under review

மதுரை வீரன் அம்மானை

From Tamil Wiki
மதுரை வீரன் அம்மானை

மதுரை வீரன் அம்மானை (1999) கதைப் பாடல் நூல்களுள் ஒன்று. மதுரை வீரனின் வாழ்க்கை வரலாற்றைக் கூறுவது. இந்நூலை இயற்றியவர் பற்றி அறிய இயலவில்லை. இந்த நூலை சரஸ்வதி மகால் நூலகம் வெளியிட்டது. இதன் பதிப்பாசிரியர், ம. சீராளன்.

பிரசுரம், வெளியீடு

ஓலைச்சுவடி வடிவில் இருந்த மதுரை வீரன் அம்மானை இலக்கியப் படைப்பை, சரஸ்வதி மகால் நூலகம், 1999-ல் பதிப்பித்து நூலாக வெளியிட்டது. இதன் பதிப்பாசிரியர், ம. சீராளன்.

நூலின் கதை

நாட்டுப்புற தெய்வங்களுள் ஒன்று மதுரை வீரன். மதுரை வீரன் காசி ராஜாவின் மகனாகப் பிறந்தான். அவன் கழுத்தில் மாலை சுற்றிப் பிறந்ததால், அவன் இருப்பது நாட்டுக்கு ஆகாது என நிமித்திகர்கள் கூறினர். அதனால் காசிராஜன் அவனைக் கானகத்தில் கொண்டுபோய் விட்டு விட்டான். தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த சக்கிலியன் ஒருவன் மதுரை வீரனைக் கண்டெடுத்து வளர்த்தான். மதுரை வீரன் சித்திகள் பல பெற்றான். சிறந்த வீரனாகத் திகழ்ந்தான். பொம்மன நாயக்கனின் மகள் பொம்மியை மணம் செய்துகொண்டான். திருச்சிராப்பள்ளியில் அரசு செலுத்திய விஜயரங்க சொக்கலிங்கரிடம் சேவகப் பதவியில் அமர்ந்தான்.

இந்நிலையில், மன்னர் திருமலை நாயக்கர், மதுரையில் கள்வர் பயம் அதிகமாயிருந்ததால் விஜயரங்க சொக்கலிங்கர் வந்து அவர்களை அடக்க வேண்டுமெனக் கேட்டு கடிதம் எழுதினார். விஜயரங்க சொக்கலிங்கர், மதுரைக்குச் சென்று அக்கொடிய கள்வர்களையடக்கி வருமாறு மதுரை வீரனுக்கு ஆணையிட்டார். அவனும் அவ்வாறே மதுரை சென்று, கள்வர்களை ஒழித்துக் கள்வர் பயம் நீக்கினான். தொடர்ந்து திருமலை நாயக்கர் அரண்மனையிலேயே பணியாற்றினான்.

நாளடைவில், விதிவசத்தால், திருமலை நாயக்கருக்கு உறவான வெள்ளையம்மாள் என்பவளை மணந்தான். அவளை அழைத்துச் செல்லும்போது காவலர்களால் மாறு கால், மாறு கை வாங்கப்பட்டான். இறுதியில் திருமலை நாயக்கர் மீனாட்சி அம்மனை வேண்ட, மதுரை வீரன், அன்னையின் அருளால் முன் போலவே கை, கால்கள் வரப்பெற்றான். இறுதியில் பொம்மியம்மாள் மற்றும் வெள்ளையம்மாளுடன் தீக்குழியில் இறங்கித் தன் உயிரைப் போக்கிக் கொண்டான். மக்கள் வணங்கும் தெய்வமானான்.

- இதுவே மதுரை வீரன் அம்மானையின் கதை.

நூல் அமைப்பு

மதுரை வீரன் அம்மானை, 2260 அடிகள் கொண்டுள்ளது. வெண்பா, விருத்தம், கலித்துறை, கொச்சகக் கலிப்பா போன்ற பாவகைகளை இந்நூல் கொண்டுள்ளது. கொச்சை மொழிகள், உவமைகள், உலக வழக்குச் சொற்கள், ஒரு குறிப்பிட்ட சொல்லையே மீண்டும் மீண்டும் சொல்லுதல் போன்ற நாட்டுப் பாடல் மரபுகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. இந்நூலின் செய்திகள் 'மதுரை வீரன் சிந்து', 'மதுரை வீர சுவாமி கதை', 'மதுரை வீரன் கெடிகாரம்', 'மதுரை வீரன் நாடகம்', 'மதுரை வீரன் கதைப் பாடல்', 'மதுரை வீர சுவாமி பராக்கிரமம்', 'மதுரை வீரன் பூசாரி பாட்'டு போன்ற நூல்களிலும் இடம் பெற்றுள்ளன. மீனாட்சியம்மன் சந்நிதியில் கம்பத்தடியில் பூசைகொண்டிருக்கும் மதுரை வீரனை, மாவீரனாக மக்கள் இன்றும் வழிபடுகின்றனர்.

பாடல்கள்

மதுரை வீரன் பிறப்பு

ஆயிரங்கோடி அழகுள்ள சூரியன் போல்
பாலகனும் தான்பிறந்தான் பார்மீதி லிப்போது
மதுரா புரித்துரையும் வந்துபிறந்தான் காண்
வந்து பிறந்தவனும் மலரிட்டுத் தான்பிறந்தான்
கொடி சுற்றித் தானும் குடிகெடவே தான்பிறந்தான்
சத்திராதி முண்டன் தனஞ்சியனும் தான்பிறந்தான்
பெண்கள் மயங்கவந்த புண்ணியனு மேபிறந்தான்
தேசத்தா ரெல்லோரும் தென்மதுரை யென்றுசொல்லிக்
கொண்டாடிப் பூசைகொள்ளப் பிறந்தான் குழந்தையுமே

மதுரை வீரன் கள்வர்களை அடக்க மதுரை செல்லுதல்

பட்டுக் குடைகள் பக்கமே சூழ்ந்துவர
பஞ்சவர்ண டால்விருது பாவாடை வீசிவர
புண்ணியனார் வீரையர்க்கு பூச்சக்கரக் குடைநிழற்ற
வெண்சா மரைவீச வேதியர்கள் பாடிவர
இருபுறமுங் கவரி இதமுடனே வீசிவரக்
கட்டியங்கள் கூறக் கவிவாணர் பாடிவரப்
பட்டுடனே ராசாக்கள் பரிவுடனே கூறிவர
நடந்தான்காண் தென்மதுரை நாட்டமுடன் வீரையனும்
பூமி யதிரப் பூலோகம் தத்தளிக்கச்
சேனை வருகிறது செந்தூள் பறக்குதய்யா


மதுரை வீரன் கை, கால் வெட்டப்படுதல்

நல்லதென்று சொல்லி நாயக்க ரதுகேட்டு
இன்னேர மேசென்று ஏற்றதொரு கள்ளனைத்தான்
மாறுகால் மாறுகை வாங்குமென்று தானுரைத்தார்
உத்தாரம் பண்ணியுடனே அனுப்பிவைத்தார்
நல்லதென்று சொல்லி நலியாம லோடிவந்து
தூது வனும்போய்ச் சொல்ல லுற்றாரப்போது
இந்நேரமே சென்று ஏற்றதொரு கள்ளனைத்தான்
கால்கை வாங்கக் கட்டளையு மிட்டார்காண்
என்றுசொல்லித் தானும் இதமுடனே தானுரைத்தார்
அந்தச் சணமேதான் ஆணிமுத்து வீரையனை
எண்ணற்ற சேவுகரும் இதமுடனே கீர்த்திபண்ணி
மாறுகால் மாறுகை வாங்கிவிட்டார் வீரையனை

மதுரை வீரன் மரணம்

கம்பத் தடியில் காத்திருந்து பூசைகொள்ளும்
என்றுசொல்லி மீனாட்சி ஏற்க வரங்கொடுத்தாள்
நல்லதென்று சொல்லி நாட்டமுட னோடிவந்து
கம்பத் தடியில்வந்து காளைமுத்து வீரையனும்
கன்னறுக்குஞ் சூரி கையிலே தானெடுத்துப்
பார்வதியாள் தேவி பக்கமே போயிருந்து
ஒருகாலை மண்டியிட்டு உட்கார்ந்து வீரையனும்
கைச்சூரி கொண்டு கழுத்தறுத்தான் வீரையனும்
வீரனுட தன்சிரசு மீனாட்சி தன்காலில்
பாதமே கெதியென்று பக்கமே வீழ்ந்ததுவே

மதிப்பீடு

மதுரை வீரன் கதை, தமிழ்க் கதைப் பாடல்களில் சமூகக் கதைப் பாடல் என்னும் பிரிவைச் சார்ந்தது. மக்களிடையே வீரராக வாழ்ந்து மறைந்தவர்களை நினைவுகூரும் வகையில் இந்நூல் இயற்றப்பட்டுள்ளது. நல்லதங்காள் கதை, காத்தவராயன் கதை, முத்துப்பட்டன் கதை, பொன்னர்-சங்கர் கதை போன்ற கதைப் பாடல்களின் வரிசையில் மதுரை வீரன் கதை இடம் பெறுகிறது.

உசாத்துணை


✅Finalised Page