under review

மார்த்தா மால்ட்

From Tamil Wiki
மார்த்தா மால்ட்

மார்த்தா மால்ட் (1794-1870 ) கிறிஸ்தவ இறைப்பணியாளர். நாகர்கோயிலில் லண்டன் மிஷன் சொசைட்டி சார்பில் இறைப்பணியாற்றினார். தமிழகத்தின் பெண்கல்வி, பெண் தற்சார்பு ஆகியவற்றில் முன்னோடிப் பணிகளை ஆற்றினார்.

பிறப்பு, கல்வி

மார்த்தா மால்ட்டின் ஆலிவர் கிராம்வெல் என்னும் புகழ்பெற்ற பிரிட்டிஷ் போர்வீரரின் நான்கு மகள்களில் ஒருவரின் வழித்தோன்றல். பிரிட்டனில் ஹண்டிங்டன்ஷயரில் செண்ட் நியோட்ஸ் (St. Neots) என்னும் இடத்தைச் சேர்ந்தவர். மார்த்தா நீ மீட் (Martha nee Mead) என்பது முழுப்பெயர். (சார்ல்ஸ் மீட்டுக்கும் இவருக்கும் தொடர்பில்லை). 1794 ல் செண்ட் நியோட்ஸில் பிறந்தார்.

தனிவாழ்க்கை

1818 ல் மார்த்தா செண்ட் நியோட்ஸில் தன் இருபத்து நான்காவது வயதில் ஷ்ராப்ஷயர் (Shropshire) குடும்பத்தைச் சேர்ந்த சார்ல்ஸ் மால்ட் ஐ மணந்தார். அதற்கு ஒருவாரம் முன்னர்தான் மால்ட் லண்டன் மிஷன் சொசைட்டியில் குரு பட்டம் பெற்றிருந்தார்.

மார்த்தா ஐந்து குழந்தைகளைப் பெற்றார். 1833-ல் பிரசவத்தால் நோயுற்று இங்கிலாந்து திரும்பினார். தன் குழந்தைகளையும் உடன் கொண்டுவந்து தன் சகோதரனை பாதுகாவலராக நியமித்து லண்டன் மிஷன் கல்விநிலையங்களில் படிக்கச் செய்தார்.

மார்த்தாவின் மூன்று மகன்களில் இருவர் மருத்துவர்களாகவும் ஒருவர் ஓவியராகவும் ஆனார்கள். இரு மகள்களும் மதப்பணியாளர்களை மணந்தனர். சாரா மால்ட் ஜே.ஓ.வைட்ஹவுஸ் என்னும் மதப்பணியாளாரை 1849ல் மணந்தார். முதல் மகளான எலிசா மால்ட் புகழ்பெற்ற மதப்பணியாளரான கால்டுவெல்லை மணந்தார்.

மார்த்தா எழுதிய கடிதங்களில் தன் பிள்ளைகளின் படிப்பைப் பற்றி தொடர்ச்சியாக அக்கறை கொண்டிருந்தது தெரியவருகிறது. 1836-ல் மீண்டும் இந்தியா திரும்பினார்.

1843-ல் தென் திருவிதாங்கூரில் காலரா பரவியது. மால்ட் நோயுற்று நலிந்தார். 1854-ல் சார்ல்ஸ் மால்ட் லண்டன் திரும்புவதற்கான அனுமதியைப் பெற்றார். மால்டும் மார்த்தாவும் லண்டன் திரும்பினர். அவர்கள் கோவென்டிரி Coventry அருகே ஸ்டோக் Stoke என்னும் இடத்தில் வாழ்ந்தனர்.

கல்விப்பணி

1818-ல் மார்த்தா சார்ல்ஸ் மால்ட்டுடன் ஆறு மாதகாலம் கப்பலில் பயணம் செய்து மும்பைக்கு வந்தார். ஏழு மாதங்கள் அங்கே தங்கிவிட்டு டிசம்பர் 1819-ல் அன்றைய திருவிதாங்கூர் அரசின் நகரமான நாகர்கோயிலுக்கு வந்தார்.

மால்ட் 1821-ல் நாகர்கோயிலில் முதல் அச்சகத்தை நிறுவினார். மார்த்தா நாகர்கோயிலில் பெண்களுக்கான பள்ளிக்கூடத்தை 1821-ல் நிறுவினார். தென்னிந்தியாவில் மிஷனரிகளால் தொடங்கப்பட்ட முதல் பெண்கள் பள்ளி அதுவே. அதை அடுத்த ஆண்டே உண்டு உறைவிடப்பள்ளியாக ஆக்கினார். தென்னிந்தியாவில் முதல்முதலாக பெண்களுக்கான உண்டு உறைவிடப்பள்ளி அதுதான். இப்பள்ளி இன்று பலவாறாக வளர்ந்து டதி பள்ளியாக (Duthie Girls Higher Secondary School) செயல்படுகிறது

மார்த்தா 1841ல் தன் மகள்களின் உதவியுடன் நாகர்கோயிலைச் சுற்றியிருந்த 26 ஊர்களில் பெண்களுக்கான பகுதிநேரப் பள்ளிகளை தொடங்கினார். அங்கே கற்பிப்பதற்கான ஆசிரியைகளை நாகர்கோயில் உண்டு உறைவிடப்பள்ளியில் பயிற்றுவித்தார். நாகர்கோயிலைச் சுற்றி பெண்கள் கல்வி தழைக்க மார்த்தா அடித்தளம் அமைத்தார். மார்த்தா கல்விப்பணியில் ஜோகன்னா மீட்டுடன் இணைந்து செயல்பட்டார்.

தொழில்

மார்த்தா தன் அன்னையிடமிருந்து கற்ற பட்டில் லேஸ் பின்னும் கலையை நாகர்கோயிலில் தன் பள்ளியில் பயிலவந்த பெண் குழந்தைகளுக்குக் கற்பித்தார். அந்த லேஸ் லண்டனுக்கு ஏற்றுமதி ஆயிற்று. அதற்கு லண்டனில் வரவேற்பிருந்தது. அந்தப் பெண்கள் தங்களுக்கான செலவை லேஸ் பின்னுவதன் வழியாக ஈட்டமுடிந்தது. வீட்டுக்கும் உதவ முடிந்தது. பெண்கள் வருமானம் ஈட்டமுடிந்தமையால் வீட்டார் அவர்களை படிக்க அனுப்பினார்கள். லேஸுக்கான பட்டுநூல் லண்டனில் இருந்து இறக்குமதியாகியது.

"இந்தக் குழந்தைகளில் பலர் அனாதைகள். அவர்களைப் பராமரிக்க வேண்டியவர்கள் எவரும் இல்லை. இந்த புகலிடம் (பள்ளி) மட்டும் இல்லையென்றால் அவர்கள் நிராதரவாக்கப்பட்டு தீமைகளுக்கு ஆளாக்கப்பட்டு தீயூழுக்கு ஆளாகிய் அழிய நேரிடும். அத்தகைய குழந்தை சொல்லவே முடியாத அளவு பரிதாபத்திற்குரியது. மேலும் இந்த பெண்களில் பலர் அடிமைகள் ...நாங்கள் மற்றவர்களை விட கூடுதல் கவனம் எடுத்து அவர்களுக்கு லேஸ் பணிகளைச் செய்ய கற்றுக்கொடுக்கிறோம். அவர்களின் வருமானம் அவர்களின் வாழ்க்கைச்செலவை விட அதிகமாக இருந்தால் அவர்களின் உழைப்பின் விளைவான வருமானத்தில் ஒரு பகுதி அவர்களின் சுதந்திரத்தை வாங்குவதற்கு ஒதுக்கப்படுகிறது" என்று மார்த்தா எல்.எம்.எஸ் அமைப்புக்கு எழுதிய ஒரு கடிதத்தில் குறிப்பிடுகிறார் (Martha's letter to the LMS headquarters, 26 Austin Friars, London; dated 2nd June 1830).

மார்த்தா மதம் மாறிய பெண்களுக்கும் லேஸ் பின்னும் தொழிலை அறிமுகம் செய்தார். ஒரு கட்டத்தில் ஆயிரக்கணக்கான பெண்கள் நாகர்கோயில் வட்டாரத்தில் லேஸ் தொழிலில் ஈடுபட்டிருந்தார்கள். லேஸ் தொழில் 1840களில் நாகர்கோயிலில் முக்கியமான ஒரு பொருளியல் அடிப்படையாக அமைந்தது என்று இ.ஜி ஹாட்ச் தன் அறிக்கை ஒன்றில் குறிப்பிடுகிறார் (Hatch EG, "Travancore: A Guide Book for Visitors")

தோள்சீலை கலவரம்

மார்த்தா மால்ட் மதம் மாறிய நாடார் சாதிப் பெண்களை மார்பை மூடிக்கொண்டு தேவாலய வழிபாட்டுக்கு வரும் படிச் சொன்னார். அது தோள் சீலைக் கலவரத்திற்கான காரணங்களில் ஒன்றாக ஆகியது. (தோள்சீலை கலகம்)

மறைவு

மார்த்தா மால்ட் 1870-ல் லண்டனில் மறைந்தார்

வரலாற்று இடம்

மார்த்தா மால்ட் இந்தியாவில் பெண்கல்விக்கு உழைத்த முன்னோடிகளில் ஒருவர். பெண்களுக்கான உண்டு உறைவிடப்பள்ளிகளை உருவாக்கினார். பெண்களுக்கு பொருளியல் தற்சார்பு உருவாகவும் முன்னோடியான பணிகளை ஆற்றினார்.

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 06-Nov-2024, 21:39:56 IST