under review

மதிஒளி சரஸ்வதி

From Tamil Wiki
மதிஒளி சரஸ்வதி

மதிஒளி சரஸ்வதி (சரஸ்வதி) (அக்டோபர் 9, 1940 – மே 09, 2018) கவிஞர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், ஆன்மிகவாதி, ஓவியர். சிறார்களுக்காகப் பல நூல்களை எழுதினார். பொது வாசிப்புக்குரிய நூல்களையும், ஆன்மிகம் சார்ந்த நூல்களையும் எழுதினார். ‘நந்தலாலா சேவா சமிதி ட்ரஸ்ட்’ உருவாக்கிப், பல நற்பணிகளை முன்னெடுத்தார். ‘மழலைக் கவிமாமணி’ உள்பட பல பட்டங்களைப் பெற்றார்.

பிறப்பு, கல்வி

சரஸ்வதி என்னும் இயற்பெயர் கொண்ட மதிஒளி சரஸ்வதி, பாண்டிச்சேரியில், அக்டோபர் 9, 1940 அன்று, டி.எஸ்.இராமச்சந்திரன் - ஜெயலட்சுமி அம்மாள் இணையருக்குப் பிறந்தார். சரஸ்வதி பூஜை அன்று பிறந்ததனால் சரஸ்வதி என்று பெயரிடப்பட்டார். சென்னையில் பள்ளிக் கல்வி பயின்றார். உடல் நலக் குறைவால் பள்ளிப் படிப்பு தடைப்பட்டதால் வீட்டில் இருந்தே பயின்றார். இந்தி மொழி பயின்று பிரவீண் வரை தேர்ச்சி பெற்றார்.

மதுரைக் காமராசர் பல்கலையில், தாய் சேய் நலக் கல்வி குறித்துப் பயின்று பட்டம் பெற்றார். தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளைப் பேச, எழுதக் கற்றார். கோவை சின்னராசுவிடம் தஞ்சாவூர்ப் பாணி ஓவியங்களைக் கற்றார். பெங்களூருவில் உள்ள சித்ரகலா பரிஷத்தில் மைசூர் பாணி ஓவிய நுணுக்கங்களைப் பயின்றார். காளியாக்குடி வைத்தியநாத பாகவதரிடம் கர்நாடக இசை கற்றார். ஹோமியோபதி மற்றும் சித்த மருத்துவம் பயின்றார்.

மதிஒளி சரஸ்வதி

தனி வாழ்க்கை

மதிஒளி சரஸ்வதி திருமணம் செய்து கொள்ளவில்லை.

இலக்கிய வாழ்க்கை

அழ. வள்ளியப்பாவின் தூண்டுதலால் மதிஒளி சரஸ்வதி குழந்தைகளுக்கான கதைகளை, பாடல்களை எழுதத் தொடங்கினார். வானொலி அண்ணா ர. அய்யாச்சாமி, சென்னை வானொலியில், மதிஒளி சரஸ்வதியின் சிறார்களுக்கான நிகழ்ச்சிகள் பலவற்றை நடத்தினார். பல்வேறு கவியரங்களுகளில் கலந்துகொண்டு மதிஒளி சரஸ்வதி கவிதைகள் வாசித்தார். ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் தினத்தன்று தனது புத்தகம் ஒன்று வெளியிடப்படுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

மதிஒளி சரஸ்வதி, சிறார்களுக்கான கவிதைகள், சிறுகதைகள், வாழ்க்கை வரலாறு, மகளிருக்கான நூல்கள், ஆரோக்கியம் பற்றிய நூல்கள், அறிவியல் நூல்கள், மொழிபெயர்ப்பு நூல்கள் எனச் சிறார்களுக்காகவும் பெரியவர்களுக்காகவும் 70-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார். இவருடைய நூல்களில் சில ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

மதிஒளி அரிச்சுவடி நூலகம்

அமைப்புப் பணிகள்

மதிஒளி சரஸ்வதி, சிறார்களின் மீதும் பெண்கள் நலத்தின் மீதும், மாற்றுத் திறனாளிகள் மீதும் மிகுந்த அக்கறை கொண்டு செயல்பட்டார். பல்வேறு நலத் திட்டப் பணிகளை முன்னெடுத்தார்.

நந்தலாலா சிறுவர் சங்கம்

மதிஒளி சரஸ்வதி, சிறார்களுக்காக, 1981-ல், மைலாப்பூரில், ‘நந்தலாலா சிறுவர் சங்கம்’ என்ற அமைப்பை ஏற்படுத்தினார். இச்சங்கம் மூலம் சிறார்களுக்கு இந்தியாவின் பண்பாட்டு விழுமியங்களும், ஒழுக்கக் கல்வியும் போதிக்கப்பட்டன.

நந்தலாலா ஆலயம், மைலாப்பூர்
நந்தலாலா ஆலயம்

மதிஒளி சரஸ்வதி, மைலாப்பூர், ரங்கா (டாக்டர் ரெங்காச்சாரி) சாலையில், தனது இல்லத்தில், 1996-ல், கிருஷ்ணருக்கு ஆலயம் ஒன்றை எழுப்பினார். அது ‘நந்தலாலா ஆலயம்’ என அழைக்கப்படுகிறது.

நந்தலாலா ஆன்மிக அறக்கட்டளை

மதிஒளி சரஸ்வதி, நந்தலாலா ஆன்மிக அறக்கட்டளை என்ற அமைப்பை ஏற்படுத்தினார். அதன் மூலம் பல ஆன்மிக நற்பணிகளை முன்னெடுத்தார். பெங்களூரு பசவன்குடி உள்பட பல இடங்களில் இதன் கிளை நிறுவனங்கள் அமைந்துள்ளன.

இவற்றுடன், நந்தலாலா மருத்துவ மையம், நந்தலாலா சேவாசமிதி ட்ரஸ்ட், நந்தலாலா யோக சரஸ் கல்விக் குழுமம், நந்தலாலா கந்தர்வ கான சபா போன்ற பல அமைப்புகளை ஏற்படுத்தி, ஆன்மிக, சமய, மருத்துவ, சமூக நற்பணிகளை மேற்கொண்டார். அமெரிக்காவில், நந்தலாலா மிஷன் என்ற அமைப்பை உருவாக்கி அதன் மூலம் பல நற்பணிகளை முன்னெடுத்தார்.

நூலகம்

மதிஒளி சரஸ்வதி, தான் பிறந்த புதுச்சேரியில், ’மதிஒளி அரிச்சுவடி பொது நூலகம்’ என்பதை உருவாக்கினார். இந்த நூலகத்தில் தரைத்தளத்தில் 10000 நூல்களும் முதல்தளத்தில் சிறார்களுக்கான பிரிவில் 4000 நூல்களும் உள்ளன. புதினங்கள், சிறுகதைகள், ஆன்மிகம், இலக்கியம், இயற்கைசார் மருத்துவம், சமையல், மொழி சார் நூல்கள் மற்றும் பொது வாசிப்பு நூல்கள் என தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளிலும் சேர்த்து இங்கு 15000-க்கும் மேற்பட்ட நூல்கள் இங்கு சேகரிக்கப்பட்டுள்ளன. இந்த நூலகத்தில் சிறார்களுக்கு தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சு மொழிகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. ஆய்வு மாணவர்களுக்கு, போட்டித் தேர்வு எழுதுபவர்களுக்கு உதவும் வகையில் இந்த நூலகம் செயல்படுகிறது.

விருதுகள்

  • மதிஒளி சரஸ்வதி எழுதிய ‘விண் முதல் மண் வரை’ என்ற சிறார் நூலை எழுதியதற்காக, 1991-ம் ஆண்டில், ஏ.வி.எம்.மின் தங்கப்பதக்கம் பெற்றார்.
  • மதிஒளி சரஸ்வதி எழுதிய ‘குறட்பா விருந்து’ என்ற சிறார் நூலுக்கு 1993-ம் ஆண்டின் ’பாரத ஸ்டேட் வங்கி விருது’ கிடைத்தது.
  • 1993-ல் மதிஒளி சரஸ்வதி எழுதிய ‘இணைந்திடுவோம் வாருங்கள்’ என்ற நூல் (இரண்டு தொகுதிகள்) மத்திய அரசின் என்.சி.ஈ.ஆர்.டி. (N.C.E.R.T.) விருது பெற்றன.
  • மதிஒளி சரஸ்வதிக்கு பாண்டிச்சேரி குழந்தை எழுத்தாளர் சங்கம், 1997-ல், ’மழலைக் கவிமாமணி’ என்ற பட்டத்தினை வழங்கிப் பாராட்டியது.
  • காஞ்சி பரமாச்சாரியார் நூற்றாண்டு விழா அறக்கட்டளை, மதிஒளி சரஸ்வதிக்கு 1998-ல் ‘சேவா ரத்னா’ விருது வழங்கிச் சிறப்பித்தது.
  • 2014-ம் ஆண்டில், புதுக்கோட்டை இலக்கியப் பேரவை அமைப்பு, மதிஒளி சரஸ்வதிக்கு, வாழ்நாள் சாதனையாளர் விருதினை வழங்கிப் பாராட்டியது.

மறைவு

மதிஒளி சரஸ்வதி, மே 09, 2018 அன்று, தனது 77 -ம் வயதில் காலமானார்.

ராணிமைந்தன் நூல்

நினைவு

மதிஒளி சரஸ்வதியின் வாழ்க்கையை, ராணிமைந்தன், ’மதிஒளி என்றொரு மந்திரம்' என்ற தலைப்பில் நூலாக எழுதினார். வானதி பதிப்பகம் இதனை வெளியிட்டது.

மதிப்பீடு

மதிஒளி சரஸ்வதி பொது வாசிப்புக்குரிய நூல்களையும், சிறார்களுக்கான நூல்கள் பலவற்றையும் எழுதினார். சமூக சேவகராகவும், ஆன்மிகவாதியும் செயல்பட்டார். காஞ்சிப் பெரியவர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி, மதிஒளி சரஸ்வதியின் உடலில், அம்பாளின் சக்தி குடிகொண்டுள்ளதாகக் கூறியதாக மதிஒளி சரஸ்வதியின் வாழ்க்கைக் குறிப்பு தெரிவிக்கிறது.

மதி ஒளி சரஸ்வதி நூல்கள்

நூல்கள்

  • இன்றே இங்கேயே இப்பொழுதே
  • எண்ணமும் வண்ணமும்
  • சிந்தித்த வேளையில்
  • விதைகள்
  • புத்தகமா இது?
  • தீப வழிபாடு
  • சிந்தை மகிழ ஸ்ரீ ஸரஸ்வதி
  • செல்லப் பிள்ளை
  • புவனா தேடிய புதையல்
  • கூட வாங்க
  • காற்றில் வரும் செய்தி
  • மழைக்குக் காத்திருந்து
  • பேசும் உணர்வுகள்
  • வந்த வலி போன வழி
  • கற்பூரக்கனல்
  • பீல்டுமார்ஷல் கரியப்பா
  • ஒளிவெள்ளம்
  • சொல்லக் கூடாதா?
  • தாக்கம்
  • நின்று நிலை பெறுக

உசாத்துணை


✅Finalised Page