under review

முதலூர் ஆதிநாதர் கோயில்

From Tamil Wiki
முதலூர் ஆதிநாதர் கோயில் (நன்றி பத்மாராஜ்)

முதலூர் ஆதிநாதர் கோயில் (பொ.யு. 15 - 16-ம் நூற்றாண்டு) வடதமிழ்நாட்டில் (தொண்டைமண்டல) திருவண்ணாமலை மாவட்டம் முதலூரில் அமைந்த சமணக் கோயில்.

இடம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் வந்தவாசியிலிருந்து ஏழு கிலோமீட்டர் தெற்கிலுள்ளது முதலூர் என்னும் திருத்தலம். இங்கு முதலாவது தீர்த்தங்கரராகிய ஆதிநாதருக்கென எழுப்பப்பட்ட கோயில் உள்ளது.

வரலாறு

முதலூர் ஆதிநாதர்

பொ.யு. 15 - 16-ம் நூற்றாண்டுகளில் இங்கு ஆதிநாதர் கோயில் இருந்திருக்க வேண்டுமென்பதை இங்குள்ள மூலவர் சிற்பத்தின் கலைப்பாணி கூறுகிறது. ஆதிநாதர் பிள்ளைத் தமிழ், அப்பாண்டைநாதர் உலா போன்ற இலக்கியங்களும் முதலூர் சிறந்த சமணத் தலமாக விளங்கியதைக் குறிப்பிடுகின்றன. இக்கோயில் புதுப்பிக்கப்பட்டுள்ளமையால் பண்டைய கட்டடக் கலையின் சாயலை இழந்து காணப்படுகிறது.

அமைப்பு

முதலூர் ஆதிநாதர் கோயில்கருவறை, மண்டபங்கள், திருச்சுற்றுமதில், கோபுரம் ஆகியவற்றைக் கொண்ட முதலூர் ஆதிநாதர் கோயில் 1940 மற்றும் 1972-ல் புதுப்பிக்கப்பட்டது. கருவறையை அடுத்துள்ள மண்டபங்கள், கருவறையின் மேற்பகுதி ஆகியவை புதுப்பிக்கப்பட்டுள்ளன.

ஆதிநாதர் சிற்பம்

முதலூர் ஆதிநாதர் கோயிலின் கருவறையில் தியான நிலையில் அமர்ந்தவாறு திகழும் ஆதிநாதர் சிற்பம் உள்ளது. ஐந்து அடி உயரமுள்ள இத்திருவுருவம் வட்டவடிவ முக அமைப்பினையும் அகன்று பரந்த மார்பினையும் கொண்டுள்ளது. ஆதிநாதரின் தலைக்குப் பின்புறம் அரை வட்டவடிவ அலங்கார பிரபையும், அதற்கு மேல் முக்குடையும் செதுக்கப்பட்டுள்ளன. இச்சிற்பம் பொ.யு. 15 - 16-ம் நூற்றாண்டுக் கலைப்பாணியைக் கொண்டது.

கொல்லாபுர மடாதிபதிகள்

முதலூர் கோயில் தூண்கள்

மகாராஷ்டிர மாநிலத்திலுள்ள கொல்லாபுரத்திலிருக்கும் சமண மடத்தின் தலைமைப் பொறுப்பினை மூவர் முதலூரைச் சார்ந்தவர்கள் ஏற்று நடத்தினர் என்பது இந்த ஊரின் சிறப்பு. இவ்வூரில் தோன்றிய சமுத்திரவிஜய சுவாமிகள், அப்பாண்டைநாத சுவாமிகள், விருஷப நாத சுவாமிகள் கொல்லபுர மடத்தை நிர்வாகம் செய்தனர். இந்த மடாதிபதிகளுள் விருஷபநாத சுவாமிகள் தமக்கு முந்தியவர்கள் மீதுள்ள குருபக்தியினாலும், தாங்கள் அவதரித்த புண்ணிய தலத்தின் பெருமையினை அறிவுறுத்தும் வகையிலும் 1950-ம் ஆண்டு இக்கோயிலில் தமது சொந்தசெலவிலேயே முப்பது அடி உயரமுள்ள மானஸ்தம்பத்தை நிறுவினார்.

வழிபாடு

முதலூர் கோயில் சிலை

தற்போது இவ்வூரில் ஐம்பது சமணக்குடும்பங்கள் வாழ்ந்து வருவதால் நித்தியவழிபாடுகள், சிறப்பு வழிபாடுகள், திருவிழாக்கள் ஆகியவை நடைபெறுகின்றன. கீழ்வில்லிவலம். நெல்லியாங்குளம், நல்லூர் எரமலூர் ஆகிய ஊர்களிலுள்ள மக்களும் இங்கு வழிபாடு செய்து வருகின்றனர்.

உசாத்துணை


✅Finalised Page