்தது. தாரகாரி பன்னிரு கரங்கள் கொண்டவர். இடது கரங்களில் ஒன்று வரதமாக இருக்கும். பிறவற்றில் அங்குசம், வல்லி, கடகம், வில், வச்சிரம் இருக்கும். வலக்கரங்களில் ஒன்று அபய ஹஸ்தமாக இருக்கும். பிறவற்றில் பாசம், சக்கரம், கட்கம், உலக்கை, சக்தி ஆயுதம் அமைந்திருக்கும் என குமார தந்திரம் நூல் குறிப்பிடுகிறது. குமார தந்திரம் நூலை அடிப்படையாக வைத்தே திருத்தணிகை புராண வர்ணனை உள்ளது. தாரகாரியை வழிபட்டால் உலக மாயையிலிருந்து விடுபட உதவுவார் என்பது நம்பிக்கை.

தாரகாரி ஆலயம்

தாரகாரி வடிவ திருவுருவம் விராலிமலைக் கோயிலில் அமைந்துள்ளது.

தேவசேனாபதி

திருமுருகன் திருவடிங்களில் 11-வது வடிவம், தேவசேனாபதி வடிவம். துன்பங்களிலிருந்து தேவர்களைக் காத்ததால் இவர் தேவசேனாபதியானார். ஆறுமுகமும், பன்னிரு கரங்களும் கொண்டவர். அபயம், முசலம், வாள், சூலம், வேல், அங்குசம் ஆகியவை வலது திருக்கைகளிலும், வரதம், குலிசம், வில், தாமரை, தண்டம், குக்குடம் ஆகியவை இடது திருக்கைகளிலும் அமைந்திருக்கும். தேவசேனாபதியை வழிபட்டால் பகை அழியும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும்.

தேவசேனாபதி ஆலயம்

வட ஆற்காடு மாவட்டத்தில் உள்ள தேவிகாபுரம் திருக்கோயிலில் முருகப் பெருமான் தேவசேனாபதியாகக் காட்சி தருகிறார்.

பிரம்ம சாஸ்தா

முருகன் அருட்கோலங்களில் 12-வது வடிவம் பிரம்ம சாஸ்தா. ஓங்கார மந்திரத்தின் பொருள் தெரியாத பிரம்மனைச் சிறையில் அடைத்த பின், முருகப் பெருமான் தானே படைத்தல் தொழிலை மேற்கொண்டதால், பிரம்ம சாஸ்தா என அழைக்கப்பட்டார். பிரம்ம சாஸ்தா, இடது கரங்களில் வரதம், குண்டிகையும், வலது கையில் அட்சய மாலையும் அபய ஹஸ்தத்துடனும் காட்சி தருவார். வள்ளியோடு காட்சியளிப்பார்; பிரமன் அருகில் வணங்கி நிற்பான் என்று புராணங்களில் கூறப்படுகிறது. இவரை வழிபட்டால் எல்லா வித்தைகளிலும் தேர்ச்சி பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

பிரம்ம சாஸ்தா ஆலயங்கள்

காஞ்சிபுரத்தில் உள்ள குமரக் கோட்டத்தில், முருகப்பெருமான் பிரம்ம சாஸ்தா வடிவத்தில் காட்சி தருகிறார். செங்கல்பட்டில் உள்ள ஆனூர் முருகன் கோயிலில் உள்ள மூர்த்தியும் பிரம்ம சாஸ்தாவே. இவர் கைகளில் மலர் ஏந்தியிருப்பது அதிசயமானதாகக் கருதப்படுகிறது.

வள்ளி மணாளர்

வள்ளி மணாளர்

முருகனின் 13-வது திருக்கோலம் வள்ளி மணாளர் கோலம். வள்ளி மணாளர், சதுர்புஜங்களுடன், வள்ளி தேவியுடன் காட்சி தருவார். அருகே பிரம்மன் அமர்ந்து திருமணச் சடங்குகளை நடத்திக் கொண்டிருப்பார். விஷ்ணு, தன் கையில் தீர்த்தப் பாத்திரம் ஏந்தி தாரைவார்த்துத் தரத் தயாராக இருப்பார். சிவனும் பார்வதியும் ஆசி வழங்கும் கோலத்தில் இருப்பர். இத்திருமணக் கோலத்தைத் தேவர்கள் கண்டு தரிசிப்பர். முருகன் சிவந்த நிறத்திலும், வள்ளி கரிய நிறத்திலும் இருப்பர். தெய்வத் திருமணக் கோலங்களை வழிபட்டால் திருமணத் தடைகள் அகலும் என்று கூறுகிறது குமார தந்திரம்.

வள்ளிமணாளர் ஆலயம்

திருப்போரூர் முருகன் கோயிலில் வள்ளி மணாளர் என்னும் வள்ளி கல்யாணசுந்தரர் திருவுருவம் அமைந்துள்ளது.

பால முருகன்

முருகன் திருவடிவங்களில் 14-வது வடிவம் பால முருகன் திருக்கோலம். அழகு, இனிமை, இளமை ஆகியவற்றை உடையவர். பால் வடியும் திருமுகத்தோடு காட்சி தரும் குழந்தை சாமியையே பாலமுருகன் என்றும், பாலசுப்பிரமணியர் என்றும் அழைக்கின்றனர். ஒரு முகமும், இருகரமும் உடையவர். வலது கையில் தாமரை மலரை ஏந்தியும், இடது கையை இடுப்பில் ஊன்றியும் இருப்பார். குழந்தைப் பருவத்தில் முருகன் ஏற்ற அருட் கோலம் இது என்று தணிகைப் புராணம் கூறுகிறது. இவரை வழிபட்டால் உடல் குறைகள் நீங்கும். உடல் நலம் சிறக்கும் என்பது தொன்மம்.

பால முருகன் ஆலயங்கள்

பாலசுப்பிரமணியர் திருவுருவங்கள் திருச்செந்தூர், திருக்கண்டியூர், ஆண்டார்குப்பம் முதலான பல கோயில்களில் காணப்படுகின்றன.

கிரௌஞ்ச பேதனர்

முருகப் பெருமானின் 16 கோலங்களில் 15-வது வடிவம் கிரௌஞ்ச பேதனர் திருக்கோலம். சூரசம்ஹாரத்தின் போது கிரௌஞ்சம் என்ற மலையைத் தகர்த்ததால் முருகப் பெருமான் இப்பெயர் பெற்றார். முருகப் பெருமான் கிரௌஞ்ச மலையைப் பிளந்த வீரச் செயலை குமார தந்திரம் விவரிக்கிறது. ஆறுமுகங்களுடன், எட்டுக் கைகளில் பலவிதமான ஆயுதங்கள் தாங்கியவராய், மனக்கலக்கம் அடைந்து, தன்னைச் சரணடைந்த தேவர்களைக் காப்பாற்றியவர் கிரௌஞ்ச பேதனர். கிரௌஞ்ச பேதனரை வழிபட மனக்கலக்கங்கள் நீங்கும். துன்பங்கள் விலகும் என்பது நம்பிக்கை.

கிரௌஞ்ச பேதனர் ஆலயங்கள்

திருநெல்லிக்கா, திருக்குறங்குடி, திருநளிப்பள்ளி போன்ற இடங்களில் உள்ள ஆலயங்களில் முருகப்பெருமான் கிரௌஞ்ச பேதனராகக் காட்சி தருகிறார்.

சிகி வாகனர்

திருமுருகப் பெருமானின் 16 திருக்கோலங்களில் 16-வது திருக்கோல வடிவம் சிகிவாகனர். சிகி என்றால் மயில். மயில் வாகன மூர்த்தி, மயிலேறும் பெருமாள் என்றும் இவர் அழைக்கப்படுகிறார். முருகப் பெருமான் சூரனோடு போரிட்டார். சூரன், போரில் மாயங்கள் பல செய்தான். மரமாகி நின்ற சூரனை முருகப்பெருமான் இரு துண்டுகளாக்கினார். ஒன்று சேவல் ஆகியது; மற்றொன்று மயிலானது. கோழியைக் கொடியாகவும், மயிலை வாகனமாகவும் ஏற்றுக் கொண்டார் முருகப் பெருமான் என்கிறது கந்தபுராணம். மயிலை வாகனமாகக் கொண்ட அருட் கோலம் மயில் வாகனர் எனும் சிகி வாகனர். இந்தக் கோலத்தை சில்ப சாஸ்திரம் ஏழு வகையாகச் சொல்கிறது. மயிலேறும் பெருமாளை வழிபடுபவர்களுக்கு இன்பமயமான வாழ்வு கிடைக்கும் என்பது தொன்மம்.

சிகி வாகனர் ஆலயங்கள்

சிகி வாகனர் உலகெங்கிலும் உள்ள பல முருகன் திருத்தலங்களில் காட்சி தருகிறார்.

உசாத்துணை


✅Finalised Page