under review

மஹதி

From Tamil Wiki
எழுத்தாளர் மஹதி

மஹதி (இயற்பெயர் : எஸ். ஸய்யித் அஹமத்) (மே 04, 1907 - ஆகஸ்ட் 02, 1974) கவிஞர், எழுத்தாளர், கட்டுரையாளர், பத்திரிகை ஆசிரியர் எனப் பன்முகப் படைப்பாளியாகத் திகழ்ந்தவர். மஹதி, கவிக்கோ அப்துல் ரகுமானின் தந்தை.

பிறப்பு, கல்வி

மஹதி, மே 04, 1907-ல், மதுரை முனிச்சாலை கரீம்சா பள்ளிவாசல் சந்தில் பிறந்தார். தந்தை ஸையத் அஷ்ரப் மார்க்க அறிஞர். தமிழ், பாரசீகம், உருது மொழிகளில் தேர்ந்தவர். கவிஞர். நாவல் ஒன்றையும் எழுதியிருக்கிறார். தாய் அஸீஸா பேஹம் ஆற்காட்டு நவாப் முகம்மதலியின் குடும்பத்தைச் சேர்ந்தவர். பள்ளி இறுதி வகுப்பை முடித்த மஹதி, தமிழ், அரபி, உருது, பாரசீக மொழிகளை முழுமையாகக் கற்றுத் தேர்ந்தார்.

தனி வாழ்க்கை

படிப்பை முடித்ததும் போடிநாயக்கனூர் உயர்நிலைப் பள்ளியில் உருது மொழி கற்பிக்கும் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார் மஹதி. இஸ்லாமியர்கள் மட்டுமல்லாது ஆர்வமுள்ள இந்துக்கள் சிலரும் அவரிடம் உருது பயின்றனர். அவர்களுள் ஒருவரான சி.எம். வேணுகோபால், மஹதியின் நெருங்கிய நண்பரானார். மஹதியின் பன் மொழித் திறமைகளை அறிந்த இவர் மஹதியை எழுத ஊக்குவித்தார். மஹதியின் துணைவியார் ஜைனப் பேகம். இவர்களுக்கு அப்துல் ரகுமான் (கவிக்கோ), அப்துல் கரீம், அஸீஸா பேகம், அப்துல் ரஷீத் என நான்கு பிள்ளைகள்.

குடும்பச் சூழல்களால் மதுரையில் 'லோட்டஸ்’ என்னும் புகைப்பட அட்டை தயாரிக்கும் நிறுவனத்தின் பயண முகவராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் மஹதி. அது குறைந்த ஊதியம் தரும் பணியாக இருந்தாலும், அதன் மூலம் இந்தியா முழுமையும் பயணப்படும் வாய்ப்பு அமைந்ததால் விரும்பி அப்பணியை ஏற்றார். அதன் மூலம் பரந்துபட்ட அனுபவம் பெற்றார். மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, பஞ்சாபி, மராத்தி, வங்காளம் எனப் பல மொழிகளைக் கற்கும் வாய்ப்பும் அப்பணியால் அமைந்தது.

இலக்கிய வாழ்க்கை

கவிஞர்

தனது ஓய்வு நேரங்களில் உருது மொழியில் பல கவிதைகளை எழுதினார் மஹதி. அவை அக்காலத்தில் டெல்லியிலிருந்து வெளிவந்த 'தீன் துனியா’, 'ஜமீன்தார்’ போன்ற உருது இலக்கிய இதழ்களில் வெளியாகின. அக்கவிதைகள் மூலம் அக்காலத்தின் புகழ் பெற்ற கவிஞர்களான 'ஜிகா’, 'ஸீமாப்’ ஆகியோரின் நட்பு வாய்க்கப்பெற்றார். ப.ஜீவானந்தம், பாரதிதாசன் போன்றோரும் மஹதிக்கு நண்பர்களாக இருந்தனர். பிற்காலத்தில் திராவிட இயக்கம் இவரை ஈர்த்தது. ஈ.வெ.ரா., அண்ணா ஆகியோரது நன்மதிப்பைப் பெற்றார்.

மஹதியின் சிறுகதைகள் (நன்றி : யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ்)
எழுத்தாளர்

மஹதி, நண்பர் தேவாரம் நாராயணசாமியின் தூண்டுதலால் தமிழில் எழுத ஆரம்பித்தார். மஹதியின் முதல் சிறுகதை, 1930-ல், அக்காலத்தின் புகழ்பெற்ற 'ஆனந்தபோதினி’ இதழில் வெளியானது. தொடர்ந்து நாராயணசாமி நடத்திய 'பாரதி’ இதழில் கதை, கவிதை, கட்டுரைகளை எழுதினார். மஹதியின் படைப்புகள் கலைமகள், கல்வி, ஆனந்தவிகடன், தாருல் இஸ்லாம் போன்ற இதழ்களில் வெளியாகின. கலைமகளில் 'முன்ஷி’ என்ற புனை பெயரில் எழுதியவர், பிற இதழ்களில் 'எஸ்.ஏ. ஸய்யித் அஹமத்’ என்ற தனது இயற்பெயரிலும், 'எஸ்.எஸ்.ஏ,’ 'அஹ்மத்’, 'மதுரையார்’, 'நக்கீரர்’ போன்ற பல புனைபெயர்களிலும் எழுதினார். என்றாலும் 'மஹதி’ என்ற பெயரிலேயே அதிகம் எழுதினார். அப்பெயரே அவருக்கு எழுத்தாளர் என்னும் அடையாளத்தைப் பெற்றுத் தந்தது.

இஸ்லாமிய இதழ்களான 'முஸ்லிம் முரசு’, 'மணிவிளக்கு’, 'பிறை’, 'ஷாஜஹான்’, 'குர் ஆனின் குரல்’ போன்றவற்றில் கதை, கட்டுரை, மொழிபெயர்ப்புகளை எழுதினார். சமூகக் கதைகள் மட்டுமல்லாமல் வரலாற்றுச் சிறுகதைகளையும் எழுதினார். உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து வரலாற்றுக் கதைகள் பலவற்றை எழுதியுள்ளார். 'மணி விளக்கு’ இதழில் இவர் எழுதிய 'தங்கநிலா’ குறிப்பிடத்தகுந்த வரலாற்றுத் தொடர். பாமினி சுல்தான்கள் மற்றும் விஜயநகரப் பேரரசை மையமாக வைத்து அந்த நாவல் தொடரை எழுதியிருந்தார் மஹதி.

இதழாசிரியர்

1933-ல், 'வெடிகுண்டு’ என்ற வார இதழைத் தொடங்கினார் மஹதி. அதில் இஸ்லாமிய சமூகத்தில் இருந்துவந்த மூட நம்பிக்கைகளைக் கண்டித்து எழுதினார். அதற்குப் பலவாறாக எதிர்ப்பு வந்ததால் அதனை நிறுத்தினார். தொடர்ந்து 'சிட்டி கெஜட்’ என்ற மாவட்டச் செய்தி இதழ் ஒன்றைத் தொடங்கினார். பொருளாதாரச் சிக்கலகளால் அவ்விதழ் ஓராண்டிலேயே நின்றுபோனது. 'எஸ்.சையது அஹமது’ என்னும் தனது இயற்பெயரில் 'ருஷியப்புரட்சி’ என்ற நூலை எழுதி வெளியிட்டார். அது பரவலான வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து நண்பர் நவாப்ஜானின் ஆதரவுடன் 'நவயுக வெளியீடு’ என்னும் ஓர் விளம்பர இதழைத் தொடங்கி நடத்தினார். ஆரம்பத்தில் இலவச இதழாக வெளிவந்த இவ்விதழ், பின்னர் ஓரணாவிற்கும், சில காலத்திற்குப் பின் இரண்டணாவிற்கும் விற்கப்பட்டது. பொருளாதார நெருக்கடியால் நாளடைவில் இவ்விதழும் நின்றுபோனது.

'செய்குத் தம்பி 'முழக்கம்’ என்ற நூலின் பொறுப்பாசிரியராகப் பணிபுரிந்த அனுபவமும் மஹதிக்கு உண்டு. கே. சையத் அப்துல் கபூருடன் இணைந்து 'முஸ்லிம் சமுதாயம்’ என்ற இதழை நடத்தியிருக்கிறார். 'இஸ்லாமியச் சோலை’ என்ற இதழையும் சிலகாலம் நடத்தியுள்ளார் மஹதி.

விருது

1960-ல், சென்னையில் தொடங்கப்பெற்ற முஸ்லிம் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைராகப் பொறுப்பு வகித்தவர் மஹதி. தனது எழுத்துலகச் சாதனைகளுக்காக 1974-ல், சென்னை புதுக்கல்லூரியில் நிகழ்ந்த இஸ்லாமியத் தமிழாராய்ச்சி மாநாட்டில் பொற்கிழி வழங்கிச் சிறப்பிக்கப்பட்டார்.

மறைவு

மஹதி, உடல் நலக் குறைவால், ஆகஸ்ட் 2, 1974 அன்று காலமானார்.

இலக்கிய இடம்

பொதுவாசிப்புக்குரிய பல கதைகளை, கட்டுரைகளை எழுதியவர் மஹதி. இஸ்லாமிய நாகரிகம், பண்பாடு ஆகியவற்றை விரிவாக அறிமுகப்படுத்துவதையும், இஸ்லாமியர்கள் சிலரிடம் இருந்த மூட நம்பிக்கைகளைக் களைவதையும் தனது முக்கிய நோக்கமாகக் கொண்டு எழுதினார். இந்து-முஸ்லிம் ஒற்றுமையைத் தனது படைப்புகளில் வலியுறுத்தினார். மூத்த இஸ்லாமியப் படைப்பாளியாக மதிக்கப்படும் மஹதி, தனது படைப்புகள் குறித்து, "தமிழில் முஸ்லிம்களின் வாழ்க்கையையும், உணர்ச்சிகளையும் படம்பிடித்துக்காட்டும் கதைகள் அதிகமாக வரவில்லை. ஆகவே நான் இதில் அதிகக் கவனம் செலுத்தியிருகிக்றேன். என் கதைகளில் பிரசாரம் இருப்பதாகக் கூறலாம். மக்களின் வாழ்க்கை, வளமாகவும் சிக்கல்கள் இல்லாமலும் இருந்தால் கலை, கலைக்காகவே இருந்துவிட்டுப் போகலாம். கலை மக்களிடையே பிரசாரம் செய்ய வேண்டிய அவசியம் நேரும்போது, செய்வதில் தவறு ஒன்றும் இல்லை என்பதே என் கட்சி" என்று குறிப்பிட்டுள்ளார்.

படைப்புகள்/நூல்கள்

மனநிறைவு - மஹதி சிறுகதை
சிறுகதைகள்
  • ஆயிஷா ஸூல்தானா
  • நல்ல முடிவு
  • வைரமோதிரம்
  • ஜஹாங்கீரின் தீர்ப்பு
  • டாக்டர் நடித்த நாடகம்
  • வியாபாரி
  • சந்தாபாய்
  • அனார்க்கலியின் தங்கை
  • பிர்தவ்ஸியின் மகள்
  • பகுதாது வீரன்
  • ருஸ்தும் - ஸொஹராப்
  • மனநிறைவு
  • மன்னிப்பு மற்றும் பல
கட்டுரைகள்
  • முஸ்லிம் மன்னர்களும் தமிழ் மன்னர்களும்
  • நாம் ஆண்ட தென்னகம்
  • பிறை தந்த செய்தி
  • இஸ்லாமியச் சிறுகதைகள் எழுதுவது எப்படி? மற்றும் பல
நாவல்
  • தங்க நிலா (நூலாக்கம் பெறவில்லை)
சிறுகதைத் தொகுப்புகள்
  • இமயத்தின் சிரிப்பு
  • மஹதியின் சிறுகதைகள்
மாவீரர் கான்சாஹிப் (நன்றி : யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ்)
கட்டுரை நூல்கள்
  • ருஷியப் புரட்சி
  • குர் ஆன் கூறுவது என்ன?
  • மினாராவின் குரல்
  • இஸ்லாமிய மார்க்க மேதைகள்,
  • ஹலரத் முஹம்மது (ஸல்-அம்)
  • மாவீரர் கான் சாஹிப்
  • முதல் சுதந்திரப் போர் வீரர் குஞ்சாலி மரைக்காயர்
  • முஸ்லிம்கள் ஆண்ட இந்தியா
  • இஸ்லாம் பரவிய வரலாறு
  • இஸ்லாமிய வீர வனிதையர்
  • பெருமானாரின் பிரியத் தோழர்கள் மற்றும் பல
மொழிபெயர்ப்புகள்

(மூலம் : மௌலானா ஸையித் அபுல் அஃலா மௌ தூதி)

  • இதுதான் இஸ்லாம்
  • இருளும் ஒளியும்
  • மனித இனத்தின் ஆக்கமும் அழிவும்
  • ஒழுக்கம் பேண ஒரே வழி
  • மறை காட்டும் இறைதூதர்
  • முஸ்லிமின் அடிப்படைக் கடமை
  • அறப்போர்
  • கதைக்குள் கதை - (மூலம் : மாயில் கைராபாதி)
  • தேன் துளிகள் - (மூலம் : மௌலானா அஃப்ஸல் ஹுஸைன்) மற்றும் பல.

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 01-Sep-2023, 11:27:36 IST