மலையடிக்குறிச்சி குடைவரை
மலையடிக்குறிச்சி குடைவரை (பொயு. 7 ஆம் நூற்றாண்டு). தென்காசி மாவட்டம் சிவகிரி வட்டத்தில் அமைந்துள்ளது. முற்கால பாண்டியர்களால் எடுக்கப்பட்ட ஆரம்ப கால குடைவரைக் கோவில். இந்து சமய அறநிலையத்துறையினால் நிர்வகிக்கப்படுகிறது.
அமைவிடம்
தென்காசி மாவட்டம் சிவகிரி வட்டத்தில் வாசுதேவநல்லூர் புளியங்குடி சாலையில் இடது புறம் திரும்பும் பாதையில் தாருகாபுரம் மத்தியஸ்தநாதர் கோவில் உள்ளது. அதனை அடுத்து உயர்ந்த குன்றின் கீழ் அமைந்துள்ள ஊர் மலையடிக்குறிச்சி . அதன் கிழக்குப் பகுதியின் சரிவில் அமைந்துள்ளது மகாதேவர் குடைவரை கோவில்.
கோவில்அமைப்பு
அடிவாரத்தில் இருந்து மேலேறும் பாதையில் 20 மீட்டர் உயரத்தில் புதியதாக கட்டபட்ட மண்டபம் அமைந்துள்ளது. அதனை அடுத்து தெற்கிலும் கிழக்கிலும் நோக்கிய முன் மண்டபம் பிற்காலத்தில் கட்டப்பட்டதினை நான்கு தூண்கள் தாங்குகின்றன. அதன் வலது புறம் தெற்கு நோக்கிய அம்மன் சந்நிதி பிற்கால கட்டடிட அமைப்புடன் கட்டப்பட்டுள்ளது. சிவன் சந்நிதி மற்றும் அதன் முன் இருக்கும் மூன்று வாயில்கள் மட்டுமே முற்கால பாண்டியர் குடைவரை.
முகப்பு
முன் மண்டபத்தை அடுத்து பழமையான பட்டை தூண்கள் நான்கு நிற்கின்றன. இவை சதுரம், கட்டு, சதுரம் என அமைந்துள்ளன. வலதுபுற இரண்டாவது தூணின் மீது சிதைந்து போன சிற்பம் உள்ளது. நான்கு தூண்களிலும் பட்டையான பக்கத்தில் மலர்ந்த தாமரை, வட்டவடிவில் அமைக்கப்பட்டுள்ளன. பறவை உருவங்களும் மலரும் இணைந்து இத்தூண்கள் செதுக்கப்பட்டுள்ளன. பாண்டியர் குடைவரைகளில் மற்ற இடங்களில் இதை காண முடியாது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். தூண்களில் மேல் பகுதியில் மர உருளை அமைப்பில் தாரங்க போதிகையாக வடிக்கப்பட்டு உள்ளது.
கருவறை
மேற்கு பகுதியில் பாறையை குடைந்து மகாதேவர் சந்நிதி எடுக்கப்பட்டுள்ளது. மகாதேவர் சந்நிதியின் கருவறையின் வாயிலை ஒட்டி உள்ள சுவரில் இரண்டு கோட்டங்கள் குடையப்பட்டுள்ளன. இவற்றுள் இருந்த சிற்பங்கள் சிதைந்துள்ளது. கருவறை வாயிலின் மேலே மகர தோரணம் உள்ளது. கருவறையின் உள்ளே சதுர ஆவுடையார் லிங்கம் உள்ளது. இந்த லிங்கம் தாய்பாறையில் செதுக்கப்பட்டது இல்லை. எடுத்து செய்து உள்ளே வைத்தது.
வரலாறு
முற்கால பாண்டிய மன்னனான செழியன் சேந்தனிடம் பணிபுரிந்த அதிகாரி அதி அரையன் சேவூர்க்கிழான் சாத்தனேறன் என்பவரால் அரசன் ஆணைப்படி இக்கோயில் எடுக்கப்பட்டுள்ளது. கல்லாலானக் கோயில் என்ற பொருள்படும் கற்றிருக்கோயில் என அழைக்கப்பட்டுள்ளது.
ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பாண்டிய அரசனின் பதினேழாவது ஆட்சியாண்டில் கி.பி. 617-இல் அமைக்கப்பட்டதென்று இங்கு உள்ள கல்வெட்டு குறிப்பிடுகிறது.
கல்வெட்டுகள்
- வடக்குத் தூணின் கிழக்குப் பகுதியில் குடைவரையைத் தோற்றுவித்ததைப் பற்றிய கல்வெட்டு காணப்படுகிறது.
- இக்குடைவரையின் முன்மண்டப வடசுவரில் ஸ்ரீ வல்லபனின் 18 ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டொன்று காணப்படுகிறது. இக்கல்வெட்டு, இக்குடைவரையின் இறைவனை மகாதேவர் எனக் குறிப்பிடுகிறது.
- டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்று ஆய்வு மையத்தினர் துண்டுக் கல்வெட்டுகள் சிலவற்றை இங்கு கண்டுபிடித்துள்ளனர். இவை பிற்காலப் பாண்டியர் காலத்தைச் சார்ந்தவை என்று கூறுகின்றனர்.
முக்கியத்தும்
மண்டகப்பட்டு என்ற இடத்தில் குடைவரைக்கோவில் ஒன்றை மண், மரம் செங்கல், உலோகம் போன்ற பொருட்களைத் தவிர்த்து கல்லிலேயே குடைவரைக் கோவிலாக எடுப்பித்ததாக அங்குள்ள மகேந்திரவர்மன் கல்வெட்டு மூலம் தெரிகிறது. அதே காலத்தில் பாண்டிய மண்டலத்தில் எடுக்கப்பட்டது மலையடிக்குறிச்சி குடைவரை. மேலும் தென் தமிழகத்தில் முற்கால பாண்டியர்களால் எடுக்கப்பட்ட குடைவரை கோவில்களில் பிள்ளையார்பட்டி மற்றும் மலையடிக்குறிச்சி இரண்டும் ஒரே கால கட்டம் என்று தொல்லியல் அறிஞர்கள் கருதுகின்றனர்.
உசாதுணை
- தென் மாவட்ட குடைவரைக் கோவில்கள் மு.நளினி, இரா. கலைக்கோவன்