under review

மயில் விருத்தம்

From Tamil Wiki

மயில் விருத்தம் (பதினைந்தாம் நூற்றாண்டு) அருணகிரிநாதரால் பாடப்பட்ட சிற்றிலக்கிய நூல். முருகப்பெருமானின் மயில் இந்நூலில் சிறப்பிக்கப்பட்டுள்ளது.

நூல் அமைப்பு

தெய்வங்களைத் தோத்திரம் செய்வது போலத் தெய்வங்களின் ஆயுதங்கள், வாகனங்கள், கொடிகள் போன்றவற்றையும் போற்றித் துதித்தல் மரபு. திருமாலின் ஐவகைப் படைக் கருவிகளையும் துதித்துப் பாடப்பட்ட நூல், ’பஞ்சாயுத ஸ்தோத்ரம்’. திருமாலின் வாகனமும் கொடியுமான கருடன் மீது பாடப்பட்ட நூல் கருட ஸ்தோத்ரம். இவ்வகையில் முருகனின் வாகனமான மயில் மீது அருணகிரிநாதரால் பாடப்பட்ட துதிப் பாடல் மயில் விருத்தம்.

உள்ளடக்கம்

மயில் விருத்தம் நூலில், ”சந்தன பாளித குங்கும புளகித சண்பக..” எனத் தொடங்கும் காப்புச் செய்யுள் இடம்பெற்றது. தொடர்ந்து மயில் மீதான விருத்தத்தில் ‘சந்தான புஷ்பபரி' என்று தொடங்கி, ‘நிராசத விராசத’ என்ற பாடல் வரை பத்துப் பாடல்கள் இடம்பெற்றன. நூலின் இறுதியில் நூலைப் பாராயணம் செய்வதால் கிடைக்கும் பலன் தனியாக விளக்கப்பட்டுள்ளது. இந்நூலில் மொத்தம் பன்னிரண்டு பாடல்கள் உள்ளன. எல்லாப் பாடல்களிலும் திருத்தணி என்னும் ஆறுபடைவீட்டின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

மயிலின் பெருமை

மயில் முருகனின் வாகனங்களில் ஒன்று. மயில் தோகைவிரித்தாடும்போது உள்ள தோற்றம் ‘ஓம்' என்னும் பிரணவத்தின் வடிவாக அறியப்படுகிறது. மயில் யோக, தியான மார்க்கத்தில், உயிர்கள் ஞானமாகிய அறிவை அறிந்து தங்களை உணர்ந்து கொள்ள உதவும் திருவருளின் வடிவமாகக் குறிப்பிடப்படுகிறது.

பாடல் நடை

மயிலின் பெருமை

சந்தான புஷ்பபரி மளகிண் கிணீமுகச்
சரணயுக ளமிர்தப்ரபா
சந்த்ரசே கரமூஷி காரூட வெகுமோக
சத்யப்ரி யாலிங்கனச்

சிந்தா மணிக்கலச கரகட கபோலத்ரி
யம்பக விநாயகன்முதற்
சிவனைவலம் வருமளவி லுலகடைய நொடியில்வரு
சித்ரக் கலாப மயிலாம்

மந்தா கிநிப்பிரப வதரங்க விதரங்க
வனசரோ தயகிர்த்திகா
வரபுத்ர ராஜீவ பரியங்க தந்திய
வராசலன் குலிசாயுதத்

திந்த்ராணி மங்கல்ய தந்துரட் சாபரண
இகல்வேல் விநோத னருள்கூ
ரிமையகிரி குமரிமக னேறுநீ லக்ரீவ
ரத்நக் கலாப மயிலே.

நூற்பயன்

எந்நாளு மொருசுனையி லிந்த்ரநீ லப்போ
திலங்கிய திருத்தணிகைவாழ்
எம்பிரா னிமையவர்கள் தம்பிரா னேறுமொரு
நம்பிரா னான மயிலைப்

பன்னாளு மடிபரவு மருணகிரி நாதன்
பகர்ந்தவதி மதுர சித்ரப்
பாடல்தரு மாசறு விருத்தமொரு பத்தும்
படிப்பவர்க ளாதி மறைநூல்

மன்னான் முகம்பெறுவ ரன்னமே றப்பெறுவர்
வாணிதழு வப்பெறுவரால்
மகரால யம்பெறுவ ருவணமே றப்பெறுவர்
வாரிச மங்கையுடன் வாழ்

அந்நாய கம்பெறுவ ரயிராவ தம்பெறுவ
ரமுதா சனம்பெறுவர்மே
லாயிரம் பிறைதொழுவர் சீர்பெறுவர் பேர்பெறுவர்
அழியா வரம்பெறுவரே.

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 07-Jul-2024, 22:04:38 IST