மனஹரன்
மனஹரன் (பிறப்பு : ஜூலை 7, 1961) மலேசியத் தமிழ் எழுத்தாளர். புதுக்கவிதை, சிறுகதை, கட்டுரை போன்றவற்றை எழுதியுள்ளார்.
பிறப்பு, கல்வி
மனஹரன் ஜூலை 7, 1961 அன்று பேராக்கில் பைடி-சீதம்மாள் இணையருக்கு நான்காவது குழந்தையாகப் பிறந்தார். இவருக்கு 2 அண்ணன்களும் 1 அக்காவும் உள்ளனர்.
மனஹரன் 1968-ம் ஆண்டு தமது ஆரம்பக் கல்வியைப் பேராக்கில் உள்ள ஆயர் தாவார் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் பெற்றார். 1973--ம் ஆண்டு புகுமுக வகுப்பு முதல் படிவம் 5 வரை எஸ்.எம்.ஜெ.கெ. ஆயர் தாவார் இடைநிலைபள்ளியில் பெற்றார். பின்னர் ஆறாம் படிவத்தை எம்.எச்.எஸ். சித்தியவானில் முடித்தார். எம்.எச்.எஸ். சித்தியாவானில் ஆறாம் படிவம் பயிலும் பொழுது, மனஹரன் அப்பள்ளியில் தமிழ்மொழிக்கழக தலைவராகச் செயலாற்றினார். 1986--ம் ஆண்டு தொடங்கி 1988--ம் ஆண்டு வரை லெம்பா பந்தாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் தமிழ்மொழித் துறையில் கல்வி பெற்றார்.
தனிவாழ்க்கை
மனஹரன் டிசம்பர் 3, 1989 அன்று துளசி என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். மனஹரன் - துளசி இணையருக்கு இளங்கபிலன், இமைச்சாரனி என இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
மனஹரன் 1984--ம் ஆண்டு முதல் 1986--ம் ஆண்டு வரை தற்காலிக ஆசிரியராகப் பணியாற்றினார். 1984--ம் ஆண்டு ஆர்கிராப் தோட்டத்தமிழ்ப்பள்ளியிலும் 1985--ம் ஆண்டு ஆயர் தாவார் தோட்டத்தமிழ்ப்பள்ளியிலும் 1986--ம் ஆண்டு எம்புரோஸ் இடைநிலைப்பள்ளியிலும் தற்காலிக ஆசிரியராக இருந்தார். பின்னர் 1986--ம் ஆண்டு ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் கல்வியைப் பெற்ற பின் ஜனவர் 1, 1989-ல் சப்போரா தோட்டத்தமிழ்ப்பள்ளியில் தமது ஆசிரியர் பணியைத் தொடங்கினார்.
ஆசிரியர் பணி
மனஹரன் ஆசிரியராக மொத்தம் எட்டு பள்ளிகளில் பணியாற்றியுள்ளார்.
மனஹரன் பணியாற்றிய பள்ளிகளின் பட்டியல்
- ஜனவரி 1, 1989 - நவம்பர் 30, 1994 சப்போரா தோட்டத்தமிழ்ப்பள்ளி
- டிசம்பர் 1, 1994 - டிசம்பர் 31, 2005 பெருவாஸ் தமிழ்ப்பள்ளி
- ஜனவரி 1, 2006 - ஆகஸ்ட்டு 31, 2006 ஆயர் தாவார் தோட்டத்தமிழ்ப்பள்ளி
- செப்டம்பர் 1, 2006 - டிசம்பர் 31, 2006 பெங்களான் பாரு தமிழ்ப்பள்ளி
- ஜனவரி 1, 2007 - மார்ச் 15, 2009 ஆயர் தாவார் தமிழ்ப்பள்ளி
- மார்ச் 16, 2009 - அக்டோபர் 15, 2009 - பெருவாஸ் தமிழ்ப்பள்ளி
- அக்டோபர் 16, 2009 - டிசம்பர் 27, 2015 - சுங்கை தீமா தோட்டத்தமிழ்ப்பள்ளி (தலைமை ஆசிரியர்)
- டிசம்பர் 28, 2015 - ஜூலை 12, 2021 - பூலோ ஆக்கார் தோட்டத்தமிழ்ப்பள்ளி (தலைமை ஆசிரியர்
எழுத்துத்துறை
கவிஞர்
மனஹரன், ஆதி. இராஜகுமாரன் அறிமுகத்தால் புதுக்கவிதை எழுதினார். இவரது முதல் புதுக்கவிதை 1981-ல் ‘தவறினால் தப்பு’ எனும் தலைப்பில் 'தமிழ் ஓசை' நாளிதழில் வெளிவந்தது. தொடர்ந்து, கோ. முனியாண்டியின் நட்பினால் மனஹரன் கவிதை துறையில் ஆர்வத்துடன் ஈடுபட்டார். 1984--ம் ஆண்டு முதல் 1990--ம் ஆண்டு வரை மனஹரன் பல கவிதைகளை எழுதினார்.
இலக்கியச் செயல்பாடு
கோ. முனியாண்டி தலைமையில் இயங்கிய நவீன இலக்கிய சிந்தனை அமைப்பில் இணைந்து பணியாற்றினார். இந்த அமைப்பின் வழி எழுத்தாளர்களுடன் சிறப்பு நிகழ்ச்சி, புதுக்கவிதை கருத்தரங்கு, சிறுகதை கருத்தரங்கு போன்ற நிகழ்ச்சிகளை முன்னெடுத்தார். அதில் குறிப்பிடத்தக்க ஒன்று 2009-ல் தைப்பிங் நகரில் நடந்த ‘மலையருவி கவியரங்கம்’.
போட்டிகள்
1985-ல் கோலாலம்பூர் இலக்கிய சிந்தனை நடத்திய சிறுகதைப்போட்டிக்கு வந்த கதைகளில் ஐந்து சிறுகதைகளுக்குத் தலா 200 ரிங்கிட் பரிசு அறிவித்தனர். அந்த ஐந்து கதைகளில் மனஹரனின் ‘நிலவும் நட்சத்திர வேலியும்’ என்ற சிறுகதையும் அடங்கும். மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம் நடத்திய பத்து பாகாட் பவுன் பரிசு சிறுகதைகளில் மனஹரன் எழுதிய ‘இன்னொரு பழைய பாடல்’ எனும் சிறுகதைக்குப் பவுன் பரிசு அளிக்கப்பட்டது.
இலக்கிய இடம்
மலேசியாவில் இரண்டாம் தலைமுறை எழுத்தாளர்களான மனஹரன் போன்றவர்களின் படையெடுப்பு புதுக்கவிதைக்கான அழுத்தமான அங்கீகாரத்தைப் பதிவு செய்கிறார்கள் எனக் கோ. புண்ணியவான் குறிப்பிட்டுள்ளார்.
விருது
- நற்சேவை விருது (பேராக்) - 1998, 2008, 2016
- நல்லாசிரியர் விருது (பேராக் தெங்ஙா) - 2019
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
09-Jan-2023, 11:55:46 IST