மலைக்கள்ளன் (நாவல்)
மலைக்கள்ளன் (1943) நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை எழுதிய நாவல். கொள்ளைக்காரனை கதைத்தலைவனாக கொண்ட இரண்டாவது நாவல் (முதல் நாவல் கள்வனின் காதலி). மக்களுக்கு உதவிசெய்யும் நல்லெண்ணம் கொண்ட கொள்ளையனின் கதை இது. இது திரைப்படமாகவும் வெளிவந்தது.
எழுத்து, பிரசுரம்
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை 1931-ல் சத்யாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு ஓராண்டு திருச்சி சிறையில் இருந்தபோது இந்நாவலை எழுதியதாக இதன் முன்னுரையில் குறிப்பிடுகிறார். இந்நாவலை இரண்டு முன்னுதாரணங்களைக் கொண்டு எழுதினார். கல்கி எழுதிய கள்வனின் காதலி மற்றும் ரஷ்யக் கவிஞர் அலக்ஸாண்டர் புஷ்கின் எழுதிய துப்ரோவ்ஸ்கி என்னும் நாவல். வடலிவிளை செம்புலிங்கம் போன்ற கொள்ளையர் பற்றிய கதைப்பாடல்கள் அன்று மக்களிடம் புழக்கத்தில் இருந்தன. அவற்றின் கூறுமுறையை அடியொற்றியது இந்நாவல்.
கதைச்சுருக்கம்
1930-ளில் ஆங்கிலேய இந்தியாவில் விஜயபுரியில் வீரராஜன் என்ற ஜமீன் இளவரசன் தன் அடியாள் காத்தவராயனின் உதவியுடன் மக்களை கொடுமை செய்கிறான். வீரராஜனின் அத்தைமகள் பூங்கோதை. அவளை மணக்க வீரராஜன் விரும்புகிறான். பூங்கோதை மறுக்கிறாள். வீரராஜன் அவளை திருடர்களைக்கொண்டு கடத்திச் செல்கிறான். அந்த திருடர்களிடமிருந்து அவளை மலைக்கள்ளன் என்னும் திருடன் கடத்துகிறான். அவன் உண்மையில் பூங்கோதையின் காணாமல்போன முறைமாப்பிளையான குமாரவீரன்தான். நாவலில் அப்துல் ரகீம் என்பவர் வந்து பூங்கோதைக்கு பல உதவிகள் செய்கிறார். அவர் உண்மையில் மாறுவேடமிட்ட குமாரவீரன். இறுதியில் தீயவர்கள் வெல்லப்படுகிறார்கள். பூங்கோதை குமாரவீரனை மணக்கிறாள்.
கதைமாந்தர்
- குமார வீரன் - மலைக்கள்ளன், அப்துல் ரஹீம் ஆகிய தோற்றங்களில் வரும் கதைநாயகன்
- பூங்கோதை - குமாரவீரனின் முறைப்பெண், கதைநாயகி
- வீரராஜன் - விஜயபுரியை ஆள்பவன், கொடியவன்
திரைப்படம்
1954-ம் ஆண்டு ஸ்ரீராமுலு நாயிடு இயக்கத்தில் மலைக்கள்ளன் எம்.ஜி.ஆர் -பானுமதி நடிப்பில் திரைப்படமாக வெளிவந்தது.
இலக்கிய இடம்
இந்நாவல் தமிழில் வெளிவந்த பொழுதுபோக்குப் படைப்பு. நாட்டார் மரபில் இருக்கும் சில வீரவழிபாட்டுக்கூறுகளை ஐரோப்பியபாணி சாகசக்கதைகளுடன் இணைத்து உருவாக்கப்ப்பட்டது
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:36:45 IST