under review

மயானக் கொள்ளை

From Tamil Wiki
Mayana-kollai-in-tamil.jpg

மயானக் கொள்ளை சிவராத்திரியை அடுத்த மாசி அமாவாசை அன்று நிகழும் திருவிழா. இவ்விழா தமிழகத்திலுள்ள உள்ள அங்காள பரமேஸ்வரி ஆலயங்களில் நிகழ்த்தப்படுகிறது. அங்காள பரமேஸ்வரி மீனவ சமுதாயத்தின் குலதெய்வமென்பதால் இவ்விழா மீனவ சமூகத்தால் கொண்டாடப்படுகிறது.

புராணக் கதை

Mayanakollai.jpg

முன்பு பிரம்மலோகத்தில் ஐந்து தலையுடன் பிரம்மனைக் கண்ட பார்வதி தேவி, பிரம்மனை சிவனென்று கருதி வணங்கி, பிரம்மனின் ஏளனத்துக்கு ஆளானாள். பிரம்மனின் ஏளனம் கண்டு கோபம் கொண்ட பார்வதி கைலாயம் சென்று சிவனிடம் முறையிட்டாள். கோபம் கொண்ட சிவன் தன் மழுவாயுதத்தால் பிரம்மனின் ஐந்தாவது தலையைக் கொய்தார். பிரம்மனின் தலையை சிவன் கொய்ததால் சிவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது. துண்டிக்கப்பட்ட பிரம்மனின் தலை சிவனின் கையோடு ஒட்டிக் கொண்டது. கையில் ஒட்டிய பிரம்மனின் கபாலத்தோடு(மண்டை ஓடு) சிவன் பூலோகத்தில் பிச்சை எடுக்கத் தொடங்கினார். அந்தக் கபாலம் நிறையும்போது அது சிவன் கையிலிருந்து நீங்கும், சிவனின் பிரம்மஹத்தி தோஷமும் நீங்கும் என்பது சாப விமோசனத்தின் விதி. எவ்வளவு அன்னம் இட்டாலும் உலகிற்கே அன்னமளந்த சிவனின் பிட்சைப் பாத்திரம் நிறையாமல் எப்போதும் குறைவுற்றிருந்தது. அதில் போடப்படும் உணவையெல்லாம் கபாலமே விழுங்கியது. பிரம்மனின் தலை கொய்யப்பட்டதைக் கண்ட சரஸ்வதி தேவி வருந்தி, சிவனின் இந்நிலைக்கும் பார்வதி தான் காரணம் என அவள் மேல் கோபம் கொண்டாள். கைலாயம் சென்ற சரஸ்வதி பார்வதியிடம், "பிரம்மனின் தலை கொய்யக் காரணமான நீ கொடிய உருவத்துடன் பூலோகத்தில் இருக்க இடமின்றி அலைவாய். பூமியில் இடம் கிடைக்காததால் புற்றே வீடாகக் கொண்டு வாழ்வாய்." எனச் சாபமிட்டாள்.

மயானக் கொள்ளை.jpg

சரஸ்வதியின் சாபத்தின்படி பூலோகம் முழுதும் அலைந்து திரிந்த பார்வதி இறுதியில் மலையனூர் வந்து தவமிருக்க விரும்பினாள். மலையனூர் மலையரசனுக்குக் காவலாக இருந்த காவலாளி அதனைத் தடுத்தான். பார்வதியை அங்கிருந்து போகும் படி வேண்டினான். காவலாளி சொல் கேளாத பார்வதி அங்கே புற்றாக மாறி தவமிருக்கத் தொடங்கினாள். காவலாளி புற்றைக் கலைக்க முயற்சித்த போது அவனது ஆற்றலை இழந்தான். அப்போது வந்திருப்பது அம்மனே என எல்லோரும் உணர்ந்தனர். பார்வதி தேவி அங்கேயே அங்காள பரமேஸ்வரியாக வீற்றிருந்தாள். மீனவக் குடிகள் பார்வதியைத் தெய்வமாக ஏற்றுஅவளுக்குச் சேவை செய்தனர். பூலோகம் முழுவதும் சுற்றி வந்த சிவன் இறுதியில் அங்காள பரமேஸ்வரியிடம் வந்து பிச்சை வேண்டினார். பரமேஸ்வரி சுவையான உணவை சிவனின் கையிலுள்ள கபாலத்தில் இட்டாள். உணவைக் கபாலம் உண்டது. லட்சுமியின் சொல்படி பரமேஸ்வரி மூன்றாவது கவளத்தைக் கை தவறுதலாக கீழே போட்டாள். உணவின் சுவைகண்ட கபாலம் சிவனின் கையிலிருந்து கீழே விரைந்து சென்றது. சிவனின் கையைவிட்டு விலகிய கபாலத்தை மீண்டு வர முடியாதபடி தன் காலால் பூமியினுள் புதைத்தாள் அங்காள பரமேஸ்வரி. பிரம்மஹத்தி நீங்கிய சிவன் மகிழ்வுடன் கைலாசம் சென்றார். பரமேஸ்வரி பிரம்மனின் கபாலத்தை பூமியினுள் புதைத்த இந்த நாள் மயானக் கொள்ளை நாளாகக் கொண்டாடப்படுகிறது.

விழா நடைபெறும் முறை

அங்காள பரமேஸ்வரி கோவிலில் சித்திரை மாதம் நடைபெறும் திருவிழாவில் சக்தி கிரகம் மேல் மலையனூரைச் சுற்றி வரும். அங்காள பரமேஸ்வரி சக்தி கிரகம் எடுக்க குறித்த நாளிற்கு ஒரு வாரம் முன்பு பருவதராஜ குலத்து மீனவர் இனத்தில் பிறந்த பூசாரியைத் தேர்ந்தெடுத்து அவர் மீது அங்காள பரமேஸ்வரியின் அருளை வரவழைப்பார்கள். அந்த ஒரு வாரம் பூசாரி தீவிர விரதமிருப்பார்.

மேல்மலையனூரில் உள்ள அக்னி குளக்கரையில் சக்தி கிரகம் இரவு நடைபெறும். பூசாரி தன் தலையின் மேல் சக்தி கிரகத்தை வைத்துக் கொண்டு இரவு முழுவதும் ஊரை சுற்றி அருள்கொண்டு ஆடி வருவார். பின் மயானத்திற்கு சென்று அங்கே அங்காள பரமேஸ்வரிக்கு சுண்டல், தான்யம் கொண்டு நைவேத்யம் செய்வார். அவற்றை அம்மனின் மேல் வாரி இறைப்பார். ஊர் மக்கள் பூசாரியை சக்தியின் வடிவாகப் பாவிப்பார்கள். சிவனின் பித்தை தணித்த அங்காள பரமேஸ்வரி பிரம்மனின் கபாலத்தை பூமியுள் புதைத்த சடங்கை பூசாரியைக் கொண்டு 'மயானக் கொள்ளை' திருவிழாவாக நடத்துவர்.

உசாத்துணை


✅Finalised Page