under review

மின்சாரத் தந்தி விடு தூது

From Tamil Wiki
மின்சாரத் தந்தி விடு தூது - 1900

மின்சாரத் தந்தி விடு தூது (நகரத்தார்‌ என்னும்‌ சந்திர குலத்‌ தனவைசியர்‌ மின்சாரத்‌ தந்தி விடு தூது) (1900) தூது இலக்கிய நூல்களுள் ஒன்று. நாட்டுக்கோட்டைச்‌ செட்டியார்கள் என்றும், நகரத்தார்‌ என்றும்‌ அழைக்கப்படும் தனவைசிய குலத்தவர்களைப் பாட்டுடைத் தலைவர்களாகக் கொண்டு பாடப்பட்ட நூல். இதனை இயற்றியவர், ஏகாட்டூர்‌ சிவசண்முகம்‌ பிள்ளை.

பதிப்பு, வெளியீடு

நகரத்தார்‌ என்னும்‌ சந்திர குலத்‌ தனவைசியர்‌ மின்சாரத்‌ தந்தி விடு தூது நூல், 1900-த்தில் வெளியானது. இதனை இயற்றியவர், ஏகாட்டூர்‌ சிவசண்முகம்‌ பிள்ளை. இந்த நூலின் பாட்டுடைத் தலைவர்கள் தனவைசியர்கள் என்று அழைக்கப்படும் நகரத்தார்கள். பொருளாதாரத்தில் நலிவடைந்த புலவர் ஒருவர், பழனியம்பதி முருகப்பெருமானின் ஆலோசனையின்படி, நகரத்தார்களிடம் பொருள் வேண்டிச் சிறப்புறுகிறார். பின், அக்காலத்தின் நவீன வரவான ‘தந்தி’யைத் தமைப் பிரிந்திருக்கும் மனைவிக்குத் தூதாக அனுப்புவதைப் பற்றிக் கூறுவதே மின்சாரத் தந்தி விடு தூது நூல்.

ஆசிரியர் குறிப்பு

மின்சாரத் தந்தி விடு தூது நூலின் ஆசிரியர், ஏகை என்னும் ஏகாட்டூர்‌ சிவசண்முகம்‌ பிள்ளை. பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்தவர். திருமூலர் ஆதீனம் ஈசான்ய தேசிகரின் மரபில் வந்த அருளானந்தர்‌ என்பவரின்‌ மாணவர். திருப்போரூர் முருகப் பெருமானின் பக்தர். தந்திவிடு தூது மட்டுமல்லாமல் வேறு சில நாடகங்களையும், கீர்த்தனைகளையும் இயற்றியுள்ளார்.

நூலின் கதை

திருப்போரூரில் சைவ அந்தணர்‌ குலத்தில்‌ பிறந்த காங்கேயன்‌, ஒரு தமிழ்ப் புலவர். ஷோடசாவதானி. நாடகங்களிலும் இசைப் பாடல்கள் இயற்றுவதிலும் தேர்ந்தவர். அவர் சென்னைக்குச் சென்று தனது அவதானக் கலையின் சிறப்பை அனைவருக்கும் உணர்த்திப் புகழும் பொருளும் ஈட்டுகிறார். மனைவியுடன் சென்னையில் வாழ்ந்து வரும் அவர் ஒரு நாள் ‘பீப்பிள்ஸ் பார்க்’ என்னும் சிங்காரத் தோட்டப் பூங்காவிற்குச் செல்கிறார். வரும் வழியில் ஒரு வீட்டிற்குள் நாடக ஒத்திகை நடப்பதைக் காண்கிறார். அந்த நாடகத்தையும் நடிகர்களின் நடிப்பையும் விமர்சிக்கிறார். அந்த நடிகர்களுக்கு ஆசிரியராகிறார்.

ஆண்களே பெண் வேடமிட்டு நடிப்பதில் சுவாரஸ்யம் இல்லை என்று கருதி, திருவாரூர்த் தாசி மோகனாவின் மகள் மோகன சிகாமணியை நடிக்கத் தேர்ந்தெடுக்கிறார். தக்க பயிற்சி அளித்து அவளை ஒரு நடிகையாக்குகிறார். நடிகை மீது மோகம் கொள்ளும் அவர் விதூஷகன் உதவியால் அவளுடன் சேர்கிறார். மனைவியை மறந்து நாடக நடிகையுடன் வாழ்க்கை நடத்துகிறார். நாளடைவில் மனைவியைத் துறந்து வீட்டைவிட்டுச் செல்கிறார். நடிகையுடன் பல ஊர்களுக்குச் சென்று நாடகம் நடத்துகிறார். அதனால் நஷ்டமடைகிறார். கடனாளி ஆகிறார். நாடகக் கம்பெனியை மூடுகிறார். நடிகையைப் பிரிகிறார். வறுமை நிலையில் உள்ள காங்கேயன், செல்வம் சேர்த்த பின்பே மனைவியைக் காண்பேன் என்று மன உறுதி கொண்டு அதற்கான முயற்சிகளில் ஈடுபடுகிறார்.

செல்வம்‌ சேர்ப்‌பதற்கான குறுக்கு வழிகளில்‌ இறங்குகிறார். ரசவாத வித்தை, புதையல்‌ இருக்குமிடத்தைக்‌ காட்டும்‌ மை தயாரித்தல்‌ போன்றவற்றில் ஆர்வம் கொள்கிறார். அதில் பலன் ஏற்படாததால் நாடகங்களுக்குப் பாடல்கள் எழுதிப் பொருளீட்டுகிறார். அதிலும் போதிய பலன் கிடைக்காததால் இறைவனின் உதவியை வேண்டுகிறார். இறுதியில் பழனி முருகனிடம் தனது வேண்டுகோளை முன் வைக்கிறார். பழனி முருகன் உதவ மறுத்து, நகரத்தார்‌ என்னும்‌ தனவைசியர்களின்‌ செல்வ வளத்தைப்‌ பற்றிக்‌ கூறி, அவர்‌களிடம்‌ சென்று உதவி கோருமாறு ஆலோசனை கூறுகிறார்‌.

காங்கேயனும் அவ்வாறே செட்டிநாட்டுக்குச் சென்று, நகரத்தார்களைப் புகழ்ந்து பாடிப் பொருளுதவி பெறுகிறார்‌. தம் கடன்களை எல்லாம் அடைத்துச் செல்வ வளம் பெறுகிறார். பின் சென்னையிலுள்ள தன் மனைவிக்குத் தந்தி கொடுக்கிறார். தந்தியையே தூதாக விடுக்கிறார். இதுவே மின்சாரத் தந்தி விடு நூலின் கதை.

உள்ளடக்கம்

கலிவெண்பாவால் ஆன மின்சாரத் தந்தி விடு தூது நூலில் 1400 வரிகள் உள்ளன. மின்சாரத் தந்தி விடு தூது நூலுக்கு அஷ்டாவதானம்‌ பூவை கல்யாணசுந்தர முதலியார், மயிலை இராமலிங்க முதலியார்‌ உள்ளிட்ட பலர் சாற்றுக்கவி வழங்கியுள்ளனர். தமிழோடு, நேரடிப் பொருளில் ஆங்கில வார்த்தைகளும் இந்நூலில் அதிகம் இடம் பெற்றுள்ளன. அந்தக் காலத்துச் சென்னை நகர வாழ்க்கை, நாடகக் கலைஞர்களின் வாழ்க்கை, நாடகம் நடத்தியவர்கள் எதிர்கொண்ட சிக்கல்கள், நாடகத்துக்குப் பாடல்கள் எழுதித் தருபவர்களின் நிலைமை போன்ற செய்திகள் மின்சாரத் தந்தி விடு தூது நூலில் இடம் பெற்றுள்ளன. நூலின் பாட்டுடைத் தலைவர்களான தன வைசியர்கள் என்னும் நகரத்தார்களின் சிறப்பு, குலப்பெருமை, கொடை குணம் போன்ற செய்திகளும் இடம் பெற்றுள்ளன.

தூதுக்குப் பல பொருள்கள் இருக்கத் தான் தந்தியைத் தூதாகத் தேந்தெடுத்த காரணத்தை புலவர் நூலில் விளக்கியுள்ளார். தந்தியின் பெருமையை,

... விந்தையெலாம்‌
பெற்ற அமெரிக்காவில்‌ பென்லே ப்ரீஸ்‌ மோர்ஸ்‌ எனும்பேர்‌
உற்ற கலாநிபுணன்‌ உத்தியால்‌ - நற்றவத்தால்‌
ஆயிரத்து எண்ணூற்று முப்பத்தைந்தாம்‌ இங்கிலீஷ்‌ ஆண்டில்‌
சேய் என வந்து உற்பவித்த செல்வனே

- என்று குறிப்பிட்டுள்ளார்.

தந்தி பின்னால்‌ எப்படியெல்லாம் வளர்ச்சி பெற்றது, எந்தெந்தச் சாதனங்களுகத்கெல்லாம்‌ வழிகாட்டியாக, முன்னோடியாக அமைந்தது, அதன் ஆற்றல்கள் என்னென்ன என்பதைப் பின் வரும் பாடலில் விளக்கியுள்ளார்.

- ஏயும்‌ எட்டுத்‌
திக்கில்‌ நிகழ்செய்தி தெரிந்து அவரவர்க்கு உரைக்கும்
தக்க தபாலுக்குத்‌ தமையனே! - பக்குவமாய்‌
ஆர்ந்தவர்கள்‌ தம்காதில்‌ அந்தரங்க மாய்ப்பேசச்‌
சார்ந்த டெலிபோனுக்குத்‌ தந்‌தையே! - கூர்ந்து அன்பின்‌
எய்திய மாந்தர்க்கு இனிதாய்ச்‌ செவி வாய்க்குச்‌
செய்தி அமுதூட்டும்‌ திருத்தாயே! - ஐயமின்றிப்
போகவர யார்க்கும்‌ உயர்‌ புட்பகம்போல்‌ மேவுங்கால்‌
வேகப்‌ புகைரதத்து மித்திரனே! - ஓகை
நிலமிசையோர்‌ நெஞ்சில்‌ நினைத்தது உரைக்கும்‌
டெலிகிராம்‌ என்னும்‌ சீராளா!...

- என்றெல்லாம் தந்தியின் பெருமையைக் கூறியுள்ளார்.

தந்தி தெய்வங்களுக்கு நிகராகவும், பல தேசங்களுக்கு இணைப்புக் கருவியாகவும், புதியதொரு மொழியாகவும் விளங்குகிறது என்றும், தந்தியின் உதவியால் அரசாட்சி, வர்த்தகம்‌, பத்திரிகைத்‌ தொழில்‌, ரயில்‌ போக்குவரத்து முதலியனவெல்லாம் நடக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.‌

மதிப்பீடு

பத்தொன்பதாம்‌ நூற்றாண்டின்‌ பிற்பகுதியில்‌ ‌ நாடகங்கள்‌ எப்படி நடந்தன, எத்தகைய நாடகங்கள் நடிக்கப்‌ பெற்றன, நாடகங்களை நடத்திய ஆசிரியர்கள், அதில் நடித்த‌ நடிகர்களின் வாழ்க்கைத் தரம் எப்படி இருந்தது போன்ற செய்திகளை மின்சாரத் தந்தி விடு தூது நூல் கூறுகிறது. சென்னை வாழ்க்கை பற்றிய செய்திகளும் நூலில் இடம் பெற்றுள்ளன. தந்தியின் சிறப்பை, பெருமையைப் பேசிய தமிழின் முக்கிய நூலாக மின்சாரத் தந்தி விடு தூது நூல் அறிப்படுகிறது.

உசாத்துணை


✅Finalised Page