under review

மறனுடைப் பாசி

From Tamil Wiki

மறனுடைப் பாசி நொச்சித்திணையின் துறைகளில் ஒன்று. பகை மன்னன் ஒருவன், தனது மதிலை உழிஞை சூடி முற்றுகையிடும்போது, மதிலுக்குரிய அரசனின் வீரர்கள் மதிலைக் காக்கும் முயற்சி மறனுடைப் பாசி எனப்படுகிறது.

விளக்கம்

பாசி என்னும் நீர்த்தாவரம், நீக்கும்போது, நீங்கும், அதை நீக்க முயலாதபோது படர்ந்துவளரும். அதுபோல மறவர்கள் ஒதுங்கியும் மீதூர்ந்தும் போரிடும் தன்மையைப் பாடுவதால் இது மறனுடைப் பாசி எனப்பட்டது.

நீர்ப்பாசியைப் போன்று நீங்காமல் மதில் புறத்தே படர்ந்திருந்த உழிஞையாரைக் கலக்கிய நொச்சி மறவர்களின் மற மாண்பு சொல்லப்படுதலின் மறனுடைப் பாசி எனப் பெயர் பெற்றதாகவும் கூறுவது உண்டு.

புறப்பொருள் வெண்பாமாலை

புறப்பொருள் வெண்பாமாலையின் கொளு நொச்சிப்பூச்சூடியவர்கள் மதிலை வளைத்த உழிஞை சூடிய பகைவருடன் போரிட்டு, புறங்கொடாது, போர்க்களத்தில் இறந்ததன் காரணமாக வீரசுவர்க்கத்துக்குச் செல்வதை உரைப்பது மறனுடைப் பாசி என்னும் துறை என்று இலக்கணம் வகுக்கிறது.

மறப்படை மறவேந்தர்
துறக்கத்துச் செலவுஉரைத்தன்று.

எடுத்துக்காட்டு வெண்பா

பாயினார் மாயும் வகையால் பல காப்பும்
ஏயினார் ஏய இகல் மறவர் - ஆயினார்
ஒன்றியவர் அற ஊர்ப் புலத்துத் தார் தாங்கி
வென்றி அமரர் விருந்து (87)

அரணைச் சூழ்ந்து ஏறும் உழிஞையாரை நொச்சி மறவர்கள் வெட்டினர்; அவரது படையைத் தடுத்தனர். பிறகு வீர மரணம் எய்தினர் என்று கூறுகிறது.

உழிஞை மறவர் நீர்ப்பாசியைப்போல, நொச்சியாரது ஊர்ப்புறத்தில் சூழ்ந்து இருந்ததும், அவர்கள் அழியும்படி நொச்சி மறவர்கள் பரவி, உழிஞையாரின் படையை விலக்கியதும் சேர்ந்து வருதலால் துறைப்பொருள் பொருந்தி வருகிரது.

உசாத்துணை

நொச்சித் திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 21-Jan-2025, 19:28:15 IST