மாதவி காவியம்

மாதவி காவியம் (முதல் பதிப்பு: 1995) சிலப்பதிகாரத்தின் கதைமாந்தரான மாதவியைக் காப்பியத் தலைவியாக வைத்து இயற்றப்பட்ட குறுங்காப்பியம். இதனை இயற்றியவர் கவிஞர் தமிழ் ஒளி.
வெளியீடு
மாதவி காவியம், கவிஞர் தமிழ் ஒளியால் 1958-ல் இயற்றப்பட்டது. இதன் முதல்பதிப்பு தமிழ் ஒளியின் மறைவுக்குப் பின், அவரது நண்பர் செ.து. சஞ்சீவியின் முயற்சியால் 1995-ல் வெளிவந்தது. இரண்டாம் பதிப்பு 2003-லும், மூன்றாம் பதிப்பு 2010-லும் வெளிவந்தன. 2016-ல் வெளிவந்த 'கவிஞர் தமிழ் ஒளி காவியங்கள்' என்ற தொகுப்பு நூலில் மாதவி காவியமும், தமிழ் ஒளியின் பிற காப்பியங்களுடன் இணைந்து இடம்பெற்றது.
நோக்கம்
சிலப்பதிகாரத்தில் எதிர்மறைப் பண்பு கொண்டவளாகச் சித்தரிக்கப்படும் மாதவியை உணர்ச்சிகரமான தமிழ்ப் பெண்ணாக சித்தரித்துள்ளார். அதேசமயம் மாதவி துறவு பூணும் காட்சிகளை தவிர்த்துள்ளார். "என் கதையில் மாதவி மனம் மாறும் நிலையை மட்டுமே காட்டி செல்வங்களை தானஞ்செய்யும் நிகழ்ச்சி, பௌத்த சங்கத்தை அடையும் நிகழ்ச்சி ஆகியவற்றை உய்த்துணருமாறு விட்டுள்ளேன்" என்று தமிழ் ஒளி கூறுகிறார்.
அமைப்பு
சிலப்பதிகாரத்திலுள்ள புகார்க் காண்டம் இந்நூலின் தொடக்கமாக அமைந்துள்ளது புகார்க்காண்டத்தில் இடம்பெறும் கானல்வரியும், வேனிற்காதையும் மாதவி காவியத்தில் துறவுக் காண்டத்தில் இடம்பெற்றுள்ளன. சிலம்பில் புகார்க்காண்டத்தில் இடம் பெற்றுள்ள அந்தி மாலை சிறப்பு செய் காதை, இந்திரவிழா ஊர் எடுத்த காதை இரண்டும் மாதவி காவியத்தில் பட்டினக் காண்டத்தில் இடம்பெறுகின்றன. அரங்கேற்றுக் காதையை அரங்கக்காதை என்றும் கடலாடு காதையை நிலவாடுகாதை எனவும் கவிஞர் தமிழ் ஒளி மாற்றம் செய்திருக்கிறார்.
தமிழ் ஒளி புகார்க் காண்டத்தின் தொடக்கமாக 'பூர்வ காதை' என்ற பெயரில் மாதவியின் பிறப்பையும் சிறப்பையும் சொல்லிக் கதையைத் தொடங்குகிறார்.
கதைச்சுருக்கம்
இந்நூல் சிலப்பதிகார நாயகியரில் ஒருவரான மாதவியின் பிறப்பு, அவளுடைய குணங்கள் ஆகியவற்றைச் சொல்லி தொடங்குகிறது. மாதவி கோவலன் இறப்பை அறிந்து துயருறுவதில் முடிகிறது.
நடை
யாழே! அது தரும் அமுதநல் லிசையே!
ஊழே! உயிர்களை உருத்திடும் பாழே!
அலையே! கடலே! அவ்வயின் நிழலே!
பொழிலே! மணலே! புகார் எனுந்துறையே!
கழியே! கலனே! கடல்விளை யாட்டே!
புன்னையே! மலரே! புதுமணப் பெண்ணே!
அன்னையே! காவிரி! அனைவரும் கூறீர்!
கள்ளம் உடைய கருத்தால் கோவலன்
உள்ளம் உடைய உரைத்ததும் உண்டோ?
வெள்ளை மனத்தால் விளித்தேன்
பிள்ளை மனத்தால் பிதற்றினேன் பாவி நான்!
(கானல்வரி)
இலக்கிய இடம்
மாதவி காவியம் மரபான செவ்வியல் இலக்கியங்களை மறு ஆக்கம் செய்யும் நவீன இலக்கிய முறையில் அமைந்தது, ஆனால் மரபுச்செய்யுளாகவும் உள்ளது. ஆண்-பெண் உறவு, பெண்ணின் கற்பு ஆகியவற்றைப்பற்றிய பழைய பார்வைகளை மறுபரிசீலனை செய்யும் தன்மை கொண்டுள்ளது. மொழியழகு, நடை ஆகியவற்றால் இதுவே தமிழ் ஒளியின் சிறந்த படைப்பாகக் கருதப்படுகிறது.
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 19-Jul-2025, 21:21:41 IST