மாளவிகாக்கினிமித்திரம்

மாளவிகாக்கினிமித்திரம் (பொ.யு. 4-5-ம் நூற்றாண்டு) காளிதாசர் இயற்றிய சமஸ்கிருத நாடகங்களுள் ஒன்று. விதிஷ நாட்டின் அரசனான அக்கினிமித்திரன் மாளவிகா எனும் நடனப்பெண்ணின் மீது கொண்ட காதலைப் பற்றிய நாடகம். காதலும், உணர்வும், நகைச்சுவையும், சொற்சுவையும் நிரம்பிய நாடகமாக உள்ளது.
நூல் பற்றி
மாளவிகாக்கினிமித்திரம் காளிதாசர் இயற்றிய முதல் நாடகம். இவர் பொயு 4-5 நூற்றாண்டில் வாழ்ந்தவராக கருதப்படுகிறார். இரண்டாம் சந்திரகுப்தன் எனப்படும் விக்ரமாதித்யனின் அரசவைக் கவிஞர்.
கதைச் சுருக்கம்
விதிஷ நாட்டின் மன்னன் அக்னிமித்திரன், அந்நாட்டின் பட்டத்து ராணி தாரிணியின் அரண்மனையில் நடன மங்கையாக இருக்கும் மாளவிகா மீது காதல் கொள்கிறார். இதை அறிந்த ராணி மாளவிகாவை நாட்டை விட்டு கடத்துகிறார். அக்னிமித்திரன் மாளவிகாவை தொடர்பு கொண்டு காதலைத் தெரிவிக்கிறான். மாளவிகா தான் இறந்ததாக நினைத்த தன் அண்ணன் யக்ஞசேனன் என்ற விதர்ப்ப நாட்டு அரசனால் சிறைப்பிடிக்கப்பட்டதை அறிந்து அவனை மீட்கச் செல்கிறாள். விதூஷகனும், அக்னிமித்திரனும் பெண் வேடமிட்டு விதர்ப்ப நாட்டிற்குச் சென்று மாளவிகாவுடன் இணைந்து அவள் அண்ணனை மீட்கிறார்கள். மாளவிகா ஒரு அரச குடும்பத்தைச் சேர்ந்த பெண் என்பதை அறிந்து தாரணி தனது கணவரான அக்கினிமித்திரனுக்கு மணமுடித்து வைப்பதாக நாடகம் முடிகிறது.
இந்நாடகத்தில் புஷ்யமித்திர சுங்கன் செய்த ராஜசூய வேள்வியையும், சுங்கப் பேரரசின் காலத்திய இசை, நடிப்புக்கலை, நாட்டியக்கலை ஆகியவை சொல்லப்பட்டது. காதல், பொறாமை, சூழ்ச்சிகள், நகைச்சுவை நிறைந்த அரசவை வாழ்க்கையை நாடகம் காட்டுகிறது.
கதை மாந்தர்கள்
- ஆண் கதாபாத்திரங்கள்: சூத்திரதாரன், பாரிபார்சுவிகள், அக்னிமித்திரன் (கதையின் நாயகன்), கெளதமன் (விதூஷகன்), வாஹதகன் (மந்திரி), கணதாஸன் (அரண்மனை நாட்டியாசிரியன்), ஹரதத்தன் (நாட்டியாசிரியன்), மெளத்கல்யன் (கஞ்சுகி அல்லது நகரிபொக்கிஷதாரன்), ஸாரஸகன் (தாரிணி தேவியின் வேலையாள்), வாதாளிகர்கள் இருவர்கள் (அரசனைத் துதி பாடுகிறவர்கள்)
- பெண் கதாபாத்திரங்கள்: மாளவிகா (கதாநாயகி), தாரிணி (பட்டத்தரசி), ராவதி (அரசனின் இரண்டாவது மனைவி), பரிவ்ராஜிகா (ஸந்யாஸினி), ஜயஸேனா (அரண்மனை காவற்காரி), பகுளாவளிகா (தாரிணிதேவியின் பரிஜனமும் மாளவிகாயின் தோழியுமானவள்), கெளமுதிகா; நாகரிகா (தாரிணிதேவியின் வேலைக்காரிகள்), நிபுணிகா (ராவதியின் வேலைக்காரி), மதுகரிகா (உத்தியானவனக் காவற்காரி), ஜ்யோத்ஸ்னிகா (யக்ஞஸேனனது பணிப்பெண்), ஸமாபிருதிகா (பரிவ்ராஜிகையின் வேலைக்காரி)
- மற்ற கதாபாத்திரங்கள்: யக்ஞசேனன் (விதர்ப்ப தேசத்து அரசன்), மாதவசேனன் (மாளவிகாவின் சகோதரன்), சுமதி (மாதவசேனனின் மந்திரி), புஷ்பமித்ரன் (அக்னிமித்ரனின் தந்தை), வசுமித்ரன் (அக்னிமித்ரனின் புதல்வன்), வீரசேனன் (அக்னிமித்ரனின் மைத்துனன்), மெளர்யஸசிவன் (யக்ஞசேனனின் மந்திரி), துருவஸித்தி (அரண்மனை விஷ்வைத்தியன்), வசுலஷ்மி (அரசனின் குமாரி), மாதவிகா (நிலவரைக் காவற்காரி), சந்திரிகா (ராவதியின் வேலைக்காரி)
நாடக அமைப்பு
ஐந்து அங்கங்களைக் கொண்ட நாடகம்.
அங்கம் 1
மன்னன் அக்னிமித்திரன் நடன மங்கையர்களுள் ஒருவளான மாளவிகா மீது காதல் கொண்டதை விதூஷகன் கண்டு கொள்கிறான். அவனின் உதவியுடன் அக்னிமித்திரன் மாளவிகாவைக் காண ஏற்பாடு செய்கிறான். அதற்காக கணதத்தன், ஹரதத்தன் ஆகிய இரு நடன ஆசிரியர்களுக்கும் இடையிலான போட்டியாக வைத்து மாளவிகாவின் நடனத்தைக் காண ஏற்பாடு செய்கிறான்.
அங்கம் 2
நடனப்போட்டியில் தன் அபிநயத் திறமையால் மாளவிகா அனைவரின் மனத்தையும் கவர்கிறாள். அக்னிமித்திரனின் காதல் ராணி தாரிணிக்குத் தெரியவர அவள் மாளவிகாவை அரண்மனையிலிருந்து விலக்கி தூரம் அனுப்புகிறாள். குழப்பமும், நகைச்சுவையும் ததும்பிய நிகழ்வுகள் நடைபெறுகின்றன.
அங்கம் 3
மன்னன் தனது அமைச்சரின் உதவியுடன் பல திட்டங்கள் தீட்டி மாளவிகாவை மீண்டும் சந்திக்கிறான். இருவரும் தங்கள் காதலை வெளிப்படுத்திக் கொள்கிறார்கள். அக்னிமித்திரனின் இரண்டாவது மனைவி இராவதி பொறாமை கொள்கிறாள். மாளவிகா தன் இறந்து போன அண்ணன் உயிருடன் இருப்பதையும், சிறைப்பட்டுக் கிடப்பதையும் அறிந்து அவனை மீட்கச் செல்கிறாள்.
அங்கம் 4
பல திருப்பங்களுக்குப் பிறகு, மாளவிகா உண்மையில் ஒரு இளவரசி என்பதும், அவள் ஒரு சூழ்ச்சியால் அடிமைப்பெண்ணாக மாற்றப்பட்டவள் என்பதும் தெரியவருகிறது. அக்னிமித்திரனும், விதூஷகனும் பெண் வேடம் அணிந்து மாளவிகாவின் அண்ணன் சிறைப்பட்டிருந்த தன் எதிரியான யக்னசேனனின் அரசுக்குள் நுழைகிறார்கள். மூவரும் இணைந்து அவனை மீட்கும் நிகழ்வுகள் நகைச்சுவையாக சொல்லப்பட்டுள்ளது.
அங்கம் 5
மாளவிகா அரச குடும்பத்தைச் சேர்ந்தவள் என்று தெரியவருகிறது. ராணி அவளை ஏற்றுக் கொள்கிறாள். மாளவிகாவின் அண்ணன் காப்பாற்றப்படுகிறான். அக்னிமித்திரனுக்கும் அவளுக்கும் திருமண நிகழ்வு நடைபெறுகிறது.
தமிழில்
தமிழில் ஸ்ரீனிவாச ராகவாச்சாரியார், எஸ். ஸ்ரீனிவாச தேசிகன், நடேச சாஸ்திரியார். ஆர்.வி. கிருஷ்ணமாச்சாரியார், ப.சம்பந்த முதலியார். எஸ்.ஏ. ராமசாமி ஆகியோரின் மொழிபெயர்ப்பில் மாளவிகாக்னிமித்ரம் வந்துள்ளது. 1938-ல் எஸ். ஸ்ரீனிவாச தேசிகன் வெளியிட்ட மொழிபெயர்ப்பை உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் மறுபதிப்பாக 2002-ல் வெளியிட்டது. இது பொ.யு.20-ம் நூற்றாண்டின் தொடக்க காலகட்டத்தில் நிலவிய சமஸ்கிருத கலப்பு மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது.
மதிப்பீடு
காதலும், நகைச்சுவையும், சொற்சுவையும் நிரம்பிய நாடகமாக மாளவிகாக்னிமித்திரம் அறிஞர்களால் சொல்லப்பட்டுள்ளது. அக்காலத்தைய சமூக, வாழ்க்கை முறைகளை எடுத்தியம்புவதாக உள்ளது.
இணைப்புகள்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 31-Jan-2026, 08:36:02 IST