under review

மண்டகப்பட்டு குடைவரைக் கோவில்

From Tamil Wiki
கே.ஆர். ஸ்ரீனிவாசனின் “The Cave Temples of Pallavas” புத்தகத்திலிருந்து

மண்டகப்பட்டு குடைவரைக் கோவில் விழுப்புரம் மாவட்டம் மண்டகப்பட்டு பகுதியிலுள்ள மலையில் அமைந்த பல்லவர் கால குடைவரைக் கோவில். பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்மன் (பொ.யு. 590 - 630) காலத்தில் கட்டப்பட்டது. இக்கோவில் தற்போது இந்தியத் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

பெயர்

மண்டகப்பட்டு குடைவரைக் கோவிலின் முகப்பு

மண்டகப்பட்டு குடைவரைக் கோவில் ’லக்‌ஷிதாயதநம்' என முதலாம் மகேந்திரவர்மனின் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. லக்‌ஷிதாயதநம்-லக்‌ஷிதர்களின் கோவில். லக்‌ஷிதர்கள் என்ற சொல் திரிமூர்த்திகளைக் (பிரம்மா, விஷ்ணு, சிவன்) குறிக்கிறது.

இடம்

கருவறை

மண்டகப்பட்டு குடைவரைக் கோவில் விழுப்புரத்திலிருந்து 22 கிலோமீட்டர் தொலைவில் மண்டகப்பட்டு கிராமத்திலுள்ள மலையின் மேல் அமைந்துள்ளது. இக்கோவில் பல்லவர் ஆட்சிக் காலத்தில் எடுத்தெழுப்பப்பட்ட ஆரம்பக்கட்ட குடைவரைக் கோவில்களில் ஒன்று.

கோவில் அமைப்பு

முகப்பில் உள்ள துவார பாலகர்

மண்டகப்பட்டு பகுதியிலுள்ள மலையை குடைந்து அமைக்கப்பட்டுள்ள இக்குடைவரைக் கோவில் பன்னிரெண்டு அடி வரை பாறையைக் குடைந்து உருவாக்கப்பட்டது.

முகப்பு

மண்டகப்பட்டு குடைவரைக் கோவில் முகப்பில் இரண்டு துவார பாலகர்களும்[1] , நான்கு முழுத் தூண்களும், இரண்டு அரைத் தூண்களும்[2] கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. முகப்பிலுள்ள தூண்களின் வடிவம் பல்லவர் காலத் தூண் அமைப்பான சதுரம்-கட்டு[3] -சதுரம்-போதிகை என்ற அமைப்பில் கட்டப்பட்டுள்ளது[4]. குடைவரைக் கோவிலுக்கு முன்னே அமைக்கப்பட்ட படிகள் சமீபகாலத்தில் கட்டப்பட்டவை.

மண்டபம்

முகப்புத் தூண்களுக்கும், கருவறைக்கும் நடுவே இரண்டு மண்டபங்களும் அதனைப் பிரிக்கும் தூண் வரிசையும் காணப்படுகின்றன. முகப்புத் தூண்களுக்கு அருகே இருக்கும் பகுதியை முகமண்டபம் என்றும், கருவறையின் அருகே இருக்கும் பகுதியை அர்த்த மண்டபம் என்றும் கூறலாம் என பல்லவர் காலத்து குகைக்கோவில்களை ஆய்வு செய்து எழுதிய கே.ஆர். ஸ்ரீனிவாசன் குறிப்பிடுகிறார்.

கருவறை

உள்ளே மண்டபத்தை தாண்டி மூன்று கருவறைகள் காணப்படுகின்றன. இவற்றில் சிலைகளை எடுப்பித்து வழிபாடு நிகழ்ந்ததா எனத் தெரியவில்லை. எனினும் திரிமூர்த்தி (பிரம்மா, விஷ்ணு, சிவன்) சிற்பங்கள் தாங்கிய கருவறைகள் இவை என இங்குள்ள முதலாம் மகேந்திரவர்மனின் பல்லவ கிரந்த கல்வெட்டு குறிப்பு மூலம் அறிய முடிகிறது. கருவறைகளுக்கு இடையேயும் முகப்பில் காணப்படுவது போல் தூண் அமைப்புகள் காணப்படுகின்றன.

சிற்பங்கள்

Mandagapattu4.jpg

துவார பாலகர்கள்

கிழக்குப் பகுதியிலுள்ள துவார பாலகர் இடது கையை தன் கதையின் மீது பல்லவ ஹஸ்தத்தில்[5] அமர்த்தி, வலது கையை இடது பக்கம் கொண்டு வந்து இடது தோள்பட்டையின் மீது விஸ்மய ஹஸ்தம்[6] என்னும் கைமுத்திரையைக் காட்டுகிறார். பார்க்க: கை முத்திரைகள் (சிற்பக்கலை).தலையில் கிரிட மகுடமும், இருபக்கமும் ஜடா பாரமும் கொண்டிருக்கிறார். இரு காதுகளிலும் பத்ர குண்டலமும், கழுத்தில் பாலகர்களின் முகம் கொண்ட ஹாரமும், மணிக்கட்டில் மூன்று பட்டையுடன் கூடிய சூதகமும் அணிந்துள்ளார். இடையில் வஸ்திரத்தை யக்ஞோபவீத பாணியில் (இடது தோள்பட்டையில் பூணூலைப் போன்று) அணிந்துள்ளார். சிறிய வஸ்திரம் கடிபந்த முறையில் இணைக்கப்பட்டுள்ளது. இவை பாலகர்களின் முகம் கொண்ட உதர பந்தத்தால் இணைக்கப்பட்டு இருபுறமும் சிம்ம முகம் கொண்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இரு கால்களும் ஸ்வஸ்திகாசனத்தில் உள்ளன.

மேற்குப் பக்கமுள்ள துவார பாலகர் திரிபங்க நிலையில்(மூன்று இடங்களில் வளைந்த நிலை) தலையில் கிரிடம், மகுடம் ஜடாபாரத்துடன் காட்டப்பட்டுள்ளார். மற்ற துவார பாலகரை விட இவரது கிரீடமும், ஜடாபாரமும் பெரிதாக உள்ளன. கிரிடத்தை சுற்றி நாகங்கள் மாலையைப் போல் அமைந்துள்ளன. வலது கையை இடையில் கடி ஹஸ்தத்திலும்[7], இடது கையை கதையின் மேல் பல்லவ ஹஸ்தத்திலும்[5] அமர்த்தியுள்ளார். கதையின் மேலும் ஒரு நாகம் சுற்றியுள்ளது. நிவித்த பாணியில் (கழுத்தைச் சுற்றி மார்பில் மாலைபோல் அணிவது) இவரின் இடையாடை சுற்றப்பட்டுள்ளது.

இருவருக்கும் தலையில் சூலாயுதம் இல்லை. கோவிலின் மையக் கருவறையிலும் சிற்பங்கள் தற்போது காணப்படவில்லை. பிற்காலப் பல்லவர் தூண்களில் காணப்படும் தரங்க போதிகை போல் அலங்காரங்கள் இல்லாமல் தூண் போதிகை காட்டப்பட்டுள்ளது.

தடாகம்

இக்குடைவரையின் முன்பாக மகேந்திரவர்மன் காலத்தில் அமைக்கப்பெற்ற தடாகம் 'மகேந்திர தடாகம்' என்று அழைக்கப்படுகிறது.

கல்வெட்டு

நன்றி: ப்ரைன் சேம்பர்

வாயில் காப்பாளர்கள் (துவார பாலகர்கள்) அருகே உள்ள தூணில் பல்லவ கிரந்தத்தில் கல்வெட்டு காணப்படுகிறது.

கல்வெட்டு குறிப்புகள்

கல்வெட்டில் ‘ஏதத3னிஷ்டமத்ருமமலோஹமஸுத4ம் விசித்ரசித்தேந நிர்மாபிதந்ருபேணப்3ரஹ்மேஷ்வரவிஷ்ணுலக்‌ஷிதாயதநம்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

விளக்கம்

செங்கல், மரம், உலோகமின்றி பிரம்மா, ஈஸ்வரன், விஷ்ணு என்னும் திருமூர்த்திகளாகிய லக்‌ஷிதாயதநம் என்பவர்களுக்கு விசித்ரசித்தனான மகேந்திரவர்மன் இக்குடைவரைக் கோவிலை எழுப்புகிறேன்.

இதில் 'விசித்ரசித்தன்' என்பது மகேந்திரவர்மனுடைய பட்டப் பெயர்களுள் ஒன்று.

கல்வெட்டு சான்றுகள்

முதலாம் மகேந்திரவர்மனின் கல்வெட்டு காணப்படுவதால் இக்கோவில் பல்லவர் காலத்தில் கட்டி முடிக்கப்பட்ட முதல் குடைவரைக் கோவிலாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

உசாத்துணை

வெளி இணைப்புகள்

அடிக்குறிப்புகள்

  1. பல்லவர் காலத்தின் ஆரம்ப காலத்திய துவார பாலகர்கள் சிற்பங்களுள் ஒன்று
  2. தூண்கள் ஆங்கிலத்தில் Pillars என்றும், அரைத்தூண்கள் Pilasters என்றும் அழைக்கப்படுகிறது
  3. எட்டுப்பட்டைக் கொண்ட நடு பகுதி
  4. ஆரம்ப பல்லவர் குடைவரைக் கோவில்களில் போதிகை எவ்வித அலங்காரங்களும் இல்லாமல் அமைக்கப்பட்டிருக்கும்.
  5. 5.0 5.1 ஐந்து விரல்களை விரித்து நீட்டி உள்ளங்கை உள்முகமாகவும் புறங்கை வெளிமுகமாகவும் மணிக்கட்டிலிருந்து இலை போல் கீழ் நோக்கி மடிந்திருக்கும் கையமைதி பல்லவ ஹஸ்தம்.
  6. அலபத்ம முத்திரை செங்குத்தாக அமைய, புறங்கை தெரியும் வண்ணம் விரல்கள் பிரிந்து வியப்பைக் காட்டுவது விஸ்மய ஹஸ்தம்.
  7. கட்டை விரலை இடுப்பில் ஊன்றி, மற்ற விரல்கள் இடுப்பில் படிந்து, சிறு விரலும் சுட்டு விரலும் வெளிக்கிளம்புவதுபோல் அமையும் கைமுத்திரை.


✅Finalised Page