under review

மலேசியாவில் தமிழ்ப்பள்ளிகள்

From Tamil Wiki
Sjkt ko sarangapani.webp

1786--ம் ஆண்டு பிரிட்டிஷ் பினாங்கு தீவைக் கைப்பற்றிய பிறகு மலாயாவில் இந்தியத் தொழிலாளர்களின் வருகை தொடங்கியது. மலாயாவுக்குத் தமிழர்கள் குடியேறியதைத் தொடர்ந்து, தமிழ்மொழியும் மலாயாவில் மெல்ல வேர்பிடிக்க ஆரம்பித்தது. மலேசிய இந்தியர்களின் வரலாற்றிலும் வாழ்வியலிலும் தமிழ்ப்பள்ளிகள் முக்கியமான பங்கினையாற்றி வருகின்றன.

பின்னணி

Penang free school.png

பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கக் காலத்திலே தமிழ்க்கல்வியின் வரலாறு மலாயாவில் தொடங்கியது. 1816--ம் ஆண்டில் பினாங்கு மாநிலத்தில் உள்ள பினாங்கு ஃபிரி ஸ்கூல் என்ற பள்ளியில் முதன்முதலாகத் தமிழ் வகுப்பு தொடங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 1912--ம் ஆண்டில் ஸ்ட்ரெய்ட்ஸ் செட்டில்மெண்ட்சில் பிரிட்டிஷார் தொழிலாளர்ச் சட்டத்தை அறிமுகப்படுத்தியது. அச்சட்டம் அறிமுகப்படுத்திய பின் மலாயாவில் படிப்படியாகத் தமிழ்ப்பள்ளிகள் தோற்றுவிக்கப்பட்டன. பிரிட்டிஷார் தொழிலாளர் சட்டம் தொழிலாளர்களின் நலத்தைப் பாதுகாப்பதோடு ஒரு தோட்டத்தில் 7 முதல் 14 வயது வரை உள்ள பத்துப் பிள்ளைகள் இருந்தால் அத்தோட்டத்தில் ஒரு தமிழ்ப்பள்ளி இருக்க வேண்டும் என்பதனையும் வலியுறுத்தியது. ரப்பர் தோட்டங்களின் எண்ணிக்கை அதிகரிக்கையில், தமிழ்ப்பள்ளிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கின.

நாடு சுதந்திரம் அடையும் இலக்கை நோக்கிச் செல்லும் பொழுது, பிரிட்டிஷார் ஆட்சியின் கீழ் இயங்கிய தமிழ்ப்பள்ளிகளின் கல்வி முறையிலும் எண்ணிக்கையிலும் மாற்றங்கள் உண்டாகின. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு நாட்டு மக்களிடையே ஒற்றுமை அவசியம் என அறிந்த அரசு, 1957-ல் மலாயா தேச உருவாக்கத்துக்காக ஆயத்தப்பட்டுக் கொண்டிருந்த தருணத்தில், தேசியக் கல்விக் கொள்கையின் தேவையை உணர்ந்தது. 1960-ல் ரஹ்மான் கல்வி அறிக்கை அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டது. இவ்வறிக்கையில் அடங்கியிருந்த பதினேழு பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டே 1957--ம் ஆண்டு கல்விச் சட்டம் உருவானது. அதே ஆண்டில் இக்கல்விச் சட்டம் நடைமுறைக்கு வந்து தேசியக் கல்விக் கொள்கையும் உருவானது.

ரசாக் அறிக்கையின் அமலாக்கத்தை ஆய்வு செய்த, ரஹ்மான் தாலிப் அறிக்கை, 1961--ம் ஆண்டு கல்விச்சட்டமாக அங்கீகரிக்கப்பட்டது. இவ்வறிக்கையானது எல்லா வகை தொடக்கப்பள்ளிகளுக்கும் இலவசக் கல்வியை வித்திட்டது. இச்சட்டம் தமிழ்ப்பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட வேண்டுமெனவும் பரிந்துரைத்தது. இச்சட்டம் தமிழ்மொழியைப் பயிற்றுமொழியாகக் கொண்ட பள்ளிகளைத் தேசிய வகைத் தொடக்கப்பள்ளிகள் என்றும் வகைப்படுத்தியது. ஆக, பிரிட்டிசார் ஆட்சியில் பல்வேறு கலைத்திட்டங்களுக்குக் கீழ் இயங்கிய தமிழ்ப்பள்ளிகள் சுதந்திரத்திற்குப் பிறகு நாட்டின் தேவைக்கேற்ப ஒரே கல்வித் திட்டத்தின்கீழ் செயல்பட்டு வருகின்றன.

காலணிய ஆட்சிக்காலத் தமிழ்ப்பள்ளிகள்

சுதந்திரத்திற்கு முன் இருந்த தமிழ்ப்பள்ளிகளின் நிலை

1912-ல் பிரிட்டிஷார் தொழிலாளர் சட்டத்தை அறிமுகப்படுத்திய தொடக்கத்தில் மழலையர் காப்பகங்கள், நாடகஅரங்குகள், மளிகைக்கடைகள், கோயில்கள், தொழிலாளர் குடியிருப்புகள் ஆகியவற்றில் வகுப்புகள் நடைபெற்றன. கோயில் பூசாரிகள், விண்ணப்பம் எழுதுபவர்கள், எழுத்தர்கள், கங்காணிகள், கல்வியறிவுள்ள தோட்டத் தொழிலாளர்கள் போன்றோர் பகுதிநேர ஆசிரியர்களாக வேலையில் அமர்த்தப்பட்டனர். இதனால், கல்வியின் தரம் சராசரிக்கும் கீழாகவே இருந்தது.

தமிழ்த்தொழிலாளர்களைக் கொண்டு உற்பத்தியைப் பெருக்குவதும் தங்கள் கருவூலத்தை நிரப்பிக் கொள்வதுமே பிரிட்டிஷ் காலனியவாதிகளின் விருப்பமாக இருந்தது. தமிழ்ப்பள்ளிகள் தமிழாசிரியர்களை உருவாக்குவதில் முனைப்பாக இருந்தன. அவ்வாசிரியர்கள் பிரிட்டிஷாரின் கையாட்களாகவே இருந்தனர். பிரிட்டிஷ் அதிகாரத்தை எதிர்த்துக் கேள்வி கேட்காமல் இருக்கும்படி தமிழ்ப்பள்ளிகளில் மாணவர்கள் மறைமுகமாகப் பயிற்றுவிக்கப்பட்டனர்.

தோட்டக் குழந்தைகளுக்குப் பாடம் போதிக்கும் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்

சுதந்திரத்திற்குமுன் வசதிகளற்று தமிழ்ப்பள்ளிகள் இயங்கினாலும் 1920--ம் ஆண்டில் 122 தமிழ்ப்பள்ளிகள் தோற்றுவிக்கப்பட்டன. 1925--ம் ஆண்டு ஒருங்கி ணைக்கப்பட்ட மலாய் மாநிலங்களில் 8153 மாணவர்களுடன் மொத்தம் 235 தமிழ்ப்பள்ளிகள் செயல்பட்டன. 1930-ல் இந்நாட்டில் தமிழ்ப்பள்ளிகள் 12640 மாணவர்களுடன் 333ஆக அதிகரித்தன. இருப்பினும், தமிழ்ப்பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த தோட்டமுதலாளிகள் அதிகம் முனைப்பு காட்டவில்லை.

1937--ம் ஆண்டு வரை 13 அரசினர் பள்ளிகள் நகர்ப்புறங்களில் நிர்வகிக்கப்பட்டன. நகரங்களில் தனிநபர்களாலும் சமயஅமைப்புகளாலும் சில தமிழ்ப்பள்ளிகள் நிறுவப்பட்டன. சில நகரப்பள்ளிகளில் மட்டுமே இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் பயிற்சிபெற்ற ஆசிரியர்கள் இருந்தனர். நாளொன்றுக்கு இரண்டு அல்லது மூன்று மணி நேரம் மட்டுமே கற்றல் கற்பிக்கப்பட்டது. தமிழ்நாட்டிலுள்ள உறவினருக்குக் கடிதம் எழுதத் தேவையான தமிழறிவும் கணிதமும் முக்கியப் பாடங்களாகக் கற்பிக்கப்பட்டன. இப்பள்ளிகளில் பல்வேறு கலைத்திட்டங்களின் அடிப்படையிலான போதனைமுறையும் யாழ்பாணத்திலிருந்தும் தமிழகத்திலிருந்தும் தருவிக்கப்பட்ட பாடநூல்களும் பயன்படுத்தப்பட்டன.

சுதந்திரத்திற்குப்பின் உள்ள தமிழ்ப்பள்ளிகளின் நிலை

தமிழ்ப்பள்ளி 7.webp

1957--ம் ஆண்டு மலேசியா சுதந்திரம் அடைந்த பிறகு, ரசாக் கல்வி அறிக்கையும் ரஹ்மான் கல்வி அறிக்கையும் தேசியக் கல்வி முறையில் மாற்றங்களை உண்டாக்கியது. 1957-க்கு முன்னால் காலனிய ஆட்சியாளர்கள் பல்வேறு இனங்களுக்கும் தனித்தனியாகப் பள்ளிகளை அறிமுகப்படுத்தியிருந்தனர். இது ரசாக் மற்றும் ரஹ்மான் அறிக்கைகள் மூலம் மாற்றப்பட்டது. இவ்வறிக்கைகள் இரண்டு விதமான தேசியப் பள்ளிகளை அறிமுகப்படுத்தின. தேசியத் தொடக்கப் பள்ளி மற்றும் தேசிய வகை தொடக்கப்பள்ளி. இந்தப் புதியமுறை நாட்டின் ஒற்றுமையை வலுப்படுத்துமென அரசாங்கம் வலியுறுத்தியது.அதன் அடிப்படையில், தமிழ்ப்பள்ளிகள் தேசிய வகை தொடக்கப்பள்ளிகளாக செயல்படுகின்றன.ஒரே கல்வித்திட்டத்தின் கீழ் தமிழ்ப்பள்ளிகள் அனைத்தும் செயல்பட்டு வருகின்றன. சுதந்திரத்திற்கு முன்பைவிட இன்று தமிழ்ப்பள்ளிகளின் கல்வி தரமாக உள்ளது.

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு சில தமிழ்ப்பள்ளிகள் முழுமையான அரசு உதவி பெறும் பள்ளிகளாகச் செயல்படுகின்றன. சில பள்ளிகள் அரசின் பகுதி உதவியைப் பெற்று இயங்குகின்றன.இப்பள்ளிகள் அனைத்தும் இலவசக் கல்வியை மாணவர்களுக்கு வழங்குகின்றன. இப்பள்ளிகளில் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.

தமிழ்ப்பள்ளிகளின் எண்ணிக்கை

தமிழ்ப்பள்ளி 8.jpg
தமிழ்ப்பள்ளி இடமாற்றம் குறித்த எதிர்ப்பு

நாடு சுதந்திரம் அடைந்தபிறகு, தமிழ்ப்பள்ளிகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்தது. தோட்டத் துண்டாடலின் காரணமாகத் தோட்டத் தொழிலாளர்கள் பெரும் எண்ணிக்கையில் தோட்டப்புறங்களிலிருந்து வெளியேறினர். அதோடு, ரப்பரிலிருந்து செம்பனைக்கு பயிர் மாற்றம் செய்யத் தொடங்கியபோது தொழிலாளர்களின் இடப்பெயர்வு தொடங்கியது. இந்த இடப்பெயர்வோடு சேர்த்துச் சில தோட்டப்புறத் தமிழ்ப்பள்ளிகளும் மூடப்பட்டன. தோட்டப்புறத்தில் உள்ள சில சிறு பள்ளிகள் பெரிய பள்ளிகளுடன் இணைக்கப்பட்டன.

1938-லிருந்து 1998 வரை, தமிழ்ப்பள்ளிகளின் எண்ணிக்கை வேகமாகச் சரிந்தது. நாடு விடுதலை பெற்றபோது தீபகற்பத்தில் 888 தமிழ்ப்பள்ளிகள் இருந்தன. 1969-ல் 888 தமிழ்ப்பள்ளிகள் எண்ணிக்கை 662 ஆகக் குறைந்தது. முப்பது ஆண்டுகளுக்குப் பின்னர் 2000--ம் ஆண்டில் 526 தமிழ்ப்பள்ளிகளே இருந்தன. 1957-ல் 50,766 மாணவர்கள் தமிழ்ப்பள்ளிகளில் கல்வி பயின்றனர். 1970-ல் இந்த எண்ணிக்கை 70,000ஆக இருந்தது. 2023-ம் ஆண்டில் மலேசியாவில் 528 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன.

தமிழ்ப்பள்ளிகளில் நிலவும் சிக்கல்கள்

தமிழ்ப்பள்ளிகளின் சிக்கல்களில் ஒன்று நிலப்பிரச்சனை.அரசின் பகுதி உதவியைப் பெறும் பெரும்பான்மையான தமிழ்ப்பள்ளிகள் அமைந்துள்ள இடங்கள் தோட்ட நிறுவனங்களுக்குச் சொந்தமானவை. நகர்ப்புறங்களில் கிறிஸ்துவ தேவாலயங்கள், இந்துக்கோயில்கள் மற்றும் தனிநபர்களுடைய இடங்களில் தமிழ்ப்பள்ளிகள் அமைந்துள்ளன. தமிழ்ப்பள்ளிகளின் பெயரில் நிலங்கள் இல்லை. நிலஉரிமையாளர்களும் தமிழ்ப்பள்ளிகளும் தனியாகத் தமிழ்ப்பள்ளிகளுக்கென நிலத்தை மாற்றுவதில் சிக்கல்கள் நிலவுகின்றன. பள்ளிகளைத் தோட்ட நிர்வாகங்கள் தங்கள் நிலங்களில் கட்டியுள்ளன.

புதிதாக வரும் வீட்டு வசதித்திட்டங்கள், நகர வளர்ச்சித் திட்டங்கள் ஆகியவற்றால் நிலம் விலைக்குக் கிடைப்பதில்லை. இக்கட்டுப்பாட்டை நன்கு பயன்படுத்திக் கொண்டு தோட்ட உரிமையாளர்கள் தனது தோட்டங்களை நல்ல விலைக்கு விற்று விடுகின்றனர். பெரிய தோட்ட நிலப்பரப்பில் ஒரு சிறு துண்டாக அமைந்துள்ள பள்ளிகளும் இதனால் பாதிப்டைகின்றன.

தமிழ்ப்பள்ளி 5.jpg

தோட்டப்புறங்களில் இருந்த சிறு பள்ளிகள் பெரிய பள்ளிகளுடன் இணைக்கப்படும் போது இந்தியச் சமூகம் பள்ளி நடத்தும் உரிமத்தை இழந்தது. இணைப்பின் காரணமாகவோ அல்லது வேறு ஏதாவது காரணத்தாலோ ஒரு தமிழ்ப்பள்ளி மூடப்படுமாயின் அப்பள்ளியின் உரிமத்தைப் பயன்படுத்தி வேறொரு இடத்தில் பள்ளி கட்டக்கூடிய ஆற்றல் சமூகத்திடம் இல்லை. எனவே, உரிமம் ரத்து செய்யப்படுகிறது. இதனால், நாட்டிலுள்ள தமிழ்ப்பள்ளிகளின் எண்ணிக்கை மேலும் குறைகிறது.

மேலும், அரசின் பகுதி உதவி பெறும் சில தமிழ்ப்பள்ளிகளின் கட்டமைப்பு மோசமான நிலையில் உள்ளது. நவீன காலத்திற்கேற்ப வசதிகள் சில தமிழ்ப்பள்ளிகளில் குறைவாகவே காணப்படுகின்றன.

மாநிலங்களின் அடிப்படையில் தமிழ்ப்பள்ளிகளின் எண்ணிக்கை

  • பேராக் - 134 தமிழ்ப்பள்ளிகள்
  • சிலாங்கூர் - 99 தமிழ்ப்பள்ளிகள்
  • பகாங் - 37 தமிழ்ப்பள்ளிகள்
  • கிளாந்தான் - 1 தமிழ்ப்பள்ளி
  • ஜொகூர் - 71 தமிழ்ப்பள்ளிகள்
  • கெடா - 60 தமிழ்ப்பள்ளிகள்
  • மலாக்கா - 21 தமிழ்ப்பள்ளிகள்
  • நெகிரி செம்பிலான் - 61 தமிழ்ப்பள்ளிகள்
  • பினாங்கு - 28 தமிழ்ப்பள்ளிகள்
  • கோலாலம்பூர்- 15 தமிழ்ப்பள்ளிகள்

உசாத்துணை


✅Finalised Page